You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது: பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய வீரர் - யார் இவர்?
இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (நவம்பர் 22, திங்கட்கிழமை) வீர் சக்ரா விருது வழங்கி கெளரவித்தார்.
பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து 2019 பிப்ரவரி 27 அன்று வான்வெளியில் நடந்த போரில் பாகிஸ்தான் விமானப் படையின் F-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
பாலகோட் தாக்குதலுக்குப் பிறகான போர் ஏற்படுவது போன்ற சூழல் நிலவிக் கொண்டிருந்த போது, இதே அபிநந்தன் வர்த்தமானின் எம்.ஐ.ஜி 21 ரக விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி சில நாட்கள் அவர்கள் காவலில் இருந்தார்.
இந்திய அரசின் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அவரை 2019 மார்ச் 1ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்து நினைவுகூரத்தக்கது.
அபிநந்தன் 1983ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் காஞ்சிபுரத்தில் இருந்து 19 கிமீ தொலைவில் உள்ள திருப்பனமூர் என்ற கிராமத்தில் உள்ளது. இவரது தந்தை ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் மற்றும் அவரது தாயார் ஒரு மருத்துவர்.அபிநந்தன் அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் படித்தார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார். 2004ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் குழுவில் அதிகாரியாக அபிநந்தன் நியமிக்கப்பட்டார். இவர் பதிண்டா மற்றும் ஹல்வாராவில் உள்ள இந்திய விமானப்படை மையங்களில் பயிற்சி பெற்றார், 2006ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விமானப்படை லெப்டினன்ட்டாக ஆக பதவி உயர்வு பெற்றார். 2010ஆம் தேதி ஜூலை 8ஆம் தேதி ஸ்குவாட்ரன் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிறகு அவர் MiG-21 பைசன் படைக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு Su-30 MKI போர் விமானியாக இருந்தார். அவர் 2017ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார்.அபிநந்தனின் மனைவி தான்வி ஓய்வுபெற்ற ஹெலிகாப்டர் விமானி. இவரது குடும்பம் தற்போது சென்னையில் வசித்து வருகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்திய அரசு இதுவரை 21 பேருக்கு பரம் வீர் சக்ரா, 212 பேருக்கு மகா வீர் சக்ரா, 1,324 பேருக்கு வீர் சக்ரா விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. அதே போல 97 பேருக்கு அசோக சக்ரா, 483 பேருக்கு கீர்த்தி சக்ரா, 2,095 பேருக்கு செளர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய பதக்கங்கள் போர் கால பதக்கங்களாகவும், அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, செளர்ய சக்ரா அமைதி கால பதக்கங்களாக கருதப்படுகின்றன.
இதில் 70.3 சதவீத பதக்கங்களை இந்திய ராணுவமும், 9.7% பதக்கங்களை இந்திய விமானப் படையும், 3.1% பதக்கங்களை இந்திய கடற்படையும் பெற்றுள்ளனர். ராணுவத்தினர் போக இந்தியாவில் துணை ராணுவத்தினர், மாநில காவல்துறை கூட இந்த பதக்கங்களை வென்றுள்ளன. 382 பொதுமக்கள் கூட இந்த பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- எஸ்ஐ பூமிநாதன் கொலை: இரு சிறார்கள் உள்பட மூன்று பேர் கைது - என்ன நடந்தது?
- 'தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை' தாலிபனின் புதிய விதிமுறை
- இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
- இரண்டாம் உலகப் போரில் இறந்த ஆஸ்திரேலியர்: 80 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்தது
- கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மூவர் காயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்