ஃபிரோஸ் காந்தி நினைவு தினம்: இந்திரா காந்தியின் விதவை கோலத்துக்கு என்ன காரணம்?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி. இந்திரா காந்தி அப்போதுதான் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி பாலம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார். அவரிடம் உடனடியாக ஃபிரோஸ் காந்திக்கு மற்றொரு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஃபிரோஸ் சேர்க்கப்பட்டிருந்த வெல்லிங்டன் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு ஃபிரோஸின் உதவியாளர் உஷா பகத் இருந்தார். "இரவு முழுவதும் திடீரென கண் விழிப்பதும் மயங்கி விழுவதுமாக ஃபிரோஸ் இருந்தார்," என்ற தகவலை அவர் இந்திராவிடம் கூறினார். ஒவ்வொரு முறை கண் விழித்தபோதும் "இந்து எங்கே..." என்றுதான் கேட்டார் என உஷா தெரிவித்தார்.

மருத்துவமனையில் சேரும் ஒரு வாரத்துக்கு முன்பு ஃபிரோஸ் காந்திக்கு நெஞ்சு வலிக்கத் தொடங்கியிருந்தது. அது சமாளிக்க முடியாத வகையில் தொடர்ந்ததால், செப்டம்பர் 7ஆம் தேதி தனது நண்பரும் மருத்துவருமான டாக்டர் ஹெச்.எஸ். கோஸ்லாவை அழைத்து தமது ஒரு வார அவஸ்தையை விளக்கினார் ஃபிரோஸ். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அவருக்கு டாக்டர் கோஸ்லா அறிவுறுத்தினார்.

இதையடுத்து, தாமே காரை ஓட்டிக் கொண்டு கோஸ்லோ இருந்த மருத்துவமனையை அடைந்தார் ஃபிரோஸ். அங்கு அவர் மயங்கி விழுந்தபோது கோஸ்லா இருந்தார். அதன் பிறகு செப்டம்பர் 8ஆம் தேதி ஃபிரோஸ் அருகே இந்திரா நின்றிருந்தார்.

அன்றைய தினம் சில நொடிகளுக்கு ஃபிரோஸ் கண் விழித்தபோது, அவர் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தார் இந்திரா காந்தி. முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்காமலும் எதையும் சாப்பிடாமலும் அவர் இருந்தார். காலை சிற்றுண்டி சாப்பிடுமாறு ஃபிரோஸ் வற்புறுத்தினார். ஆனால், இந்திரா மறுத்து விட்டார். கடைசியில் ஃபிரோஸ் மீண்டும் மயங்கி விழுந்தார். அவரது உயிர் காலை 7.45 மணிக்கு பிரிந்தது.

அன்றைய நாளில் இருந்து மேலும் நான்கு நாட்களுக்கு அவர் வாழ்ந்திருந்தால் அவர் தனது 48ஆம் பிறந்த நாளை கொண்டாடியிருப்பார்.

வெல்லிங்டன் மருத்துவமனையில் இருந்து ஃபிரோஸின் உடலுடன் தீன் மூர்த்தி பவனுக்கு இந்திரா சென்றார்.

இந்திராவின் சுயசரிதையை எழுதிய கேத்ரின் ஃபிராங்க், தனது கணவர் ஃபிரோஸின் உடலை தாமே கழுவி இறுதி அஞ்சலிக்கு தயார்படுத்துவதாகவும் அந்த நேரத்தில் தன்னைச் சுற்றி யாரும் இருக்க வேண்டாம் என்றும் இந்திரா கூறினார் என்று எழுதியுள்ளார்.

நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த மரணம்

இதேவேளை தீன் மூர்த்தி பவனில் உள்ள அனைத்து நாற்காலிகளும் அகற்றப்பட்டன. பொதுமக்கள், தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்த வசதியாக அறைகளும் பாதைகளும் காலியாக்கப்பட்டன. எங்கும் வெள்ளை தரைவிரிப்பான்கள் போடப்பட்டன. இதன் பிறகு பொதுமக்கள் ஃபிரோஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

குறுக்குவாட்டில் போடப்பட்டிருந்த வெள்ளை தரைவிரிப்பானில் சஞ்சய் காந்தியும் ராஜீவ் காந்தியும் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் ஃபிரோஸின் அகால மரணம் குறித்த கவலையில் இருந்த நேரு தமது அறையை விட்டு வெளியே வரவில்லை என்று நயன்தாரா சாஹ்கல் தமது புத்தகத்தில் எழுதியுள்ளார். இவர், நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மூன்று மகள்களில் இரண்டாவது மகள்.

அந்த நாளில் தீன் மூர்த்தி பவனில் நேருவின் விருந்தினராக அங்கு தங்கியிருந்தவர் மேரி சேட்டன். அவர் தனது புத்தகத்தில் "நேருவின் முகம் வாடியிருந்தது. ஃபிரோஸின் முகத்தை கடைசியாக பார்ப்பதற்காக தமது அறையில் இருந்து அவர் சஞ்சய் காந்தியுடன் வெளியே வந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பெர்டில் ஃபால்க் என்ற ஸ்வீடன் எழுத்தாளர் தமது "ஃபார்காட்டன் காந்தி" புத்தகத்தில், அதுநாள் வரை ஃபிரோஸுக்கு இத்தனை மக்கள் செல்வாக்கு இருந்திருக்குமா என்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று நேரு அங்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களைப் பார்த்து கூறியதாக குறிப்பிடுகிறார்.

வெளித்தோற்றத்தில் இந்த துயரத்தை கட்டுப்படுத்தக் கூடியவராக இந்திரா தோன்றினாலும் உள்ளூர அவர் நிலைகுலைந்திருந்தார். அவரது கண்களில் நீர் வெளிவரத் தொடங்கியது.

சிதைக்கு தீ மூட்டிய ராஜீவ்

மறுநாள் செப்டம்பர் 9ஆம் தேதி, ஃபிரோஸ் காந்தியின் சடலம் தேசிய மூவர்ண கொடி போர்த்தப்பட்ட டிரக்கில் ஏற்றப்பட்டபோது அதில் அவரது சகோதரி தெஹ்மினாவும் ஏறினார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட ஃபிரோஸின் பூத உடல் நிகாம்போத் காட் நோக்கி மெதுவாக ஊர்ந்தது. சாலை முழுவதும் இருபுறமும் மக்கள் திரண்டு ஃபிரோஸுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

மயானத்தில் ஃபிரோஸின் சிதைக்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். அவரது கடைசி சடங்குகள் இந்து முறைப்படி நடந்தன.

தனக்கு முதலாவது முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டபோதே, பார்ஸி முறைப்படி தனித்து விடப்படும் சடலத்தின் மிச்சங்கள் கழுகுகளுக்கு இரையாவதை நான் விரும்பவில்லை. அதனால் எனது இறுதி நிகழ்வு இந்து சடங்குகளின்படியே நடக்க வேண்டும் என தமது நண்பர்களிடம் ஃபிரோஸ் கூறியிருந்தார்.

ஆனால், கேத்ரின் ஃபிராங்க் தமது புத்தகத்தில் ஃபிரோஸின் இறுதிச் சடங்குகள் இந்து முறைப்படி நடந்த அதேவேளை, பார்ஸி முறைப்படியும் நடப்பதை இந்திரா உறுதி செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெர்ட்டில் ஃபால்க் தமது 'ஃபர்காட்டன் காந்தி' புத்தகத்தில் பார்ஸி முறைப்படி ஃபிரோஸின் உடல் முன்பாக "கே-சார்னு" என்ற பார்ஸி முறையிலான இறுதிப்பிரார்த்தனை நடந்தபோது இந்திராவும் அவரது இரண்டு மகன்களும் அந்த அறையில் இருந்து வெளியே சென்றனர் என்று கூறியுள்ளார்.

அன்ஹாவெட்டி என்ற அந்த பிரார்த்தனை பகுதி முழுமையாக வாசிக்கப்பட்டதும், ஃபிரோஸின் வாயில் துணி மூடப்பட்டதாகவும் பெர்ட்டிலின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து ஃபிரோஸின் அஸ்தி, ரயில் மூலம் அலகாபாதுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அங்கு ஜவாஹர் லால் நேரு இருந்தார். மற்றொரு பகுதி அலகாபாதில் உள்ள பார்ஸி மயானத்தில் புதைக்கப்பட்டது.

ஃபிரோஸின் நண்பர் ஆனந்த் மோகன், அவரது அஸ்தியின் ஒரு பகுதி சூரத்தில் உள்ள ஃபிரோஸ் காந்தியின் பூர்விக இடத்தில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டதாக கூறினார்.

பி.டி. டாண்டனின் "நேரு... யு டோன்ட் நோ" என்ற புத்தகத்தில் நேரு தனது சிரம் தாழ்த்தி கரங்களை முகத்தின் மீது வைத்தபடி சில நிமிடங்கள் இருந்ததால், அவர் அழுதிருப்பார் என்று சுற்றியிருந்தவர்கள் கருதினர். ஆனால், அவர் கரங்களை எடுத்தபோது அவரது கண்கள் வறண்டே காட்சியளித்தன என்று கூறப்பட்டிருந்தது.

ஃபிரோஸ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட நாளில் அவர் படித்த சிஏவி கல்லூரிக்கு, இரங்கல் கூட்டம் நடத்துவதற்காக பாதி நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

"எனக்கு ஃபிரோஸை பிடிக்காது ஆனால், அவரை நேசித்தேன்"

ஃபிரோஸின் இறுதி நிகழ்வில் இந்திரா காந்தி வெள்ளை நிற புடவை அணிந்திருந்தார். இந்து சமயத்தில் அந்த ஆடை கணவனை இழந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அணியும் ஆடையாக இருந்தது. அது துக்கத்தின் வெளிப்பாடாகவும் கருதப்பட்டது.

ஆனால், ஃபிரோஸ் இறந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திரா வெள்ளை ஆடை அணிவதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். ஆனால், அது தமது விதவைக் கோலத்தை குறிப்பதற்காக அல்ல. ஃபிரோஸ் என்னை விட்டுச் சென்றதும், எல்லா நிறங்களும் என் வாழ்வை விட்டுச் சென்று விட்டன என்று இந்திரா கூறியிருந்தார்.

அந்த காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் டோம் மோரெஸுக்கு அளித்த நேர்காணலில் "என்னை மிகவும் பாதித்தது ஃபிரோஸின் மரணம். எனது தாத்தா, தாய், தந்தை இறந்ததை என் கண் கூடாக பார்த்தவள் நான். ஆனால், ஃபிரோஸின் மரணம் என்னை மோசமாக நிலைகுலையச் செய்தது," என்று கூறியிருந்தார்.

மற்றொரு இடத்தில் பேசும்போது "எனக்கு ஃபிரோஸை மிகவும் பிடித்திருக்கவில்லை. ஆனால், அவரை நான் நேசித்தேன்," என்று கூறியிருந்தார்.

தமது கணவர் மீதான உணர்வை வெளிப்படுத்த இந்திரா மிகவும் சரியாக பயன்படுத்திய உணர்ச்சிமிக்க வார்த்தைகள் அவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :