அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் கணவருக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை

1991-96 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்தாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு தலா ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் இந்திரகுமாரி. அந்த ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அதில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல இந்திரகுமாரி மீது, பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பிறகு 1997ல் மற்றொரு வழக்குத் தொடரப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கான பொருட்களை ஊழல் செய்து வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்திர குமாரி விடுவிக்கப்பட்ட நிலையில், 1997ல் தொடரப்பட்ட வழக்கில் அவர் இப்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

வழக்கின் விவரம்

இந்திர குமாரியின் கணவர் பெயர் பாபு. இந்திரகுமாரி அமைச்சராக இருந்தபோது அவரது கணவர் பாபுவை நிர்வாக அறங்காவலராகக் கொண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மெர்சி மதர் இந்தியா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவக்கினார்.

மேலும் கல்விக்கான அறக்கட்டளை ஒன்றும் துவங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசிடமிருந்து 15.45 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை சரியான வழியில் செலவுசெய்யாமல், முறைகேடாக செலவுசெய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இந்திரகுமாரி, அவரது கணவரும் வழக்கறிஞருமான பாபு, சமூகநலத் துறையின் முன்னாள் செயலர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம், இந்திர குமாரியின் உதவியாளர் வெங்கடேஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. அரசின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதால், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென வழக்குத் தொடரப்பட்டது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. இதற்குப் பிறகு இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் நீதிபதி அலீசியாக வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனை விவரம்

இதில் இந்திரகுமாரியின் உதவியாளரான வெங்கடேஷ் மீது போதிய ஆதாரம் இல்லையென விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் கிருபாகரன் ஐ.ஏ.எஸ். இறந்துவிட்டார். மீதமுள்ள மூன்று பேரில் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கும் ஐந்தாண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் செயலர் சண்முகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு விதிக்கப்பட்டதும், தங்கள் வயதின் காரணமாக தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென குற்றவாளிகள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :