You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் கோழி பாக்கம், வெள்ளை பாக்கம், பெரிய கங்கனாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காக்க, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் தற்போது குடியிருப்பு பகுதியில் தேங்கிய வெள்ளநீர் குறைந்ததால், முகாம்களில் இருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பி செல்கின்றனர். வீடுகளுக்கு மக்கள் திரும்பினாலும், அவர்களால் உணவு சமைக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது," என்றார் அவர்.
"ஆய்வின் போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர். அவர்களது தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை கனமழையாலும், வெள்ளத்தாலும் 2,683 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 5,610 ஹெக்டேர் விளை நிலங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடிந்த பிறகு தான், மொத்தம் எவ்வளவு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தெரியவரும். வீடுகள் மற்றும் பயிர் பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்படும். மழையால் இதுவரை 745 கால்நடைகள் இறந்துள்ளன. அதற்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
நாளை மறுநாள் கடலூர் வர உள்ள மத்திய குழுவினர் வீடு, விளை நிலங்கள், சாலை உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்து, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள். கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு, வெள்ளம் வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வரும் போதே முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் கிராம புறங்களில் மக்கள் தண்ணீர் வீடுகளுக்குள் வருவதற்கு முன்பாக முகாம்களுக்கு செல்வதில்லை. தண்ணீர் எப்போது வீடு பக்கம் வருகிறதோ, அதன் பிறகே மக்கள் முகாம்களுக்கு வருகின்றனர். இதனால் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க, ஆற்றில் வெள்ளம் வந்தால் கரையோர மக்கள் முகாம்களுக்கு முன்னதாக செல்ல வேண்டும். இருப்பினும் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் எவ்வித உயிரிழப்பும் இல்லை.மேலும் வெள்ள பாதிப்பை கணக்கெடுக்க, ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தாசில்தார், அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடக்க உள்ளது. மேலும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார் சிறப்பு அதிகாரி.
தொடர்ந்து பேசிய அவர், "தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் 17 கிராமங்களும், 8 நகர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு உணவும், மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்து வருவதால், தற்போது 1,000 பேர் கிராம பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூலம் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்படும். வெள்ளம் வடிந்த பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து 100 பணியாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் தற்போது துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்," என்று கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு?
- பெங்களூரைச் சூழ்ந்திருக்கும் பிட்காயின் ஊழல் அரசியல் - நடந்தது என்ன?
- கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் 5 லட்சம் பேர் பலியாகலாம்: WHO எச்சரிக்கை
- போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?
- கிலோ கணக்கில் கறி சாப்பிட்டவருக்கு தடை விதித்த சீன உணவகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்