You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்: மருத்துவ படிப்பு மறுக்கப்பட்டது ஏன்?
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் 61 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், மருத்துவக் கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
` அவர் பிளஸ் 2 படிக்காமல் பி.யு.சி படித்திருந்தது கலந்தாய்வின்போது தெரியவந்தது. மருத்துவப் படிப்புக்கு பி.யு.சி படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பிளஸ் 2 தேர்ச்சிதான் அவசியம்' என்கிறார் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 437 இடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கும் 97 இடங்கள் பல் மருத்துவப் படிப்புக்கும் ஒதுக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் நேற்று நடந்த கலந்தாய்வில் 716 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான சிவப்பிரகாசம் என்பவரும் ஒருவர். இவர் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார்.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வினை சிவப்பிரகாசம் எழுதியுள்ளார். முதல் முறையாக அவர் எழுதிய இந்தத் தேர்வில் 249 மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி தரவரிசைப் பட்டியலிலும் இடம்பிடித்தார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் நீட் தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வில் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், `மருத்துவக் கல்விக்கு என வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி சிவப்பிரகாசத்தை தேர்வு செய்ய முடியாது' என கலந்தாய்வு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
``என்ன நடந்தது?'' என சிவப்பிரகாசத்திடம் பிபிசி தமிழ் சார்பில் நேரில் சந்தித்துக் கேட்டோம்,`` நான் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா பள்ளியில் படித்தேன். பின்னர், பியுசி, பி.எஸ்.சி, எம்.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளை முடித்தேன். விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். என்னுடைய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்கள். அவர்களின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினேன். அப்போதுதான் நாமும் தேர்வு எழுதினால் என்ன என்ற யோசனை தோன்றியது.
அதற்கேற்ப, 2019 ஆம் ஆண்டு ஒரிஷாவில் ஜெய்கிஷோர் பிரதான் என்ற ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் இரண்டாவது ஆண்டாக நீட் தேர்வுக்குப் படித்து வருவதை அறிந்தேன். அதுபோல நாமும் முயற்சி செய்யலாம் என நினைத்துத்தான் தேர்வு எழுதினேன். முதல் முறையிலேயே வெற்றி பெற்றேன். இதற்காக நான் சிறப்பு பயிற்சி எதையும் எடுக்கவில்லை. பாட அறிவை வைத்தே தேர்வு எழுதினேன். நான் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றதால் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்பதால் சென்னை வந்தேன்'' என்கிறார்.
மேலும், `` நான் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள தகவலை அறிந்த உறவினர்கள் சிலர், `அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த நான் மருத்துவப் படிப்பில் மாணவர்களுக்குத் தடையாக நிற்கலாமா?' எனக் கேட்டனர். எனவே, கலந்தாய்வின்போது இடம் வேண்டாம் எனக் கூறிவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், கலந்தாய்வை நடத்திய அதிகாரிகளோ, `10ம் ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு (10+2+3) ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்குக் கல்வித் தகுதியில்லை, பி.யு.சி படிப்பின்படி 11+1+3 என்ற அடிப்படையிலேயே கல்வித் தகுதி உள்ளது. உங்களுக்கு இடம் வழங்க வாய்ப்பில்லை' எனத் தெரிவித்தனர். நானும் கலந்தாய்வில் இருந்து வெளியேறுவதாகக் கூறிவிட்டு வந்துவிட்டேன். தவிர, அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த நான் மாணவர்களுக்கான இடத்தில் போட்டியிடுவது குற்ற உணர்ச்சியைத் தந்தது'' என்கிறார்.
``ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வு தொடர்பான சர்ச்சை இருந்து கொண்டேயிருக்கிறது. அவ்வளவு கடினமானதா?'' என்றோம். `` உயிரியல் பாடத்தை முழுமையாக படித்துவிட்டாலே போதும். நல்ல மதிப்பெண் வாங்கிவிடலாம். வேதியியலில் 160 மதிப்பெண் உள்ளது. இயற்பியலிலும் இதே அளவு மதிப்பெண் உள்ளது. இதில் கொஞ்சம் ஆர்வத்தைச் செலுத்தி படித்தால் போதும். உயிரியல் மட்டும் முழுமையாக படித்தாலே அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றுவிடலாம். நான் உயிரியல் பாடத்தை மட்டுமே முழுமையாக படித்திருந்தேன். இயற்பியல், வேதியியலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய பாடத்தில் உறுதியாக இருந்தேன். இதை மட்டும் வைத்துக் கொண்டு பொதுக் கலந்தாய்வில் இடம் பெற முடியாது'' என்கிறார்.
``கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்களே?'' என்றோம். `` அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொருளாதார பின்னணி இல்லை. அவர்களால் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாது. அந்த மாணவர்களால் பணம் கட்ட முடியாது. நீட் தேர்வு மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. சிவில் சர்வீஸ் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதலாம். நீட் தேர்வுக்காக நான் தனியாக எந்தப் பயிற்சிகளையும் எடுக்கவில்லை. மாணவர்களுக்கு ஆலோசனைகளை மட்டும் வழங்கினேன். என்னுடைய மாணவர்கள் 2 பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் இணைந்துள்ளனர்.
மேலும், பாடத்திட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்களை உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் செய்துள்ளார். என்.சி.இ.ஆர்.டியைவிடவும் அதிக பாடங்களை வைத்துள்ளனர். இதைப் படித்தாலே 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் பிடித்துவிடலாம். நான் ஆசிரியராக பணிபுரிந்ததால் பாடத்திட்டம் எளிதாக இருந்தது. கிராமப்புற மாணவர்களும் மாநிலப் பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்தாலே போதும். பயிற்சி மையங்களுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. வரும் காலங்களில் மாணவர்களுக்கு தேர்வு தொடர்பாக ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளேன்'' என்கிறார்.
``மருத்துவக் கலந்தாய்வில் சிவப்பிரகாசம் நிராகரிக்கப்பட்டது ஏன்?'' என தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் கலந்தாய்வில் பங்கேற்க வந்தார். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடக்கிறது. அவர் பிளஸ் 2 படிக்கவில்லை. பி.யு.சிதான் படித்திருந்தார். அதனுடைய மதிப்பெண் முறை என்பது வேறு. மருத்துவப் படிப்புக்கு அதனை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பிளஸ் 2 படிப்புதான் இளநிலை மருத்துவப் படிப்புக்கு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்.
``நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே இதையெல்லாம் சரிபார்க்க மாட்டார்களா?'' என்றோம். `` ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என 5 பாடங்களைக் குறிப்பிட்டுவிடுவார்கள். இதனால் மதிப்பெண்ணும் கிடைத்துவிடுகிறது. சான்றிதழ்களும் ஆன்லைனில் வருகின்றன. கலந்தாய்வின்போதுதான் இவை தெரியவரும். தவிர, நீட் தேர்வுக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை'' என்கிறார்.
பிற செய்திகள்:
- பதற்றத்தை உருவாக்காதீர்கள்: மேற்கு நாடுகளை கேட்கும் யுக்ரேன் அதிபர்
- அவதூறுகள் மூலம் பாலிவுட் மீது வெறுப்பை கக்கும் யூ-டியூபர்கள்: பிபிசி ஆய்வு செய்தி
- பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்?
- கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
- கடல் சுமந்த சிறுமியின் கடிதம்: 8 வயதில் மிதக்க விட்டு 25இல் கண்டுபிடித்த அதிசயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: