தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்: தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் இன்று தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.:
- இந்தியாவில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த சட்டம் நுகர்வோருக்கு ஆறு உரிமைகளை வழங்குகிறது. 1. பொருட்களை தேர்வு செய்யும் முறை 2. அனைத்து வகையான அபாயகரமான பொருட்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை 3. அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கான உரிமை 4. நுகர்வோர் நலன்கள் தொடர்பான அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை 5. நுகர்வோர் உரிமைகள் மீறப்படும்போது அதற்கு தீர்வு பெறுவதற்கான உரிமை 6. நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை.
- இந்த சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து இந்தியா முழுவதும் தற்போது வரை 5485267 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் பதிவு செய்யப்பட்டதில் 90% புகார்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்தின் கீழ் நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற முடியும். பொருட்கள் என்றால் மொத்தமாக அல்லது சில்லறையாக கடைகளில் வாங்கப்படும் நிறைவு செய்யப்படும் பொருட்களின் ஏற்படும் குறைபாடு. சேவைகள் என்றால் போக்குவரத்து, மருத்துவம், வங்கி மற்றும் காப்பீடு சேவைகள் போன்று ஒரு தனிநபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ நுகர்வோர் கட்டணம் செலுத்தி பெறும் சேவைகளைக் குறிப்பது.
- ஒரு குறை எழுந்து இரண்டு ஆண்டுகள் வரை புகார் பதிவு செய்யலாம். இரண்டு ஆண்டுகளைக் கடந்த புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
- புகார் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர் எதிர்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும் அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் விவரித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நுகர்வோர் ஆணையத்திற்கு செல்வதற்கு முன்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சி இது.
- நோட்டீஸுக்கு பதில் வரவில்லையென்றால் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உரிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்யலாம்.
- ரூ. 1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ரூ. 1 கோடியிலிருந்து 10 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ரூ. 10 கோடிக்கும் மேல் இழப்பீடு கோரும் புகார்களை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- எம்.ஆர்.பி குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, எம்.ஆர்.பிக்கு அதிகமாக பொருட்களை விற்பது, குறிப்பிட்ட சேவைகளை சரிவர வழங்காமல் இருப்பது, காப்பீடு நிறுவனங்கள் சரியாக காப்பீடு வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவ சேவைகளில் எழும் குறைகள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் எனப் பல தரப்பட்ட புகார்களுக்கு நிவாரணம் பெற முடியும்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கார்கிவேலன் பிபிசி தமிழிடம் பேசுகையில், `நுகர்வோர் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. எவ்வளவு சிறிய தொகையிலிருந்து பெரிய தொகையாக இருந்தாலும் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தால் நிச்சயம் இழப்பீடு பெற முடியும். புகார் செய்பவரே இதில் தனக்காக வாதாடவும் முடியும். ஆனால் மக்கள் இதற்காக பெரும்பாலும் மெனக்கெடுவதில்லை.
பல்வேறு சம்பவங்களில் நுகர்வோர் குறைகளுக்காக வாதாடி அதற்கு உரிய இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள். சமீப காலங்களாக அதிகரித்து வரும் இணைய வழி வர்த்தகங்களால் நுகர்வோர் குறைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் தீர்வுகளைப் பெற முடியும். அரசாங்கமும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும்` என்றார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. மாநில குறைதீர் ஆணையமும் சென்னையிலும் அதன் கிளை மதுரையிலும் செயல்பட்டு வருகிறது.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தொடர்பு எண்: பதிவாளர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், டிஎன்பிஎஸ்சி சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003. தொலைபேசி: 044-25340050, மின்னஞ்சல் :[email protected], [email protected]
உதவி பதிவாளர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய கிளை, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம், மதுரை - 625 020. தொலைபேசி: 0452-2533120 மின்னஞ்சல்: [email protected]
மாவட்ட வாரியான நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரியும் தொடர்பு எண்களையும் இந்த இணைய முகவரிகளில் பெறலாம்:
http://www.scdrc.tn.gov.in/files/Address%20of%20District%20Consumer%20Forums%20in%20Tamilnadu.pdf
http://www.scdrc.tn.gov.in/files/email%20id%20of%20district%20forum.pdf
பிற செய்திகள்:
- அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு வருகிறதா? - கடும் எச்சரிக்கை
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
- இனி டிவியில் நக்கிச் சுவைக்கலாம்: தொலைவில் இருந்தே சுவை அறிய புதிய தொழில்நுட்பம்
- பசு நமக்கு தாய் போன்றது: பிரதமர் நரேந்திர மோதி
- பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












