You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேளாண் சட்டங்கள்: மோதியின் அறிவிப்பால் விவசாயிகள் போராட்டம் திரும்பப் பெறப்படுமா?
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொளி காட்சி வாயிலாக அறிவித்தபோதும், நாடாளுமன்றத்தில் அவற்றை முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் காணொளி உரை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான சில நிமிடங்களில், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "விவசாயிகள் வாழ்க" என்று முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தில் இடம்பெற்ற அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த், "பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமின்றி வேறு சில விஷயங்களுக்காகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அது குறித்து மத்திய அரசு எங்களுடன் பேச முன்வர வேண்டும்," என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதை கைவிட்டு விட்டு, வீடுகளுக்கு திரும்ப விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் போராட்ட களத்திலேயே காத்திருப்போம்," என்றார் ராகேஷ் திகெய்த்.
முன்னதாக, இன்று காலையில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "இந்தியாவின் விவசாய சந்தைகளை தாராளமயமாக்க கடந்த ஆண்டு மூன்று பண்ணை சட்டங்கள் கொண்டு வரப்பட்டன," என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்,
"சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான அரசியலமைப்பு செயல்முறை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும். "விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கு முழுமையாக சேவை செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நல்ல நோக்கத்துடன் விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், அதை விவசாயிகள் விரும்பவில்லை," என்று பிரதமர் தெரிவித்தார்.
எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்
இந்திய நாடாளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட மொத்த சந்தைகளுக்கு வெளியே வாங்குபவர்களுக்கு நேரடியாக விற்க இந்த சட்டம் வகை செய்தது. மேலம் இது விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் என்று அரசு தெரிவித்தது. இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற முடியாது, வேண்டுமானால் திருத்தம் செய்யலாம் என்றும் அது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது.
இருப்பினும், விவசாயிகள் தரப்பு முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், மூன்று சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது.
இதன் பிறகு இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இறுதித்தீர்ப்பு வழங்கப்படும்வரை மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றும் நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இதன் பிறகும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை இணைக்கும் உத்தர பிரதேச நெடுஞ்சாலை, ஹரியாணாவை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த நெடுஞ்சாலைகளின் ஒரு பகுதியில் கூடாரம் போட்டு அவர்கள் நடத்தி வரும் போராட்டங்களால் ஒரு பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விவசாயசிகளும் டெல்லியின் கடுங்குளிரில் போராட்ட களத்தில் இருக்கிறார்கள்.
திடீர் அறிவிப்பு ஏன்?
விவசாயிகள் அதிகம் வாழும் உத்தரபிரதேச மாநிலம், பஞ்சாப் மாநிலம் ஆகியவற்றில் அடுத்த ஆண்டு சட்டப்ரபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தகைய சூழலில் பிரதமர் மோதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அரசியல் பின்னணி கொண்டதாக விவர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், "தேர்தல் தோல்வியை தடுக்கவே இதுபோன்ற அறிவிப்பை பிரதமர் இப்போது வெளியிட்டுள்ளார்," என்று கூறியுள்ளார்.
மத்தியில் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே விவகாரத்துக்காக நீடித்து வரும் மிகப்பெரிய போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?
- ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன?
- கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி
- தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
- சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி
- குஜராத்தில் அசைவ உணவு கடைகள் தொடர்பான சர்ச்சை: பாஜக சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்