You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய புயல் அபாயம்: வங்காள விரிகுடா நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்திய இந்திய அரசு
வங்காள விரிகுடாவில் புதிய புயல் அபாயம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள சூழலில், அதன் தாக்கம் ஏற்படலாம் என்று கருதப்படும் மாநிலங்களில் முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை உயரதிகாரிகளுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகளின்போது ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சரவை செயலாளர் தலைமையில் தேசிய நெருக்கடிகால மேலாண்மை குழு இயங்கி வருகிறது. இந்த குழுவின் கூட்டத்தில் இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித்துறை, மீன்வளத்துறை, தொலைத்தொடர்புத்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை, இந்திய வானிலை ஆய்வுத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்டவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்..
புயல் தாக்கம் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள ஆந்திர பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிகோபாரின் அரசு தலைமைச் செயலாளர்கள் காணொளி காட்சி வாயிலாக தங்களுடைய மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விளக்கினார்கள்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் குழுவுக்கு விளக்கினார்.
இந்த புயல் டிசம்பர் 3ஆம் தேதி தீவிரமடையும் என்றும் அது ஆந்திர பிரதேசம், ஒடிஷா இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த மாநிலங்களுக்கு பாதிப்பு?
அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வரை இருக்கும். இந்த மாநிலங்களில் உள்ள கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் கன மழையும் இருக்கும்.
இந்த புயல் காரணமாக ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஒடிஷாவில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கங்கை நதி கடலோர பகுதிகளில் கன மழை முதல் பலத்த கனமழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிகோபாரின் தலைமைச் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள், புயல் எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் மக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்கள். புயலுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகள் குறைந்த அளவே இருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர்.
இந்த மாநிலங்களில் 32 மீட்புக்குழுக்களை தேசிய பேரிடர் மீட்புப்படை நிறுத்தியுள்ளது. கூடுதல் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
மாநிலங்களுக்கு அறிவுரை
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகள் கையாளும் நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, புயல் கரையைக் கடக்கும் முன், அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், சொத்துகள், உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
மீனவர்கள் மற்றும் கடலில் உள்ள அனைத்து படகுகளும் உடனடியாக திரும்ப அழைக்கப்படுவதையும், புயலால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் வெளியேற்றப்படுவதையும் உறுதி செய்ய மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் கேட்டுக் கொண்டார்.
புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசின் சம்பந்தபட்ட துறைகள் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
புயல் எச்சரிக்கை
வங்காள விரிக்குடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புயலாக மாறினால், அது செளதி அரேபியாவால் பரிந்துரைக்கப்பட்ட 'ஜாவத்' என்று அழைக்கப்படும். இந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி ஒடிசா கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மகாராஷ்டிராவின் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அங்குள்ள நிலைமையை வானிலை மைய அதிகாரிகள் உன்னிப்பாக கவனிதது வருகின்றனர்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்