You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீச்சு: அதிபருக்கு என்ன நடந்தது?
பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசப்பட்டது. திங்களன்று லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்குவது குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லயான் மேக் ஊடகம் வெளியிட்டுள்ள காணொளியில், எமானுவேல் மக்ரோங்கை நோக்கி எறியப்பட்ட முட்டை அவரது தோளில் வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த முட்டை உடையவில்லை.
இந்த நிகழ்வின்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் 'லிவே லா ரெவொல்யூஷன்' (புரட்சி நீடித்து வாழ்க) என்று முழங்குவதையும் கேட்க முடிகிறது.
அக்காணொளியில் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசப்பட்டதும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் அவரை நெருங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அங்கிருந்து காவலர்களால் அழைத்துச் செல்லப்படுவதையும் அந்தக் காணொளி காட்டுகிறது.
அதிபர் மீது முட்டை வீசியதற்காக சர்வதேச உணவு மற்றும் விடுதிகள் தொழில் கண்காட்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசப்பட்டது நிகழ்வு குறித்து கருத்து தெரிவிப்பதற்காக பிரான்ஸ் அதிபர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பதில் எதுவும் கிடைக்கவில்லை.
"என்னிடம் அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், அவர் வந்து சொல்லலாம்," என்று அப்போது அதிபர் சொன்னதைக் கேட்க முடிந்ததாக அங்கிருந்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
அதிபர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்திய நபர் குறித்த அடையாளங்கள் அல்லது அவரது நோக்கம் குறித்த தகவல் எதுவும் அதிகாரிகளால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றின்போது அங்கிருந்த ஒருவரால் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார். அவரைத் தாக்கிய நபர் நான்கு மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, "மக்ரோங் ஒழிக" என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
அதிபர் தாக்கப்பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் வேறுபாடுகள் கடந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
தமக்கு முன்பு அதிபர் பதவியிலிருந்து அவர்களைப் போலவே எம்மானுவேல் மக்ரோங்கும் பொதுமக்களை சந்தித்து உரையாடுவதை விருப்பத்துடன் செய்து வருகிறார்.
'கூட்டக் குளியல்' என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படும் இந்த செயல்பாடு அந்நாட்டு அரசியலில் ஒரு நீண்ட கால வழக்கமாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நடக்க ஆறு மாத காலத்தை விட சற்று கூடுதலான காலமே உள்ளது.
43 வயதாகும் மக்ரோங் அந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் மீண்டும் போட்டியிடுவதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- காசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா?
- SRH vs RR: வீணாய் போனது சஞ்சு சாம்சனின் அதிரடி; ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்
- கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ்
- முகச் சவரம் செய்யத் தடை: ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு
- அசாம் துப்பாக்கிச் சூடு: 'என் மகன் நெஞ்சை துளைத்த தோட்டா' - கண்ணீரில் குடும்பங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்