அமேசானில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு - வழக்கை எதிர்கொள்ளும் அமேசான் ஊழியர்கள்

அமேசான் வலைதளத்தைப் பயன்படுத்தி இருவர் மரிஜுவானா போதைப்பொருள் கடத்தியதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவிலுள்ள அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற வாரம், மத்திய பிரதேசத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு 20 கிலோ போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி போலீசார் இருவரை கைது செய்தனர்.

இந்த நபர்கள், அமேசான் வலைதளத்தில், சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இயற்கை இனிப்பான ஸ்டீவியா இலைகள் என்று கூறி, கனாபிஸ் போதைப்பொருளை விற்றதாகப் போலிசார் கூறுகின்றனர்.

இதுகுறித்த தகவல்களைப் போலீசாரிடம் தாம் பகிர்ந்துள்ளதாக அமேசான் நிறுவனம் கூறியிருக்கிறது.

"தவறான நடத்தையை அமேசான் சிறிதும் சகித்துகொள்ளாது, எங்கள் கொள்கைகளையோ, சட்டங்களை மீறும் நபர்கள் மீதோ, மூன்றாம் தரப்பினர் மீதோ அமேசான் கடுமையான நடவடிக்கை எடுக்கும்," என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்நிறுவனம் சட்டவிரோதமான பொருட்கள் பட்டியலிடப்படுவதையோ விற்பதையோ அனுமதிப்பதில்லை எனவும், சட்டவிரோதமான பொருட்கள் சார்ந்த விதிகளை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது.

மத்தியப் பிரதேச போலீசார் அமேசான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

"போலீசாரின் கேள்விகளுக்கு பதிலாக அந்நிறுவனம் கொடுத்த ஆவணங்களில் இருக்கும் பதில்களுக்கும், விவாதங்களில் வெளிவந்த தகவல்களுக்கும் இருந்த முரண்பாட்டின்" காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகப் போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எத்தனை நிர்வாகிகளின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறவில்லை.

அமேசான் வலைதளம் வழியாக, சுமார் $148,000 (இந்திய மதிப்பில் சுமர் 1.1 கோடி ரூபாய்) மதிப்புள்ள 1,000 கிலோ மரிஜுவானா போதைப்பொருள் கடத்தப் பட்டிருக்கிறதென்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது அமேசானின் இந்தியத் தொழில் பிரிவு எதிர்கொண்டிருக்கும் வெகு சமீபத்திய வழக்காகும், இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தொழில்சார் போட்டி குறித்த ஒரு விசாரணையை எதிர்கொண்டு வருகிறது.

அமெரிக்கச் சில்லறை விற்பனைப் பெருநிறுவனமான வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டுடன், அமேசான் இந்தியாவும், சில விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதத்தில், அமேசான் இந்தியாவின் ஒன்றோ அதற்கு மேற்பட்ட ஊழியர்களோ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அந்நிறுவனம் ஒரு உள் விசாரணையைத் துவக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, நாட்டின் புகழ்பெற்ற சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வந்தனர்.

சென்ற மாதம், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கானுடைய 23 வயது மகன் ஆர்யன் கான், ஒரு பார்ட்டியில் போதைப் மருந்து பயன்படுத்தியதாகக் கூறிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இந்திய ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :