You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நோரோ வைரஸ்: கேரளாவை அச்சுறுத்தும் பாதிப்பு - அறிகுறிகள் என்ன? எப்படி தற்காத்துக் கொள்வது?
கேரள மாநிலத்தில் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக நம்பப்படும் நோரோ வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வயநாடு அருகே உள்ள பூக்கோடு என்ற கிராமத்தில் கால்நடை மாணவர்கள் 13 பேரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதை அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"இப்போதைக்கு இந்த வைரஸ் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.
நோரோ வைரஸ் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. இதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.
தீவிர வேகத்தில் பரவும் தன்மையைக் கொண்ட இந்த வைரஸ் தாக்கினால், சம்பந்தப்பட்ட நபருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இது வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குவதாக கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து அது 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே வாழும். அதற்குள்ளாக இது இரைப்பை, குடல் நோயை தோற்றுவித்து விடும் தன்மையைக் கொண்டுள்ளது. வயிறு மற்றும் குடலின் உட்புறத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை இந்த வைரஸ் உண்டாக்கும்.
நோரோ வைரஸ் பரவிய ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள்ளாக நோயாளி மருந்து ஏதும் உட்கொள்ளாமல் முழுமையாக குணமடையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயோதிகர்கள், குழந்தைகள், ஏற்கெனவே மருத்துவ குறைபாடுடையவர்களுக்குத்தான் இந்த வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் எப்படி பரவுகிறது?
இந்த வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் கையாளும் உணவை சாப்பிடுவது அல்லது அவரால் தொடப்பட்ட மேற்பரப்பை பிறர் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் வாந்தி எடுக்கும்போது அது அருகில் உள்ளவர் மீது தெறிக்கும்போதும் அதன் நுண்ணிய துகள்கள் வைரஸ் பரவ காரணமாகலாம். ஒரு சிறு துளி விழுந்தாலும் அது உணவு, தண்ணீரில் கலந்து விடும்.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், பெரும்பாலும் விலங்குகளின் எச்சங்கள், மலம் போன்றவற்றின் மீது மொய்க்கும் கொசுக்கள் பிறகு மனிதர்கள் மீது மொய்க்கும் போதே அதிகமாகப் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைசுற்றுதல், வயிற்று வலி போன்றவை நோரோவைரஸின் பொதுவான அறிகுறிகள். இது தவிர வைரஸ் பாதித்தவர்களுக்கு தீரா காய்ச்சல், உடல் வலி, தலை வலி போன்றவையும் இருக்கும்.
உடலின் திரவ சக்தியை விரைவாக இழப்பதால், பாதிக்கப்பட்ட நபர் விரைவாகவே நீரிழப்பு நிலையை எதிர்கொள்வார். நீரிழப்பு நிலைக்கு பொதுவான அறிகுறிகளாக தாகம் எடுப்பது, கடுமையான துர்நாற்றம் வீசுவது, லேசானது முதல் கடுமையான தலைவலி ஏற்படுதல், உடல் சோர்வு, உதடுகள் வறண்டு போகுதல், அசாதாரணமாக அதிகமான முறை சிறுநீர் கழித்தல் இருக்கும்.
உடலில் உள்ள திரவசக்தியை வேகமாக இழப்பதாக பாதிக்கப்பட்ட நபர் உணர்ந்தால், அவர் போதுமான அளவில் திரவ பானத்தை உட்கொள்ளுதல் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எப்படி சிகிச்சை அளிப்பது?
நோரோ வைரஸுக்கு இதுதான் மருந்து என்று குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை பரிந்துரைக்கபடவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நபர் தமது உடலின் சக்தியை இழக்காமல் இருக்க தொடர்ந்து காய்ச்சிய நீர், சூப் வகைகள், பழச்சாறுகள், நீரிழப்பை தவிர்க்க திரவ நீர் கரைசல்கள், எலக்ட்ரோலைட் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். கடல் மீன் மற்றும் நண்டு போன்ற அசைவ உணவு வகைகளை நன்கு சமைத்த பின்னரே உண்ண வேண்டும். திறந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் 72 மணி நேரத்துக்கும் குறைவான காலத்தில் குணம் அடைந்து விடுவர். ஆனால், இந்த பாதிப்பு காலத்தில் அவர்கள் தங்களுக்குப் பரவிய வைரஸை பிறருக்கு பரப்பாமல் தவிர்ப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பிற செய்திகள்:
- பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாடு தொடர்பாக சமரசம் - என்னதான் சாதிக்கும் இந்த மாநாடு?
- இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
- விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி
- கிராம மக்களே களமிறங்கி தூர் வாரிய கால்வாய்: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய்
- அண்டார்டிகா பென்குயின்: 3,000 கிலோமீட்டர் பயணித்து வந்தது ஏன்? கடல் சூழலில் மாற்றம் காரணமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்