நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்

- எழுதியவர், ஏ எம் சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு நிஷாந்த், தனுஷ் என இரு மகன்கள் உள்ளனர்.
நிஷாந்த் தனியார் கல்லூரியில், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.தனுஷ் மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு, தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார் ஆனால் இரு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்துள்ளார்
இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக மேச்சேரி காவேரி கல்லூரியில் நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது, இதில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என அச்சமடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என அவரது குடும்பத்தினரும், காவல்துறையினரும் கூறுகின்றனர்..
தற்கொலை வழக்கு
தனுஷின் உடலை மீட்ட காவல்துறையினர், இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் தற்கொலை என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவன் இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று தேர்வு எழுதி மீண்டும் தோல்வி அச்சத்தில் இது போன்ற தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது என இது குறித்து காவல்துறையினர் கூறினர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தில் பலியாகி வருகிறார்கள்.
இதனால் தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இன்று சட்டசபையில் இதற்காக சட்ட முன்வரைவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனுஷின் தந்தை சிவக்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"விடிய விடிய படிச்சான். இரண்டு முறை தோல்வி அடைந்த அச்சத்தில் இப்படி செய்து கொண்டான். பரீட்சைக்கு போக டிரஸ் எல்லாம் தேச்சி வெச்சிருந்தோம். ஊரெல்லாம் நடந்தது, இப்ப என் வீட்லேயும் நடக்கும்னு கனவுலயும் நினைக்கல" என கண்ணீர் விடுகிறார் சிவக்குமார்.
உறவினர்கள் என்ன சொல்கிறார்கள்?
"ஏற்கெனவே இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மன வருத்தத்தில் இருந்தான். டாக்டர் படிப்பு படிக்க வேண்டும் என்று அவனே இஷ்டப்பட்டுதான் படித்தான். நேற்று 12 மணி வரை படித்தான் 12 மணி பிறகு படுக்கச் சென்றான். 3 மணியிருக்கும் எழுந்து போய் தற்கொலை செய்து கொண்டான். இது வரை நீட் தேர்வுக்கு 13 மாணவர்கள் தமிழ்நாட்டில் இறந்து விட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம்," என தனுஷின் சித்தப்பா கூறினார். இவர் பெயரும் சிவகுமார்தான்.
JEE தேர்வில் தேர்ச்சி பெற்றான். அதேபோல ஆர்கிடெக்ட் தேர்விலும் தேர்ச்சி பெற்றான். ஆனால் அவனுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. இந்நாட்டில் இனி யாரும் நீட் தேர்வில் சாகக்கூடாது என்றார் அவரது தாய் மாமா முருகன்.
எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

மாணவனின் சடலம் கூழையூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சென்று மாணவனின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர் பத்திரிகையாளர்களை தவிர்த்து விட்டு அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் செம்மலை வந்திருந்தார் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதை கைவிடாது என்பதை உணர்ந்து கொண்ட நாங்கள், நீட் தேர்வு குறித்து பயிற்சி மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஆனால் திமுகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்குவோம் என வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி மாணவர்களும் இருந்தனர். தற்போது தேர்வு நடைபெறும் என்றவுடன் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன," என்றார்.

அஞ்சலி செலுத்திய பின் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை பெற்றோரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான் அதை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்," என கூறினார்.
"இது ஒரு மாணவரின் பிரச்னை மட்டுமல்ல, எல்லா வீட்டு மாணவர்களின் பிரச்னையாகும். எல்லா அரசியல்வாதிகளின் குழந்தைகளும் கூட இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான் நீட்தேர்வு வேண்டாம் என தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சி மாணவர்களுக்கு துணையாக இருக்கும். எனவே மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பிற செய்திகள்:
- ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
- ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க தாலிபன்கள் புதிய உத்தரவு
- பட்டேதார் சாதியை சேர்ந்த பூபேந்திர பட்டேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












