You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யதி நரசிங்கானந்த்: பெண்கள் அவமதிப்பு - பிபிசி குழுவுடன் மோதல் - இப்போது வெறுப்பு பேச்சு வழக்கில் கைது
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சைக்குரிய மதத் தலைவர் யதி நரசிங்கானந்தை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஹரித்வாரில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நரசிங்கானந்த் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஹரித்வாரில் சனிக்கிழமை பிபிசியிடம் பேசியிருந்தார், ஆனால் அந்த நேர்காணலில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கோபமடைந்தார்.
அதன் பிறகு பிபிசி குழுவிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் அவருக்கு எதிராக மற்றொரு முதல் தகவல் அறிக்கையம் பதிவு செய்யப்பட்டது.
ஹரித்துவாரில் நடைபெற்ற 'தர்ம சன்சத்' நிகழ்ச்சியில் யதி நரசிங்கானந்த் ஆத்திரமூட்டும் வகையில் பேசிய காணொளி வைரலானது. இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், ஹரித்வாரின் கோட்வாலி காவல்துறையினர், சர்வானந்த் காட் எந்ற பகுதியில் யதி நரசிங்கானந்தை கைது செய்தனர். அப்போது ஜிதேந்திர நாராயண் தியாகி என்கிற வாசிம் ரிஸ்வியை விடுவிக்கக் கோரி யதி நரசிங்கானந்த் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
உத்தர பிரதேசத்தின் மத்திய ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயண் தியாகி. இவர் ஏற்கெகனவே இதே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்டிருந்த வழக்கில் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வெறுப்புணர்வு பேச்சு நடந்ததாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத்தில் நடந்த விஷயம் குறித்து தன்னிச்சையான விசாரணை கோரி பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ,மூத்த பத்திரிக்கையாளர் குர்பான் அலி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு உத்தராகண்ட் மற்றும் டெல்லி காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு இந்திய தலைமை நீதிபதி என்வி ராமண்ணா, நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இத்தகைய சூழலில் கடந்த வார சம்பவத்தின் தொடர்ச்சியாக பிபிசி செய்திக்குழு அளித்த புகாரின் பேரில் உள்ளூர் காவல்துறை யதி நரசிங்கானந்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
யதி நரசிங்கானந்தின் சம்மதத்துடன் நேரத்தை நிர்ணயித்த பிறகு அவரை பேட்டி காண பிபிசி குழு ஹரித்வாரில் உள்ள சர்வானந்த் காட் சென்றடைந்தது.ஹரித்வாரில் நடைபெற்ற மதவாத மன்றம் எனப்படும் தர்ம சன்சத் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்கு அவர் மீது தொடரப்பட்டிருந்ததால், நேர்காணலின்போது அது பற்றி அவரிடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதற்கு உரிய பதிலளிக்காமல் அவர் கோபம் அடைந்ததால் நேர்காணல் செய்த செய்தியாளர் அவரை சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் அவர் மைக்கை தனது கோட்டில் வைத்து கழற்றி எறிந்துவிட்டு பேசத் தொடங்கினார்.
யதி நரசிங்கானந்த் மைக்கை கழற்றியதும், அங்கிருந்த அவரதூ ஆதரவாளர்கள் பிபிசி குழுவை அத்துமீறித் தள்ளவும், மிரட்டவும், வலுக்கட்டாயமாக அவர்களை சில மணி நேரம் தடுத்து வைத்து சிறைப்பிடித்த சூழலை ஏற்படுத்தினர்.
பிபிசி செய்தியாளர்கள், அந்த நேர்காணல் காணொளியை ஒளிபரப்பக் கூடாது என்று மிரட்டவும் செய்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ பகுதிக்கு காவல்துறையினர் வந்த நிலையில், பிபிசி குழு அளித்த எழுத்துபூர்வ புகாரின் பேரில் யதி நரசிங்கானந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது--341 (சட்டவிரோதமாக வற்புறுத்தல்), 352 (ஆத்திரமூட்டல் இல்லாமல் தாக்குதல்), 504 (அவமதிப்பு, துஷ்பிரயோகம், அமைதி மீறல்) மற்றும் 506 (அச்சுறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல பெண்ணை இழிவுபடுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நிலுவையில் உள்ளது.
உத்தர பிரதேச காவல்துறை நரசிங்கானந்திற்கு எதிராக பிரிவு 505-1(C) (தூண்டுதல் நோக்கம்), 509 (பெண்ணை அவமானப்படுத்துதல்), 504 (தூண்டுதல் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் மூன்று வழக்குகளை பதிவு செய்தது.இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் ஹரித்வாரில் நரசிங்கானந்த் ஏற்பாடு செய்த 'தர்ம சன்சத்' நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சையில் சிக்கினார் யதி நரசிங்கானந்த்.
சில மத ரீதியிலான கருத்துகளையும் அவர் வெளியிட்டு வெறுப்புணர்வைத் தூண்டியதாகவும் கூறப்பட்டது.
யதி நரசிங்கானந்தா யார்?
ஹரித்வாரில் நடைபெற்ற மத மன்றம் கூட்டத்தில் பேசும்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதில் பேசியதால் பலராலும் கவனிக்கப்படும் நபரானார் யதி நரசிங்கானந்த்.
இவர் கடந்த காலங்களில் தமது சர்ச்சை அறிக்கைகள் மற்றும் செயல்களால் அடிக்கடி ஊடக வெளிச்சத்தில் சிக்கியவர்.முகமது நபிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மஹந்த் யதி நரசிங்கானந்த் காஜியாபாத்தின் டாஸ்னாவில் உள்ள அதே தேவி கோயிலின் மஹந்த் ஆவார், அங்கு கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி குழாயில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக முஸ்லிம் குழந்தை ஆசிஃப் கொடூரமாக தாக்கப்பட்டார். அந்த காணொளி வைரலானது.இந்த விவகாரத்தில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று மஹந்த் யதி நரசிங்கானந்த் அப்போது கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
- மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் இடைநீக்கம்
- கொரோனா வைரசின் 'கவலைக்குரிய' திரிபுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்
- பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்
- கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்கள் கிம் கர்தாஷியன் மீது வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்