You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்ததாகக் கூறி கோவையில் போராட்டம்: ஆசிரியர் கைதுக்குப் பிறகும் தொடர்கிறது
கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, உடலை வாங்காமல் அவரது பெற்றோரும், மற்றவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி முதல்வரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்' என்கிறார்கள் போராட்டம் நடத்தும் உறவினர்கள்.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா காலம் என்பதால் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தன. இதற்கிடையில், அவ்வப்போது பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடந்ததால் மாணவியும் பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.
ஒருகட்டத்தில், `அந்தப் பள்ளியில் படிக்கப் பிடிக்கவில்லை' என மாணவி கூறியதால் பெற்றோரும் பூமார்கெட் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவியை பிளஸ் 2 வகுப்பில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் மாணவி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் குடும்பத்தினர் கண்டெடுத்தனர்.
அதில், `யாரையும் சும்மா விடக்கூடாது,' என்று குறிப்பிட்டு சிலரது பெயர்களை மாணவி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் உடலைக் கைப்பற்றிய உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அதை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி இறந்த தகவலைக் கேள்விப்பட்டு பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், மாதர் சங்கம், முற்போக்கு இயக்கங்கள் ஆகியவற்றை சேர்ந்தோர் அரசு மருத்துவமனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதில் தனியார் பள்ளியில் இயற்பியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
மேலும், சிறப்பு வகுப்புகள் நடக்கும்போது பள்ளியில் வைத்தே மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள மற்றவர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட போதிலும், மாணவியின் உடலை வாங்குவதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், 'அந்த ஆசிரியரால எங்க மகளுக்குப் பிரச்னை வந்ததும் பிரின்சிபால்கிட்ட சொல்லியும் அவங்க சரியா நடவடிக்கை எடுக்கலை. அதனால்தான் என் பொண்ணு இறந்துட்டா. இதுக்குக் காரணமான பிரின்சிபல் மீராவை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்,' என உறுதியாக கூறிவிட்டனர்.
``என்ன நடந்தது?" என மாணவியின் தாயாரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
"அந்த ஸ்கூல்ல ஆசிரியரால பிரச்னை ஏற்பட்டதும் என் மகளை கவுன்சிலிங்குக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்க என்ன நடந்ததுன்னு எங்களுக்குத் தெரியலை. பிரின்சிபலும், `இதைப் பத்தி உங்க அப்பா, அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்'னு சொல்லியிருக்காங்க. ஆறு மாசமாக என் பொண்ணுக்கு டார்ச்சர் நடந்திருக்கு. அந்த ஸ்கூல் வேண்டாம்னு அவ ஏன் சொன்னான்னு இப்பத்தான் தெரியுது" எனக் கலங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், ``இந்த சம்பவத்தைப் பத்தி அந்த ஸ்கூல் பிரின்சிபல் பேசும்போது, `பஸ்ல ரெண்டு பேர் இடிச்சாங்கன்னு பொறுத்துட்டுதானே போறோம், அப்படி நினைச்சுக்கோ'ன்னு என் பொண்ணுகிட்ட சொல்லியிருக்காங்க. இதை மனசுக்குள்ளேயே வச்சிருந்துட்டு என் பொண்ணு போய் சேர்ந்துட்டா. பெத்த அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்னு ஏன் சொல்லணும். இப்ப என் மகளைக் காப்பாத்த முடியாம போயிருச்சே. அந்த வாத்தியார், என் மகளை ஏமாத்தி ஏதோ பண்ணியிருக்கார். இதனால ஸ்கூல் பேர் கெட்டுப் போகும்னு எங்ககிட்ட சொல்லாம பிரின்சிபல் மறைச்சுட்டாங்க," என்கிறார்.
``கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால ஆன்லைன்ல கிளாஸ் நடந்துச்சு. போன வருஷம் ஏப்ரல், மே மாசம் ஸ்கூலுக்குப் போனபோது அங்க மிதுன் சக்ரவர்த்தின்னு ஒருத்தர் கிளாஸ் எடுத்தார். அவர், மாணவியோட செல்போன் நம்பரை வாங்கிப் பேச ஆரம்பித்தார். ஒருநாள் ஸ்கூலுக்கு மாணவியோட அப்பா வர்றததுக்கு லேட் ஆனதும் அவர். மாணவியை வீட்டுல கொண்டு போய்விட்டார். இதன்பிறகு, ஒருநாள் ஸ்கூல்ல அவளை மட்டும் அந்த சார் மாடிக்கு வரச் சொன்னார். அங்க அவகிட்ட தப்பா நடந்துகிட்டார். அதை நினைச்சு நினைச்சு அவ அழுதா," என்கிறார், இறந்து போன மாணவியின் பள்ளி நண்பரான வைஷ்ணவ் என்பவர்.
``இந்த சம்பவம் பத்தி 2, 3 மாசம் கழிச்சுதான் என்கிட்ட அவ சொன்னா. "நான் உடனே, பிரின்சிபல் மேடம்கிட்ட சொன்னேன். அவங்களோ, `உன் மேலயும்தான் தப்பு இருக்கு. அந்த சாரை டிஸ்மிஸ் பண்ணிடறேன்'னு சொன்னாங்க. ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இதன்பிறகும், `என்னால அங்க படிக்க முடியல, மதுரைக்கே போய் செட்டில் ஆகறேன்'னு பலமுறை சொல்லி அழுதாள்" என்கிறார் அந்த நண்பர்.
அதன்பிறகும் பித்து பிடிச்ச மாதிரி இருந்ததால மனநல மருத்துவர்கள்கிட்ட கூட்டிப் போனாங்க. ஒருகட்டத்தில் பசங்களைப் பார்த்தாலே பயப்பட ஆரம்பிச்சுட்டா. அன்னைக்கு நடந்த சம்பவத்துல இருந்து அவளால வெளிய வரவே முடியலை. அவ இறந்த அன்னைக்கு சாயந்தரம் நாலரை மணிக்கு எனக்கு அவகிட்ட இருந்து போன் வந்துச்சு. நான் எடுக்கலை. மறுபடியும் போன் பண்ணினேன். அவகிட்ட இருந்து பதில் வரலை. அவ தற்கொலை பண்ணிக்குவான்னு நினைச்சுகூட பார்க்கலை" என்கிறார் வைஷ்ணவ்.
இந்த விவகாரத்தில் தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கமும் முற்போக்கு இயக்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக செய்தி ஊடகங்களிடம் பேசிய சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், `` மாணவியின் பெற்றோர் கடந்த செப்டம்பர் மாதம் எங்களிடம் வந்து மாற்றுச் சான்றிதழை கேட்டனர். நாங்களும் அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்துவிட்டோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
மாணவியின் மரணம் தொடர்பாக, உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மசூதா பேகத்தை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். `` விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று மட்டும் தெரிவித்தனர்.
மாணவியின் மரணம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், `பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க மகளிரணிச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, ` ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாக கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவர்கள் நடத்தி வரும் போராட்டமும் டிவிட்டரில் ட்ரெண்டானது.இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தகவலை கோவை மாநகர காவல்துறை துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாடு தொடர்பாக சமரசம் - என்னதான் சாதிக்கும் இந்த மாநாடு?
- இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
- விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி
- கிராம மக்களே களமிறங்கி தூர் வாரிய கால்வாய்: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய்
- அண்டார்டிகா பென்குயின்: 3,000 கிலோமீட்டர் பயணித்து வந்தது ஏன்? கடல் சூழலில் மாற்றம் காரணமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்