You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்த ஆண்டில் முதன் முறையாக நடந்த நிகழ்வுகள் என்னென்ன?
புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ளன. கொரோனா பரவல், ஒமிக்ரான் திரிபு என கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பலருக்கும் இது சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு, நம்மை திரும்பி பார்க்க வைத்த முதல் முறையாக நடந்த சில நிகழ்வுகளும் உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
இந்தியாவின் முதல் காகிதமில்லா மத்திய பட்ஜெட்
இந்தியாவின் 2021-2022ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இந்த ஆண்டு காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக காகிதமில்லா பட்ஜெட்டை தேர்வு செய்த மத்திய அரசு, மக்கள் பட்ஜெட் குறித்த விவரங்களை பெற `யுனியன் பட்ஜெட்` என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியது.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டிற்கான நிதியறிக்கை கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. மத்திய அரசை தொடர்ந்து, தமிழக அரசும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்ததும் இதுவே முதல்முறையாகும்.
ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம்
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதல், இந்தியா இதுவரை 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. அதில், ஆண்கள் ஹாக்கி அணி மட்டும் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை அபினவ் பிந்த்ரா வென்றார் .
இந்த வரலாற்று பக்கங்களில், தனது பெயரை பதிவு செய்தது மட்டுமல்லாமல், தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பதக்கத்தை இந்த ஆண்டு பெற்று தந்திருக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் 87.58 மீட்டர் தொலைவில் வீசி அவர் தங்கம் பதக்கம் வென்றது நினைவுக்கூரத்தக்கது.
டிவிட்டர் நிறுவனத்தை தலைமை தாங்கும் முதல் இந்தியர்
சமூக ஊடகங்களில் ஜாம்பவானான டிவிட்டர், கடந்த நவம்பர் மாதம் தனது புதிய தலைமை செயல் நிர்வாக அதிகாரியை (சி.இ.ஒ) அறிவித்தது. அவர் இந்தியாவைச் சேர்ந்த பராக் அக்ரவால். ஐ.ஐ.டி பாம்பேவில் படித்த பராக் அக்ரவால், அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
கடந்த பத்தாண்டுகளாக டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்த பராக் அகர்வால் மீது தான் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பதாக, சி.இ.ஒ பதிவியிலிருந்து விலகிய ஜேக் டோர்சி தெரிவித்திருந்தார். இதன் மூலம், டிவிட்டர் நிறுவனத்தை தலைமை தாங்கும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் பராக் அக்ரவால்.
சூரியனின் புற வளிமண்டலத்துக்கு முதன்முறையாக நுழைந்த நாசா விண்கலம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு வேறு எந்த விண்கலமும் செல்லாத வகையில், சூரியனுக்கு மிக அருகில் செல்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
அதன்படி, இந்த விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம், கொரோனா எனப்படும் சூரியனின் புற வளி மண்டலத்தின் வாயிலாக சென்றுள்ளது. ஆனால், இதனை உறுதி செய்ய பல பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டு, அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 14ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டது நாசா. சூரியன் குறித்த அறிவியலை அறிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது என்று நாசா நெகிழ்ந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் முதல் முறையாக தேர்வு எழுதிய பெண்கள்
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நடந்த தேர்வில் மொத்தம் 8009 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 1002 பேர் பெண்கள் தேர்வாகியுள்ளனர்.
இந்த தேர்வில் முதல் இடத்தை பிடித்தவர், நிபா பாரதி என்ற பீகாரைச் சேர்ந்த பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தேர்வில் முதல் 10 இடங்களில், 7 இடங்களை பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- "இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது": அண்ணாமலை
- ஸ்விகி அறிக்கை சுவாரசியம்: 6 கோடி பிரியாணி ஆர்டர்; அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் டிப்ஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்