You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல்
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்ததாக உடற் கூறாய்வில் தெரியவந்தது. பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேலத் தெரு அருகே, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலமாக சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி காலை, தள்ளுவண்டியின் மீது 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, அக்கம்பக்கத்தினரிடம் கூறவே அனைவரும் அந்த சிறுவனை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால், அச்சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை செய்தபோது, ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் உயிரிழந்த சிறுவன் குறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில், குழந்தை அப்பகுதியை சேர்ந்த யாருடையதும் அல்ல என்பது தெரியவந்தது.
குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லை. மேலும் யாராவது கடத்தி வந்து உயிரிழந்த நிலையில் துணி தேய்க்கும் தள்ளு வண்டியில் போட்டுவிட்டுச் சென்றார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் குழந்தையின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு உடற் கூறாய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
இந்தச் சூழலில் உயிரிழந்த குழந்தை உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக உடற் கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் விழுப்புரம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை அந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் என யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் குழந்தையின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. அப்போது பேசிய அவர், "உயிரிழந்த குழந்தையை உடற் கூராய்வு செய்ததில், இந்த குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இல்லை; குழந்தையின் மரணம் இயற்கையானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் காயம் எதுவுமே இல்லை. ஆகவே உடலில் தண்ணீர் இல்லாமல், மற்றும் பட்டினியால் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது குழந்தை யாருடையது என்பதை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் இருக்கும் வாட்சப் குழுக்களுக்கு குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி பெற்றோரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்," என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்