You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுக்கோட்டையில் தோட்டா தலையில் துளைத்த சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தலையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாவை அகற்றிய அறுவை சிகிச்சை முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தில் மத்திய, மாநில காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் வழக்கமாக ஈடுபடுவர்.
இந்த நிலையில் திருச்சியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் டிசம்பர் 30ஆம் தேதி காலையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நார்த்தாமலை கிராமத்தில் உள்ள வீட்டில் சாப்பாட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலை மற்றும் காலில் தோட்டா பாய்ந்தது.
இதனால் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக கீரனூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுவனை கொண்டு சென்றனர் .
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் நிலைமை கவலைக்கிடமானது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் பற்றி சிறுவனின் தந்தை கலைச்செல்வன் கூறுகையில் மகன் தனது பாட்டியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் என சத்தம் கேட்டதாகவும் பிறகு கவனித்தபோது மகனின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததாகவும் தெரிய வந்தது என்றார்.
இந்த சம்பவம் பற்றி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்பாக்கி சுடும் தளத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும்
இதற்கிடையே, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீர் திருப்பமாக மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் ஒரு பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதேவேளையில் மற்றொரு பகுதியில் அகில இந்திய அளவில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மத்திய மண்டல காவல் துறையைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதில் பங்கேற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிறுவனுக்கு சரியாக சிகிச்சைஅளிக்கவில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அருகே கொத்தமங்கலம் பட்டியில் உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவனின் மறைவையடுத்து அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தற்காலிகமாக மூடப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் கிராமவாசிகள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்ய வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- டாஸ்மாக் பார் டெண்டர் சர்ச்சையில் செந்தில்பாலாஜி: ``எனக்கு எதிராக தி.மு.கவினரே போராட்டமா?''
- தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்
- 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி: 7 முக்கிய கேள்வி, பதில்கள்
- குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கியூபாவில் 2 வயது முதல் தொடங்கிய திட்டம் - மற்ற நாடுகளில் என்ன நிலவரம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்