இந்திய குடியரசு தினம்: கண்கவர் அணிவகுப்புகள், சாகசங்கள் - புகைப்படத்தொகுப்பு

இந்தியாவின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் சில புகைப்படங்களை இங்கு காணலாம்.

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா டெல்லியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் பிரதமர் மோதி மற்றும் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களின் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

விழாவில் பாதுகாப்பு படைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விமானப்படையின் 75 போர் விமானங்கள் முதல் முறையாக வானில் சாகசத்தில் ஈடுபட்டன.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், பஞ்சாப், கோவா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. இந்த அலங்கார ஊர்திகள் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டதாக இருந்தன.

குறிப்பாக, சுதந்திர போராட்டத்தில் பஞ்சாபின் பங்களிப்பை' எடுத்துச் சொல்லும் வகையில், பகத் சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் சிலையுடனும், லாலா லஜ்பதி ராய் மற்றும் உத்தம் சிங் உள்ளிட்டோரையும் சித்தரிக்கும் ஊர்தி இடம் பெற்றது.

இதேபோல், உத்தரபிரதேசத்தில் ஒரு மாவட்டம், ஒரு தொழில் என்பதை சொல்லும் வகையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் ஊர்தி இடம்பெற்றது.

ஹரியானா மாநிலம் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவதை எடுத்துச் சொல்லும் வகையில் விளையாட்டு வீரர்கள் கொண்ட ஊர்தி சென்றது.

டோக்யோ ஒலிம்பிக் 2020ல் இந்தியா வென்ற 7 பதக்கங்களில், 4 பதக்கங்களையும் பாராலிம்பிக்ஸ் 2020ல், அந்த நாடு வென்ற 19 பதக்கங்களில், 6 பதக்கங்களையும் ஹரியானா வீரர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் போராட்டம். கோவா மாநில மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட ஊர்திகள் சென்றன.

மத்திய துறைகளின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.

பாதுகாப்புத்துறையின் வலிமையை சொல்லும் வகையிலான அணிவகுப்பில் தமிழ்நாட்டில் ஆவடி படைக்கலத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஆர்ஜுன் டாங்கியின் அணிவகுப்பு இடம் பெற்றிருந்தது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு விருந்தினர்கள் வருகை ரத்து செய்யப்பட்டிருந்தது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: