கேரளாவில் தொலைத்த குழந்தையை மீட்ட தாயின் நீண்ட போராட்டம்

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் காணாமல் போன தனது குழந்தையைத் தேடும் ஒரு தாயின் ஒராண்டு கால தேடல் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. நீதிமன்றம் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தது. மக்களிடையே கோபத்தையும், அரசியல் புயலையும் கிளப்பிய இந்த சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்பாக சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரப் படானாவும் வெளியிட்ட விவரங்கள் இதோ.

காணாமல் போன தங்கள் குழந்தையைத் திருப்பித் தரக் கோரி, கேரளாவில் உள்ள தத்தெடுப்பு முகமைக்கு வெளியே ஒரு தம்பதி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.

பலத்த மழை மற்றும் கேமராக்களின் வெளிச்சத்திற்கு இடையே அவர்கள், கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் ஒரு பாதை ஓரத்தில் தார்போலீன் ஷீட்டிற்குக்கீழே முகாமிட்டிருந்தனர். இரவு நேரத்தில் அந்த தம்பதி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினிவேனில் ஓய்வு எடுபார்கள்.

அந்தப் பெண்மணி, "என் குழந்தையை என்னிடம் கொடுங்கள்" என்று கூறும் வாசக அட்டையை கையில் வைத்திருந்தார். தன்னுடைய சம்மதம் இல்லாமல் தன் குழந்தையை தன் குடும்பம் தத்து கொடுத்ததாக அவர் கூறுகிறார். அந்த குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி, அனுபமா எஸ் சந்திரன், உள்ளூர் மருத்துவமனையில் சுமார் 2 கிலோ (4.4 பவுண்டுகள்) எடையுள்ள ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

22 வயதான அனுபமா, ஒரு மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய, ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான, அவரது காதலர் 34 வயதான அஜித் குமார் பேபியுடன் திருமண பந்தத்திற்கு வெளியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டார். இதனால் ஏற்பட்ட சமூக இழிவை துணிச்சலாக எதிர்கொண்டார்.

அந்த உறவும் கர்ப்பமும் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் புயலைக் கிளப்பியது.

திருமணமாகாத பெண் குழந்தை பெற்றுக்கொள்வது இந்தியாவில் இழிவாகக் கருதப்படுகிறது. அஜீத்துடன் ஒப்பிடும்போது அனுபமா ஓர் ஆதிக்க சாதி என்று சொல்லக்கூடிய ஒரு சாதியை சேர்ந்தவர் என்பது விஷயங்களை மிகவும் சிக்கலானதாக ஆக்கியது. அஜீத், இந்தியாவின் சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் தலித் இனத்தவர் ஆவார். சாதி, மதங்களுக்கு இடையேயான திருமணங்கள் இந்தியாவில் பெரும்பாலும் வரவேற்பை பெறுவதில்லை.

அனுபமாவும், அஜீத்தும் நடுத்தர வர்க்க, முற்போக்கான குடும்பங்கள் என்று பல இந்தியர்களும் கருதும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு குடும்பங்களும் மாநிலத்தின் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தீவிர ஆதரவாளர்கள். கேரள மாநிலம், கம்யூனிசத்தின் பாரம்பரிய வலுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபமாவின் தந்தை, ஒரு வங்கி மேலாளர். அவர் உள்ளூர் கட்சித் தலைவராகவும் இருந்தார். அதே நேரத்தில் அவரது தாத்தா பாட்டி முக்கிய தொழிற்சங்க உறுப்பினர்களாகவும், நகராட்சி கவுன்சிலர்களாகவும் இருந்துள்ளனர்.

இயற்பியல் பட்டதாரியான அனுபமா, தனது கல்லூரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் ஆவார். கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தவர் அஜீத்.

அவர்கள் அதே சுற்றுவட்டாரத்தில் வளர்ந்தவர்கள். கூடவே கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியபோது சந்தித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். அந்த நேரத்திற்குள் தான் மனைவியை பிரிந்துவிட்டதாக அஜீத் கூறினார். அவர்களுக்கு குழந்தை இல்லை. "இது முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் இல்லை. நாங்கள் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். பின்னர் ஒன்றாக வாழ முடிவு செய்தோம்," என்று அனுபமா தெரிவித்தார்.

சென்ற ஆண்டு அனுபமா கர்ப்பமானார். குழந்தையைப் பெற இருவரும் முடிவு செய்தனர். "குழந்தையைப் பெறுவதில் எங்களுக்கு ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை. நாங்கள் பெற்றோராக ஆவதற்குத்தயாராக இருந்தோம்," என்று அவர் கூறினார். தனது பிரசவத்திற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனது "அதிர்ச்சியடைந்த" பெற்றோரிடம் அவர் இந்த செய்தியை சொன்னார். பிரசவத்திற்கு தயாராவதற்கு வீட்டிற்குத் திரும்பும்படி அவளை வற்புறுத்திய பெற்றோர், அஜீத்தை தொடர்பு கொள்ளத் தடை விதித்தனர்.

மருத்துவமனையில் இருந்து அனுபமா டிஸ்சார்ஜ் ஆனதும், அவரையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் வந்தனர். அனுபமாவின் சகோதரியின் திருமணம் மூன்று மாதங்களில் நடக்க இருந்த நிலையில், அது முடியும் வரை தோழியின் வீட்டில் தங்கியிருக்குமாறும், அதன் பிறகு வீட்டிற்கு அழைத்துச்செல்வதாகவும் சொன்னார்கள். பச்சிளம் குழந்தையைப் பற்றி விருந்தினர்கள் விசாரிப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மருத்துவமனையில் இருந்து காரில் திரும்பி வரும் போது தனது தந்தை குழந்தையை எடுத்துச்சென்றுவிட்டதாக அனுபமா கூறுகிறார். " நான் பின்னர் சந்திக்கக்கூடிய பாதுகாப்பான இடத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்வதாக அவர் என்னிடம் சொன்னார்," என்கிறார் அனுபமா.

"என் சந்தோஷம் என்னைவிட்டுப்போய் விட்டது."

அடுத்த சில மாதங்களில் அனுபமா முதலில் இரண்டு வீடுகளில் தங்கவைப்பட்டார். பின்னர் அவர் நகரத்திலிருந்து சுமார் 200கிமீ (124 மைல்கள்) தொலைவில் உள்ள அவரது பாட்டியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அனுபமா வீடு திரும்பியபோது அஜீத்திற்கு போன் செய்து தங்கள் மகனைக் காணவில்லை என்று கூறினார். தனது குழந்தையை தத்துகொடுக்க தனது பெற்றோர் முயற்சி செய்கின்றனர் என்றார் அவர். இறுதியாக மார்ச் மாதம் தனது வீட்டை விட்டு வெளியேறிய அனுபமா, அஜித் மற்றும் அவரது பெற்றோருடன் வாழத் தொடங்கினார். பிறகு அவ்விருவரும் தங்கள் குழந்தையை தேட ஆரம்பித்தனர்.

அவர்கள் சந்தித்த சோதனைகள்

மருத்துவமனையில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் அஜீத் என்று இல்லாமல், முன்பின்தெரியாத ஒருவரின் பெயர் கொடுக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். குழந்தையை காணவில்லை என்ற புகாரை பதிவு செய்ய போலீசார் முதலில் மறுத்துவிட்டனர். மாறாக, அனுபமா தனது பெற்றோரின் வீட்டிலிருந்து "காணாமல் போனது" குறித்து அவரது தந்தை அளித்த புகாரை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் மாதம் இந்த ஜோடிக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை போலீஸார் அளித்தனர். அனுபமா தானாக முன்வந்து குழந்தையை தத்துகொடுக்க அளித்ததாக அவரது தந்தை கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த தம்பதி, ஆளுங்கட்சி, முதல்வர், தத்தெடுப்பு நிறுவனம் மற்றும் மாநில காவல்துறை தலைவர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். ஒரு செய்திச் சேனலில், "எல்லோரும் என்ன செய்வார்களோ அதைத்தான் அனுபமாவின் பெற்றோரும் செய்திருக்கிறார்கள்" என்று அவதூறாகப் பேசியதற்காக, மாநில கலாசார அமைச்சர் சாஜி செரியன் மீதும் அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்தனர்.

கடந்த மாதம் அனுபமாவும் அஜீத்தும் செய்தி நெட்வொர்க்குகளுக்குச் சென்று, தங்கள் அனுபவத்தை விவரித்தனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இறுதியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இது "கௌரவக் குற்றத்திற்கு" உதாரணம் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளி எழுப்பினர். "இது அரசு இயந்திரத்தால் கூட்டாக நிறைவேற்றப்பட்ட ஒரு கௌரவக் குற்றம்" என்று எதிர்க்கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் கே.கே. ரீமா கூறினார்.

அனுபமாவின் தந்தை எஸ் ஜெயச்சந்திரன் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். "இப்படி ஒரு சம்பவம் நம் வீட்டில் நடந்தால், அதை எப்படி சமாளிப்பது? அனுபமா விரும்பிய இடத்தில் குழந்தையை விட்டுவிட்டேன். குழந்தையை பாதுகாக்கும் வழிவகை அவளிடம் இல்லை. எங்களாலும் அதை செய்ய முடியாது," என்று அவர் கூறினார்.

"குழந்தையின் தந்தைக்கு ஏற்கனவே ஒரு மனைவி உள்ளார். எப்படி என் மகளையும் அவளது குழந்தையையும் அவருடன் விடுவது? பிரசவத்திற்குப் பிறகு அனுபமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் குழந்தையைப் பராமரிக்க தத்தெடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்தேன்,"என்கிறார் அவர்.

தன் குடும்பம் எப்படி ஒரு "சட்ட அங்கீகாரம் இல்லாத குழந்தையை" வைத்திருக்க முடியும் என்று ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே குழந்தையை தத்தளிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார். மகளிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நிகழ்ச்சித்தொகுப்பாளர் அவரிடம் கேட்டபோது, "நான் அவளிடமிருந்து எதையும் கேட்க விரும்பவில்லை,"என்று பதில் அளித்தார்.

சர்ச்சை பூதாகாரமாக ஆனதைத்தொடர்ந்து, அனுபமாவின் பெற்றோர், சகோதரி, அவரது கணவர் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சட்டத்திற்கு புறம்பான வகையில் அடைத்துவைத்தது, கடத்தல் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆயினும் குற்றச்சாட்டுகளை அனைவருமே மறுத்துள்ளனர்.

தத்துகொடுக்கும் அமைப்பு, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வளர்ப்புத் தம்பதியிடம் ஒப்படைத்த குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனைக்கு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தை, வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து திரும்பப்பெறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு அழைத்துவரப்பட்டது.

அனுபமா மற்றும் அஜீத்தின் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் பொருந்தியுள்ளதாக செவ்வாய்கிழமை மாலை கூறப்பட்டது. அதன்பிறகு ஒரு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கள் குழந்தையை இவ்விருவரும் முதல்முறையாக சந்தித்தார்கள். குழந்தையை கடத்தியவர்கள் தண்டிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை டிஎன்ஏ ஆதாரத்தை விசாரித்த நீதிமன்றம், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தது.

இது மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது என்று இருவரும் கூறுகின்றனர். தற்போது ஒரு வயதுக்கு மேல் ஆன தனது குழந்தையைப் பற்றி அனுபமா இடைவிடாமல் கவலைப்பட்டுள்ளார்.

"நான் யாருடன் வாழ்ந்து ஒரு குழந்தையைப் பெற வேண்டும் என்று முடிவுசெய்வது என் உரிமை இல்லையா?"என்று வினவுகிறார் அனுபமா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :