You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவண்ணாமலை வேளாண் கிராமத்தில் புயலாக வீசும் சிப்காட் தொழிற்பேட்டை யோசனை
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
திருவண்ணாமலை அருகே, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காக பல நூறு ஏக்கர் வேளாண் நிலங்களும், ஏராளமான வீடுகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் கிடைத்த தகவலை அடுத்து இந்த திட்டத்தை எதிர்த்து ஊர் மக்கள் பல மாதங்களாகப் போராடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்கப்போவது உறுதி என்றும், இந்த கிராமத்தில் அந்த சிப்காட் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறும் அரசுத் தரப்பு, இந்த கிராமத்தில்தான் சிப்காட் அமைய உள்ளது என்று இதுவரை உறுதியாக கூறவில்லை. இதற்காக அரசாணையோ அறிவிப்போ முறையாக வெளியாகவில்லை.
ஆனால், இந்த ஊரில் சிப்காட் அமைக்கும் யோசனைக்காக தயாரிக்கப்பட்ட வரைபடம் கசிந்து கிராம மக்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இங்கு போராட்டம் தொடங்கியது.
ஒரு புறம் திருவண்ணாமலை மலை, மறுபுறம் கவுத்தி வேடியப்பன் மலைகள். இவற்றுக்கு இடையே தனித்துவமான அமைப்பைக் கொண்ட நெடிய குன்று ஒன்றை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊர் நெல், மணிலா கொட்டை (நிலக் கடலை) தவிர முக்கியமாக மலர்கள் சாகுபடிக்குப் பெயர் பெற்றது.
வழக்கமாக அரவமற்ற அமைதியில் உறங்கும் இந்த ஊர், சிப்காட் வருவது குறித்த உறுதி செய்யப்படாத தகவல் கசிந்ததில் இருந்து காத்திருப்புப் போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், ஊருக்குள் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பது, மறியல் என்று பல்வேறு வடிவங்களில் தினமும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.
தினமும் ஊரில் கட்சிகளைக் கடந்து போராட்டக் குழு கூடி அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறது.
இந்த திட்டம் தங்கள் ஊருக்குத் தேவையில்லை என்று ஊராட்சி மன்றம் கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வேளாண்மை, வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மக்கள் இந்த திட்டத்தை விரும்பவில்லை. அதனால்தான் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதாக கூறுகிறார் ஊராட்சித் தலைவர் சசிகுமார்.
சிப்காட் என்ற யோசனையை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அது ஏதேனும் தரிசு நிலத்திலோ, அரசுப் புறம்போக்கு நிலம் போன்ற இடங்களிலோ அமைக்கப்படவேண்டும் என்றும் தங்களுடையதைப் போன்ற வளமான வேளாண் நிலங்களை கையகப்படுத்தி, வாழ்வாதாரத்தை அழித்தும், வீடுகளை இடித்தும் அமைக்கப்படக்கூடாது என்றும் கூறுகிறார் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான இரா.குட்டி.
இந்த திட்டத்தால் 1,200 ஏக்கர் வேளாண் நிலங்களும், சுமார் 500 வீடுகளும் தங்களிடம் இருந்து பறிபோகும் என்கிறார் அவர்.
நிறைய வேளாண் நிலங்கள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படாது என்றும், ஏதேனும் சிறிய அளவில் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்கு மக்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறுகிறார் ஆளும் திமுகவை சேர்ந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி.
சிப்காட் அமைப்பதாக வாக்குறுதி அளித்து தேர்தலை எதிர்கொண்டதாக கூறும் கிரி, இதனால் பின் தங்கிய செங்கம் தொகுதியில் வேலைவாய்ப்பு பெருகும் என்கிறார்.
வேலை வாய்ப்பு என்றால் படித்தவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வேலைகள் கிடைக்கும், உள்ளூர் மக்களுக்கு கூட்டுவது பெருக்குவது போன்ற எளிய வேலைதான் கிடைக்கும் என்கிறார் ஊரைச் சேர்ந்த வேளாண் குடும்பம் ஒன்றைச் சேரந்த ராஜகுமாரி.
இதே குரலை கிராமத்தை சேர்ந்த பல பெண்களும், ஆண்களும் பிரதிபலிக்கிறார்கள்.
தங்களிடம் இருந்து வாழ்வாதாரத்தையும், நிலத்தையும் பிடுங்கும் திட்டத்தில் தங்களுக்கு வேலை கிடைக்கப்போவதில்லை என்று கூறும் வேல்விழி, தங்களிடம் இருந்தால் பத்து தலைமுறைக்கு நிலம் சோறு போடும், இவர்கள் பத்து தலைமுறைக்கு வேலை தருவார்களா என்று கேட்கிறார்.
கவுத்தி மலையில் பிறந்து தங்கள் ஊரின் வழியாக ஓடும் ஆலமரத்து ஓடை அஸ்வநாகசுரணை, அய்யம்பாளையம், அத்தியந்தல் ஏரிகளைக் கடந்து திருவண்ணாமலை அருகே உள்ள பிரும்மாண்டமான நீர்நிலையான சமுத்திரம் ஏரிக்கு செல்வதாகவும் இந்த திட்டம் இங்கே வந்தால் இந்த ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறும், நீர் மாசுபடும் என்கிறார் முன்னாள் ஊராட்சித் தலைவர் அண்ணாமலை.
12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊருக்கு அருகே உள்ள கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது வெட்டியெடுக்கும் திட்டத்துக்கு டிம்கோ என்ற கூட்டு நிறுவனத்தின் கீழ் ஜிண்டால் குழுமம் முயன்றது. ஆனால், இந்த திட்டம் இந்தப் பகுதியில் உள்ள வளமான வேளாண்மைச் சூழலை பாழ்படுத்திவிடும், சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடுகள் ஏற்படும், காட்டு வளம் பாதிக்கும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் போராடினார்கள். திட்டம் கைவிடப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மலையில் இரும்புச் சுரங்கம் தொடங்க மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தோடு ஜிண்டால் நிறுவனம் முயற்சி செய்தது. அப்போதும் முயற்சி கைகூடவில்லை. பிறகு சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு இந்த ஊரின் நிலங்கள் கையகப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதும் போராடிய நிலையில், இப்போது அந்த திட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனவே அடிக்கடி அச்சுறுத்தலை சந்திக்கும் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் இப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்று கோருகிறார் ஊரைச் சேரந்த மாரிமுத்து.
இதற்கிடையே, மிக கடுமையாக எதிர்க்கப்பட்ட இரும்புத் தாது வெட்டியெடுக்கும் திட்டம் வேறு ரூபத்தில் தந்திரமாக தங்கள் மீது திணிப்பதற்கான முயற்சியோ இது என்ற சந்தேகமும் ஊர் மக்களிடம் இருக்கிறது.
வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எதற்காக இவ்வளவு பெரிய போராட்டம், இன்னும் அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லையே என்று கேட்டபோது, இந்த திட்டத்துக்காக நில அளவை செய்வதற்காக வந்த அதிகாரிகள் மூலம் இந்த திட்டம் குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்தது என்றும், மலையோரம் வசித்துவரும் 25 கல் உடைக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க ஊராட்சித் தலைவர் சசிகுமார் முயற்சி செய்து வந்தார் என்றும், இந்நிலையில் அந்த குடும்பத்தவர்கள் பட்டா தொடர்பாக அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, இப்பகுதியில் சிப்காட் வரவுள்ளது என்றும் அதனால், பட்டா வழங்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்துதான் திட்டம் வருகிறது என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு போராடுகிறோம் என்று கூறுகிறார் ஊரைச் சேர்ந்த இளைஞர் பவுன்குமார்.
அரசுத் தரப்பில் இருந்து கசிந்ததாக கூறப்படும் உத்தேச சிப்காட் வரைபடம் நிறைவேற்றப்பட்டால், பல நூறு வீடுகள் பறிபோகும் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.
தங்களுக்குத் தெரிந்தது விவசாயம் மட்டுமே என்ற நிலையில், தங்கள் வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை தங்கள் விருப்பத்துக்கு மாறாகப் பறித்து வேறொரு தொழில்துறைக்கு தருவது நியாயமல்ல என்பதுதான் ஊரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிபிசி தமிழிடம் பேசியவர்கள் கூறும் ஒற்றைக் குரல்.
ஆனால், இந்த ஊரை உள்ளடக்கிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி இது பற்றிக் கூறும்போது, இந்த உத்தேச சிப்காட் அமைய உள்ள நிலத்தில் பெரும்பகுதி வேளாண் நிலங்களில் இருக்காது என்கிறார். தவிர, பாதிக்கப்படும் சிலருக்கும் முறையாக இழப்பீடு வழங்கப்படும் என்றும், யாரையும் பாதிக்காமல் எங்கேயும் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டதில்லை என்று கூறும் கிரி, இதே மாவட்டத்தில் செய்யாற்றில் அமைக்கப்பட்ட தொழிற்பேட்டை ஏராளமான பெண்களுக்கு வேலை தருகிறது என்றும் கூறுகிறார்.
