கடலூர் கட்டட சம்பவம்: "பலி நடந்தால்தான் நடவடிக்கையா?" - கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடலூர் அருகே பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் கட்டடம் இடிந்த சம்பவத்தைக் கடந்து இனி மாநிலத்தில் அரசு அல்லது அரசு சார்ந்துள்ள பயன்பாட்டில் இல்லாத அலுவலகங்கள், கட்டடங்கள், பள்ளிகள், நிவாரண வீடுகள் உள்ளிட்டவற்றின் ஸ்திரத்தன்மையை முறையாக ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடக்கு ராமாபுரத்தை அடுத்த வண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாழடைந்த கட்டடம் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டடத்தின் சுவர் அங்கு அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய மூன்று சிறுவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால், இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பின்னர் தெரிய வந்தது. மேலும் காயங்களுடன் உயிருக்கு போராடிய மூன்றாவது சிறுவனை மீட்டு கடலூர் தலைமை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் காவல்துறையினர் சேர்த்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இடிந்த கட்டடம் 2013ஆம் ஆண்டில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்விற்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக கட்டப்பட்டது. ஆனால், நகர் பகுதியில் இருந்து மிக தொலைவிலிருந்த காரணத்தால் இலங்கை தமிழர்கள் அங்கு குடியேற மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

கடந்த 9 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த கட்டடம் பாழடைந்து காணப்பட்டது.
இத்தகைய சூழலில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியான சிறார்கள் சம்பவம் குறித்து திருப்பாப்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த காவல் நிலைய ஆய்வாளர் கவிதா பிபிசி தமிழிடம் கூறுகையில்," வண்டி குப்பம் சமத்துவபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 130 வீடுகள் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் எஸ்.புதூரைச் சேர்ந்த மாணிக்கவேல், தணிகாச்சலம், மற்றும் தெய்வசிகாமணி இவர்களுடயை பிள்ளைகளான மூவரும் சேதமடைந்த கட்டடத்திற்குள் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது சுவர் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தணிகாச்சலத்தின் மகன் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

"சம்பந்தப்பட்ட சிறுவர்கள் அங்கே சென்றதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவர் குணம் அடைந்த பிறகே அவரும் மற்ற சிறார்களும் அங்கு ஏன் சென்றார்கள் என தெரியவரும்," என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
சம்பவ காட்சியை நேரில் பார்த்த வண்டிப் பாளையத்தை பாலாஜி "கட்டட சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு எங்கள் பகுதியை சேர்ந்த அனைவரும் அருகே சென்று பார்த்தோம். ஒரு சிறுவனின் கை மட்டுமே வெளியே தெரிந்தது. உடனடியாக அவனை இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய மற்ற இரு சிறார்களை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இடிபாடுகளை மீட்டு தீயணைப்புத் துறையினர் மீட்டனர் என்றார்.
சிறுவர்கள் மூவரும் வெள்ளங்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர். ஏழ்மையான குடும்ப பின்புலத்தை சேர்ந்த இந்த மூவரது பெற்றோரும் கூலி தொழிலுக்கு சென்று இவர்களை வளர்த்து வந்ததாக தெரிய வந்துள்ளது.
முதல்வர் இரங்கல்
சிறுவர்களின் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்த சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த சமூக செயல்பாட்டாளரும் வெண்புறா பொது நல பேரவை தலைவருமான குமார் கேட்பாரற்று கிடக்கும் இதுபோன்ற கட்டடங்களை அரசு தலையிட்டு அவற்றின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"ஒவ்வொரு முறை இதுபோல விபத்து நடைபெறும் போது தான் அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறது. போர்வெல் குழிக்குள் குழந்தை விழுந்து இறந்து பிறகு தான் போர்வெல் எங்கெங்கு இருப்பதை கணக்கெடுத்து, பாதுகாப்பற்ற முறையிலிருந்த போர்வெல்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமீப காலமாக பெருமழை காலத்திற்கு பிறகு பள்ளி கட்டடங்கள் மற்றும் பள்ளி கழிவறைகள் இடிந்து விழுவதை பார்த்தோம். பிறகு அதற்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. இப்படி ஒவ்வொரு முறையும் விபத்து நடைபெறுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யவேண்டும்," என்கிறார் குமார்.
பயன்பாட்டில் இல்லாத அரசு அல்லது அரசு சார்ந்துள்ள பயன்பாட்டில் இல்லாத அலுவலகங்கள், கட்டடங்கள், பள்ளிகள், நிவாரண வீடுகள் உள்ளிட்டவற்றின் ஸ்திரத்தன்மையை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை ஆய்வு செய்யும் கட்டடங்களில் ஸ்திரத்தன்மை இருந்தால் அவற்றை முறையாக சீர் செய்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். அவை வலுவிழந்து இருந்தால் அந்த கட்டடத்தை முழுமையாக பாதுக்காப்பான முறையில் இடித்து யாரும் உள்ளே சென்று பயன்படுத்தாத வகையில் முறைப்படுத்த வேண்டும்," என்கிறார் அவர்.
"இதை போர்க்கால நடவடிக்கையில் அரசு எந்திரங்கள் என்று சொல்லக்கூடிய அரசு அதிகாரிகளான உள்ளாட்சித் துறை, ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம பஞ்சாயத்து செயலர்கள், வருவாய் துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என இவர்கள் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் பாதிக்கப்பட்ட செயல்படாத பகுதிகள் பற்றிய தகவலை திரட்டி உயிரிழப்பை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும்," என்கிறார் குமார்.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












