முஸ்லிம் பெண்கள் படத்தை பதிவிட்டு ஏலம் விடும் செயலி - டெல்லி, மும்பை போலீசில் புகார்

பட மூலாதாரம், Getty Images
இன்று இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
அதேபோல டெல்லியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் தன்னுடைய படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார்.
முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து ஏலம் விடும் அந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒவைசி எம்.பி. காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலியில் மூலம் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது. சல்லி டீல்ஸ், புல்லி பாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு 'டீல் ஆஃப்தி டே' என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது என்று அந்த செய்தி விவரிக்கிறது.
ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது

பட மூலாதாரம், Getty Images
நடந்து முடிந்த டிசம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ரூ.1,29,780 கோடி வசூலாகியுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.
2021 டிசம்பரில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,29,780 கோடி. இதில், மத்திய ஜிஎஸ்டி ரூ.22,578 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.28,658 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.69,155 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.37,527 கோடி உட்பட) மற்றும் மேல் வரி (செஸ்) ரூ.9,389 கோடி (இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.614 கோடி உட்பட) ஆகும் என்று நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1.31 லட்சம் கோடியாகும். இதை ஒப்பிடுகையில் டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாய் குறைவுதான் என்றாலும், தொடா்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 13 சதவீதம் அதிகமாகும். 2019-இல் வசூலான வரி வருவாயுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.
உத்தர பிரதேசத்தில் 80,000 ஆஷா பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் - யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images
'ஆஷா' பணியாளர்கள் என்று அழைக்கப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்கள் 80 ஆயிரம் பேருக்கு, ஸ்மார்ட்போன் வழங்க இருப்பதாக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
இதன் மூலம் ஆஷா பணியாளர்கள் தங்கள் ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.
உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறது அந்தச் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








