இந்தியர்கள் உடலில் சர்க்கரை நோய் ஆபத்தை அதிகரிக்கும் ஜீன்: கண்டுபிடித்த சென்னை ஐஐடி

(இந்திய நாளேடுகளில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்).

15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலதுறை, பல கல்வி நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க நீரிழிவு சங்கம் வெளியிடும் டயபட்டீஸ் என்ற சஞ்சிகையில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதப் பதிப்பில் அட்டைப்படக் கட்டுரையாக இதனை வெளியிடவுள்ளது என்றும் 'தி ஹிந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யின் பூபத் அன்ட் ஜோதி மேத்தா ஸ்கூல் ஆஃப் பயோ சயன்சஸ் மையத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் நிதீஷ் ஆர்.மகாபத்ரா இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தினார்.

இதய மற்றும் வளர்சிதை நோய்களுக்குக் காரணமாகும் முக்கிய மரபணு இடர்ப்பாட்டுக் காரணியை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளதாக மகாபத்ரா கூறினார்.

இந்த ஜீன் திரிபை சுமக்கும் நபர்களுக்கு ஏற்படும் கூடுதல் இடர்பாட்டுக்கான மூலக்கூறு அடிப்படைகளையும் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறும் இவர், இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்று அவர் கூறினார் என்கிறது தி ஹிந்து செய்தி.

"இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும்" என்று அவர் கூறினார் என்கிறது அந்த செய்தி.

டிவிட்டரில் ஆளுநரை பிளாக் செய்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தான்கருக்கும் இடையே நடக்கும் பகிரங்க சொற்போர் திங்கள்கிழமை டிவிட்டர் சமூக ஊடகத்தில் புதிய பரிணாமத்தை அடைந்தது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா, ஆளுநர் டிவிட்டரில் வெளியிட்டுவரும் அறமற்ற, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான கருத்துகளால் ஆளுநரை டிவிட்டரில் பிளாக் செய்யும் நிர்பந்தத்துக்கு தாம் தள்ளப்பட்டதாக கூறினார்.

ஆளுநர் 'சூப்பர் கார்டு' (பெரிய காவலாளி) போல நடந்துகொள்வதாகவும், அரசு அதிகாரிகளை தமது வேலைக்காரர்களைப் போல நடத்துவதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.

"இதைச் சொல்வதற்காக நான் வருந்துகிறேன். தினமும் ஆளுநர் என்னையும் எங்கள் அலுவலர்களையும் அவதூறு செய்கிறார். அறமற்ற, அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தி இந்த அவதூறுகளைச் செய்கிறார். எங்களை ஏதோ வேலைக்காரர்கள் போலவும், கொத்தடிமைகளைப் போலவும் கருதிக்கொண்டு உத்தரவுகளைத் தருகிறார். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கொத்தடிமை. நியமிக்கப்பட்ட ஒருவர் சூப்பர் கார்டு. ஒவ்வொரு நாளும் அவர் ட்வீட்டுகளைப் பார்த்து எரிச்சலடைந்தேன்" என்று அவர் கூறினார்.

இதையடுத்து, மம்தாவின் திரிணமூல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆளுநரை பிளாக் செய்தனர்.

சிபிஐ முதல் அமலாக்கத் துறை வரை, சுங்கத் துறை முதல் போலீஸ் கமிஷனர் வரை, டிஜிபி முதல் தலைமைச் செயலாளர் வரை, மாவட்ட ஆட்சியர் முதல் எஸ்.பி. வரை அனைவரையும் ஆளுநர் தான்கர் மிரட்டுவதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பிரதமருக்கு நான்கு முறை கடிதம் எழுதியிருப்பதாகவும் மம்தா குறிப்பிட்டார். பெகாசஸ் உளவு செயலியைப் பயன்படுத்தி எல்லோரையும் தான்கர் கண்காணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து ஜனநாயக விழுமியங்களைப் பற்றிய கருத்துகளைக் கொண்ட பல ட்வீட்டுகளை போட்டார் ஆளுநர் தான்கர்.

அமலாக்கத்துறை முன்னாள் இணை இயக்குனர் பாஜக சார்பில் போட்டி?

அமலாக்கத்துறையின் இணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜேஷ்வர் சிங். ஐபிஎஸ் அதிகாரியான இவர் 10 ஆண்டுகள் உத்தரபிரதேச காவல்துறையிலும், 14 ஆண்டுகள் அமலாக்கத்துறையிலும் பணியாற்றியுள்ளார். இவர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளாரா என்ற கேள்விக் குறியோடு தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் இடம் பெற்ற தகவல்: அமலாக்கத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து ராஜேஷ்வர் சிங் சமீபத்தில் விலகினார். மேலும், தனக்கு விருப்ப ஓய்வு வழங்கும்படி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து ராஜேஷ்வர் சிங்கிற்கு விருப்ப ஓய்வு அளித்து பணியில் இருந்து அவரை விடுவித்தது.

இந்நிலையில், ராஜேஷ்வர் சிங் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அவர் பாஜக கட்சியில் விரைவில் இணைய உள்ளார்.

பாஜகவில் இணைய உள்ள ராஜேஷ்வர் சிங் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறையில் பணியாற்றியபோது ராஜேஷ்வர் சிங், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, அகஸ்டாவெஸ்ட்லென்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது அந்தச் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: