You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மஹுவா மொய்த்ரா: “எதிர்காலம் குறித்து அச்சப்படுவதால் இந்திய வரலாற்றை மாற்ற நினைக்கிறது பாஜக அரசு"
இன்று (04-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்காலம் குறித்து அச்சப்படுவதன் வெளிப்பாடாகவே இந்திய வரலாற்றை மாற்ற நினைப்பதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவையில் பேசிய மஹுவா மொய்த்ரா, "இந்த அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. இந்த அரசு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுகிறது. ஆனால், நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை.
குடியரசுத் தலைவர் தனது உரையின் ஆரம்பத்தில், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசினார். ஆனால், இது வெறும் உதட்டுப் பேச்சு மட்டுமே. உண்மையில் இந்தியாவின் கடந்த கால கண்ணியம், பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை இந்த அரசாங்கத்தை மிகவும் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. இதனால் வரலாறுகளை திரித்து வருகிறது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான் உள்துறை அமைச்சரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் இன்று பாஜக அரசு கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது" என்று பேசினார் என விவரிக்கிறது அச்செய்தி.
சிறுக சிறுக சேமித்த பணத்தில் விமானத்தில் பயணித்த மகளிர் குழுவினர்
சிறுக சிறுக சேமித்த பணத்தில் மகளிர் குழுவினர் விமானத்தில் பயணம் செய்து, தங்கள் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்தில் 43 மகளிர் குழுக்கள் இயங்குகின்றன.
இந்த குழுக்கள் கூட்டமைப்பின் மூலம் வங்கிகளில் தங்கள் குடும்ப செலவுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்துவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், ஆண்டுதோறும் தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பயனுள்ள பொருட்களை வாங்கி சிறுசேமிப்பை ஊக்குவித்து வந்தனர்.
அவ்வாறு இந்த ஆண்டு சிறுக சிறுக சேமித்த பணத்தில் சுற்றுலா செல்ல முடிவு செய்து இதுவரை மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யாத பெண்கள் சென்னைக்கு விமானத்தில் செல்வது என்று தீர்மானித்தனர்.
அதன்படி, 3 குழுக்களை சேர்ந்த 30 வயது முதல் 60 வயது வரை உள்ள 32 பெண்கள், மகளிர் குழுக்கள் கூட்டமைப்பின் தலைவி மெர்சி தலைமையில் நேற்று கழுநீர்குளம் மற்றும் கல்லூத்தில் இருந்து வேன்கள் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றில் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் நினைவிடம், மெரினா கடற்கரை ஆகிய இடங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
வெறுப்பூட்டும் வகையில் பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்
மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும் பேசுபவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆன்மிகத் தலைவர்களின் மாநாடான தர்ம சன்சத் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய சிலர் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய பேச்சுகளைக் கண்டிப்பதாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியது:
"வெறுப்பு அரசியல் என்பது ஊழலைப் போன்றது. வெறுப்பை ஏற்படுத்துவதில் இருந்தும் ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்தைத் தூண்டிவிடுவதில் இருந்தும் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் விலகி இருக்க வேண்டும்.
எந்த ஒரு சமூகம், சாதி அல்லது பிரிவுக்கு எதிராகவும் வெறுப்பைத்தூண்டும் கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக நாட்டு நலனையும் மக்கள் நலனையும் கருதி சகோதரத்துவம் மற்றும் வளர்ச்சி அரசியலை தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்திலும் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலும் வெறுப்பூட்டும் வகையில் பேசப்பட்டது குறித்துக் கேட்கிறீர்கள்.
எந்த வகையிலான வெறுப்பூட்டும் பேச்சும் கண்டிக்கத்தக்கதுதான். அனைத்துவித வெறுப்பூட்டும் பேச்சில் ஈடுபடுபவர்களும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு தரப்படக் கூடாது" என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் மதக் கலவரங்கள் நடைபெறவில்லை: யோகி
கடந்த 5 ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் மதக் கலவரங்கள் நடைபெறவில்லை என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதாக, 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: "உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆண்டு அரசுகள் மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மேலும் தற்போதைய பாஜக ஆட்சியானது மாநிலத்தின் பொருளாதாரத்தை 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் மதக்கலவரங்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் இல்லை .
1947 முதல் 2017 வரை உ.பி.யின் பொருளாதாரம் 6வது, 7வது இடத்தில் (நாட்டில்) இருந்தது. 70 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஆனால் வெறும் 5 ஆண்டுகளில், உ.பி.யின் பொருளாதாரம் 2-வது இடத்தை எட்டுவதற்கு நாங்கள் வெற்றிகரமாக உதவியுள்ளோம்.
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், கூட்டு ரோந்து பணியை தொடங்க பெண் போலீஸாரை நியமித்த முதல் மாநிலம் உ.பி. கடந்த 5 ஆண்டுகளில் கலவரங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லாத முதல் மாநிலம் இதுவாகும். மேலும், வழக்கு விசாரணையில் விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் மாநிலம் இதுவாகும்.
கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் எங்கள் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- சிரியாவில் ஐ.எஸ் தலைவரை அழிக்க பைடன் வகுத்த வியூகம் - புதிய தகவல்கள்
- நீட் விலக்கு மசோதா: திருப்பி அனுப்பிய ஆளுநர் - இதுவரை நடந்தது என்ன?
- ஒமிக்ரான் பிஏ.2: இந்த திரிபு பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தமிழர்; U19 அணியில் நிவேதன் ராதாகிருஷ்ணன்
- இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? சாதாரண பாஸ்போர்ட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
- "இந்திய மீனவர்கள் ஊடுருவினால் இலங்கை மீனவர்கள் தாக்குவார்கள்" - டக்ளஸ் தேவானந்தா பேட்டியால் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: