You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது
கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணற்றில் திண்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உள்பட மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக உயிரிழந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யபட்டுள்ளார்.
இவர்களில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, அவரது வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்தவர் சுஜா. இவருக்கும் குருநாதன் என்பவருக்கு திருமணமாகி ஓர் ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுஜா கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டினத்தை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மறுமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் காவல் கிணற்றில் பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
சுஜா தனது இரண்டாவது கணவர் ஜேசு அந்தோணிராஜுடன் காவல்கிணற்றில் உள்ள தனியார் ஹோட்டலில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி மாதேஷ், மகேஸ்வரி ஆகிய இரு குழந்தைகளும் திண்பண்டம் வாங்க காவல்கிணற்றில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அடிக்கடி அந்தக் கடையில் திண்பண்டம் வாங்கச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அதே போல அன்றும் இரண்டு குழந்தைகளும் கடையில் திண்பண்டம் வாங்கி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் திண்பண்டத்திற்கு பணம் கொடுக்காமல் திருடி சென்றதாக சுஜாவின் இரண்டாவது கணவர் ஜேசு அந்தோணிராஜியிடம் கடை ஊழியர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜேசு அந்தோணிராஜ் வீட்டிற்கு வந்து குழந்தைகளை கூப்பிட்டு விசாரித்து அடித்துள்ளார்.
மேலும் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மூன்று குழந்தைகள் மீதும் ஊற்றி கடந்த 17ம் தேதி தீ வைத்துள்ளார். இதில் மாதேஷ், மகராசி இரண்டு பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். 10 வயது சிறுமி மகேஸ்வரி தீயில் சிக்கிக் கொண்டார்.
சிறுமியின் உடல் முழுவதும் தீ பரவியது. 90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அச்சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி மகேஸ்வரி உயிரிழந்தார்.
முன்னதாக, இதுகுறித்து பணகுடி போலீசார் ஜேசு அந்தோணி ராஜின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது சிறுமி உயிரிழந்ததால் வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
ஜேசு அந்தோணிராஜ் இப்போது காவல் துறையால் கைது செய்யபட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
- 85 நிமிடம் அமெரிக்க அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்: இந்த அதிகாரம் பெற்ற முதல் பெண்
- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மோதி அரசின் பின்வாங்கல் சாணக்கிய தந்திரமா?
- இன்னும் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?
- கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?
- தூத்துக்குடியில் இரவு நேரங்களில் காரில் சென்று ஆடு திருடி வந்த கும்பல் சிக்கியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்