வெவ்வேறு அடையாள அட்டையை வைத்து 11 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர் - அதிகாரிகள் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தனக்கு 11 முறை கோவிட் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியதால், மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓரை கிராமத்தில் பிரம்மதேவ் மண்டல் வசித்து வருகிறார். உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12-வது முறையாக ஊசி போடப்படுவதற்கு முன்பு அவர் பிடிக்கப்பட்டார். சுகாதார ஊழியர்களை ஏமாற்றுவதற்காக அவர் தனது நெருங்கிய உறவினர்களுடைய வெவ்வேறு அடையாள அட்டைகள் மற்றும் கைபேசி எண்களைப் பயன்படுத்தியுள்ளார்.
அஞ்சல் துறையின் ஓய்வு பெற்ற ஊழியர் எனக் கூறிக்கொள்ளும் அவருடைய கூற்றுப்படி, பிப்ரவரி 13,2021 அன்று அவருக்கு முதல் டோஸ் ஊசி போடப்பட்டது. அதன்பிறகு, அவர் மார்ச், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா ஒரு டோஸ் எடுத்துக்கொண்டார்.
செப்டம்பரில் அவர் தன்னுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி 3 டோஸ்களைப் போட்டுக்கொண்டார். டிசம்பர் 30, 2021-க்குள் அவர் 11 டோஸ்களைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
உண்மையைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாதேபுரா சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அம்ரேந்திர பிரதா ஷாஹி கூறியுள்ளார். அவரால் எப்படி இவ்வளவு டோஸ்களைப் பெறமுடிந்தது என்று விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று மேலும் விவரிக்கிறது அச்செய்தி.
கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு நடக்குமா, நடக்காதா?

பட மூலாதாரம், Getty Images
கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு பருவத் தேர்வுகள் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அளித்துள்ள விளக்கம் தினமணி நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர் கல்லூரியில் புதிதாக இளநிலை புள்ளியியல், வணிகவியலில் கணக்கியல் மற்றும் நிதி, இளநிலை பொது நிர்வாகம் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் புதன்கிழமை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே ஜனவரி 20-ம் தேதிக்குப் பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இணையவழியில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகள் தரமானதாக இருக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. நேரடித் தேர்வு தான் மாணவர்களின் எதிர்காலத்திற்குச் சிறப்பாக இருக்கும்.
தற்போது 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் போது, அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தை மீண்டும் உயர்த்துவது பேராசிரியர்களின் கையில்தான் உள்ளது," என்று அவர் கூறியதாக தினமணி செய்தி கூறுகிறது.
கொரோனா பரவல் எதிரொலி: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

பட மூலாதாரம், Getty Images
பெங்களூருவில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி காவல்துறை ஆணையர் கமல்பந்த் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி காவல்துறை ஆணையர் கமல்பந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பெங்களூருவில் நேற்று இரவு 10 மணி முதல் வருகிற 19-ம் தேதி அதிகாலை 5 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
144 தடை உத்தரவு காரணமாக பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம் உள்ளிட்டவற்றை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் கமல்பந்த் எச்சரித்துள்ளதாக தினத்தந்தியில் இதுகுறித்து வெளியான செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்? யார் இவர்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












