You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி. ஜெயக்குமார் திடீர் கைது: 10 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு - என்ன நடந்தது?
சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டுங்கள் என்றும் கூறிய ஜெயக்குமார் பின்னர் அந்த நபரிடம் சட்டையை கழற்றுமாறு கடுமையாக பேசும் காட்சி இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரை அரை நிர்வாணமாக ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த நபரிடம் ஜெயக்குமார், "வேறொரு வார்டில் இருந்து வந்த உனக்கு இங்கு என்ன வேலை? திமுகவில் எத்தனை கள்ள ஓட்டு போட்டாய்?" என்று கேட்கும் காட்சி காணொளியில் உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் பகுதி, பகுதியாக ஊடகங்களில் வெளியாயின. அதே சமயம், ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற செயலை திமுகவினர் கடுமையாக கண்டித்தனர்.
இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையை தூண்டுதல், கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்பட 10 பிரிவுகளில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, தன்னை காவல்துறையினர் கைது செய்ய வந்ததை அறிந்த ஜெயக்குமார், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். அதில், கள்ள ஓட்டு போட வந்த நபரை பிடித்துக் கொடுத்த என் மீதே வழக்கா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜெயக்குமாரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் இரவு 10 மணி வரையிலும் அந்த காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படவில்லை.
இந்த நிலையில், ஜெயக்குமார் கைது பற்றிய தகவலறிந்த அதிமுகவினர் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக பெருமளவில் திரண்டனர். அங்கு அவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி அதிமுக எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் மேலிடத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சலசலப்புகளை கண்டு அஞ்சும் இயக்கம் அதிமுக கிடையாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை, அதிமுகவின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டபோது அவர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரை கைது செய்ய சுமார் 40 பேர் கொண்ட காவல்துறையினர் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்ததாகவும் இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் ஜெயவர்தன் குற்றம்சாட்டினார்.
இதேபோல, தனது கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக ஜெயக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி தெரிவித்தார். தனது கணவரை தனியாக அழைத்துச் சென்றிருப்பதால் அவரை என்ன செய்வார்கள் என்ற அச்சத்தில் தாம் இருப்பதாக ஜெயக்குமாரி கூறினார்.
இந்த நிலையில், தனது தந்தையை காவல்துறையினர் கைது செய்யப்பட்ட காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் எம்.பி ஜெயவர்தன் பகிர்ந்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் தன்னை தாக்கியதாக ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதனும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் திமுகவைச் சேர்ந்த சிலர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. அதற்கு முந்தைய நாள் இரவில் எதிர்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
பிற செய்திகள்:
- 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்
- ஆடுகளை வரைவதில் அலாதி இன்பம்: ஓவியர் என்.எஸ்.மனோகரன்
- 'அரை நிர்வாண தாக்குதல்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோவால் சர்ச்சை
- யோகி ஆதித்யநாத் அரசு விவசாயிகளுக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்