இந்த தொழிற்பேட்டைக்கு தேவைப்படும் மனித வளம் ஊரில் கிடைக்காது என்ற அச்சம் குறித்துப் பேசிய அவர் இந்தப் பகுதியின் மனித வளத்துக்கு ஏற்ற தொழில்தானே இங்கே தொடங்குவார்கள் என்று கூறுகிறார்.
குடில்கள் போன்றவற்றை அமைத்துள்ளவர்களின் தூண்டுதலின்பேரில்தான் போராட்டம் நடக்கிறது என்றும் அவர் சந்தேகிக்கிறார்.
இந்த திட்டம் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து தான் தூங்கவில்லை என்று கூறும்போதே அழுகிறார் இந்த ஊரைச் சேர்ந்த சம்பத். 15 நாளாக சரியாக சாப்பிடக்கூட இல்லை என்று கூறி கண் கலங்கும் ராஜகுமாரி, 'வயிற்றில் அடிப்பதாக' குற்றம்சாட்டுகிறார்.
நெல், மணிலா தவிர ஏராளமான பூந்தோட்டங்களை உடைய இந்த ஊர் வட தமிழ்நாட்டின் பிரபலமான திருவண்ணாமலை பூச்சந்தைக்கு பூக்களை விற்று கொஞ்சம் வளமாகவே இருக்கும் வேளாண் கிராமம். திருவண்ணாலை நகருக்கு அருகே சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்திருப்பதால் இந்த ஊரில் நிலத்தின் சந்தை மதிப்பும் மிக அதிகம் என்பதும் பிரச்சனையின் இன்னொரு கோணம்.
அறிவிப்பு வெளியாகும் முன்பே ஏன் போராடவேண்டும் என்ற கேள்விக்கு, தங்கள் ஊருக்கு வராது என்ற உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிக்கையை பதிலாக வைக்கிறார்கள் ஊர் மக்கள்.
424 தகவல் உரிமைச்சட்ட மனுக்கள் தாக்கல்
(இந்த செய்தி வெளியாகி சில வாரங்கள் கடந்த நிலையில்...) 45 நாள்களாகப் போராடிவரும் விவசாயிகள், அது தொடர்பாக நூற்றுக்கணக்கான தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.
சிப்காட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் கீழ் திரண்டு இன்று வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள், மனுக்களைத் தாக்கல் செய்து ஒப்புகைச்சீட்டும் பெற்றுச் சென்றனர்.
தொடக்கத்தில் அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கை தொடர்பாக அமைதியாக இருந்த நிலையில், இவர்களுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்தார். பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்குரைஞர் சு.கண்ணன், எட்டுவழிச் சாலை எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் அபிராமன் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முஸ்தாக் பாஷா, இப்ராஹிம் உள்ளிட்டோர் நேரில் வந்து இந்த மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
தொடக்கம் முதல் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் நிற்பவரான திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, "இது தகவல் கோரும் நடவடிக்கை மட்டுமல்ல. இத்தனை நாள்கள் போராடினாலும், மக்களிடம் தங்கள் திட்டம் குறித்துப் பேச முன்வராத அரசாங்கத்துக்கு தங்கள் குரலை உரத்துக் கேட்கவைக்கும் முயற்சியும் ஆகும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
என்னவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்று கேட்டபோது, "தமிழ்நாடு அரசு எங்கெங்கே புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கத் திட்டமிட்டுள்ளது? ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைக்கு என கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளன? என்ன விதமான நிலங்களில் சிப்காட் அமைக்ககூடாது? என்பது உள்ளிட்ட 25 கேள்விகளை, 424 பேர் தங்கள் மனுக்களில் கேட்டுள்ளனர்," என்று தெரிவித்தார் லெனின் பாரதி.
பிற செய்திகள்:
- முஸ்லிம் பெண்கள் படத்தை பதிவிட்டு ஏலம் விடும் செயலி - டெல்லி, மும்பை போலீசில் புகார்
- 2022இல் வடகொரியாவின் திட்டம் என்ன? - கிம் ஜோங்-உன் உரை
- தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்
- 'கோயம்புத்தூர் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி' - எதிர்ப்பும் பின்னணியும்
- நீங்கள் பணம் வைத்துள்ள வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு காப்பீடு கிடைக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்