You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிஎஸ்டி: 2022-ல் ஸ்விக்கி சொமேட்டோவில் உணவு ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியா? உணவு விலை அதிகரிக்குமா?
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இந்திய அரசின் தேவை, தொழிலதிபர்களின் கோரிக்கை, மாநில அரசுகளின் வேண்டுகோள், பொருளாதார நிலை பொறுத்து பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
இதில் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான அதிகாரங்கள், பொறுப்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன.
வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்தியாவின் மறைமுக வரியான ஜிஎஸ்டி சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிகரிக்க உள்ளது. அதை கீழ்வருமாறு தொகுத்துள்ளோம்.
- ஜவுளி ஆடைகள் (பருத்தி பொருட்கள் தவிர) மற்றும் காலணிகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் 12 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. இதில் ஜவுளி ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரியை இந்திய நிதித்துறை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.
- ஓலா, உபர், மேரு கேப்ஸ், ஃபாஸ்ட் டிராக், மெகா கேப்ஸ் போன்ற இணைய செயலி வழி மேற்கொள்ளும் பயணங்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது. இணைய செயலிகளின்றி சாலையில் ஆட்டோ பிடித்துச் செல்வது போன்ற பயணங்களுக்கு இதுவரை ஜிஎஸ்டி வசூலிக்கப்படவில்லை, இனியும் அப்படியே தொடரும் என்று பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
- இதுவரை ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற செயலிகள் மூலம் உணவகங்களில் ஆர்டர் செய்யும் உணவுக்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி தொகையை (5 %), உணவகங்களே வசூலித்து ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசு அமைப்புகளுக்குச் செலுத்தி வந்தது.
- ஆனால் இனி 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி தொகையை, டெலிவரி சேவை வழங்கும் நிறுவனங்கள் வசூலித்து, ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்த வேண்டும்.
- எனவே உணவு டெலிவரி நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு இடையிலான இந்த பொறுப்பு மாற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்காது என பிடிஐ முகமையில் கூறப்பட்டுள்ளது.
- ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையைப் பெற இனி ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது.
- 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அதிகாரிகள், சரக்கு மற்றும் சேவை வரி பாக்கிகளை வசூலிக்க எந்த வித முன்னறிவிப்பு நோட்டிஸின்றி (Show-cause Notice) எந்த ஒரு இடத்திலும் பரிசோதிக்கலாம் என்கிற நடைமுறை அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி-3பி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை அளவு, ஜிஎஸ்டிஆர்-1-ல் குரிப்பிடப்பட்டிருக்கும் அளவை விட குறைவாக இருந்தால் மேலே குறிப்பிட்டது போல அதிகாரிகள் பரிசோதிக்கலாம்.
பிற செய்திகள்:
- அடுத்த 100 ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் கிரகத்தில் சாத்தியமாகுமா?
- யோகி தலைமையில் களத்தில் பிராமணர்கள் - பாஜக புதிய உத்தி எடுபடுமா?
- கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் - உ.பி அரசியல் அதிர என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றம் - உடல்நிலை எப்படி உள்ளது?
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்