You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திரா காந்தி மதசார்பற்றவரா? என்ன சொல்கிறது வரலாறு?
- எழுதியவர், சயீத் நக்வி
- பதவி, இதழியலாளர்
(இந்திரா காந்தி பிறந்த நாளுக்காக இந்தக் கட்டுரை மீள்பகிர்வு செய்யப்படுகிறது)
நான் இந்திரா காந்தியைப் பார்ப்பதற்கு முன்பே ஃபிரோஸ் காந்தியை மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன். காரணம், எனது மாமா சயீத் வாசி நக்வியின் ரேபரேலி சட்டமன்றத் தொகுதி அமைத்திருந்த அதே ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பெரோஸ் இருந்தார்.
நிலக்கிழார்கள் நிறைந்த அவத் பகுதியில், நேரு குடும்பம் பற்றி அதிகம் யாரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், ஃபிரோஸ் காந்தியின் பூர்விகம் குறித்த முனகல்கள் இருந்துகொண்டே இருக்கும்.
இந்தியாவின் முக்கியமான பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி, ஒரு 'பனியா' (தொழில் செய்யும் சமூகம்) சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்கலாம். 'காந்தி' என்பது பனியா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் என்று அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், உண்மையில் பெரோஸின் உண்மையான பெயர் 'ஃபிரோஸ் ஜெஹாங்கிர் காண்டி'. அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர். பனியா வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.
'காண்டி' என்பது 'காந்தி' என மாறியது, நேரு-காந்தி குடும்பம் என்று, இந்திரா காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களால் பெரிதுபடுத்தப்படுவதற்கு முந்தைய நிலையாக இருந்தது. இதன்மூலம், ஜவாஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரும் சங்கமத்தையும் அந்தக் குடும்பம் பிரதிநிதித்துவப்படுத்தியது.
பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1966-இல் இறந்ததைத் தொடர்ந்து, காங்கிரசின் பழமைவாதத் தலைவராக இருந்த மொரார்ஜி தேசாயை கட்சிக்குள்ளேயே தோற்கடித்து பிரதமர் பதவியைப் பிடித்தார் இந்திரா.
இந்திரா தலைமையில் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் அக்கட்சிக்கு பலத்த அடியாக இருந்தது. காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் தோற்றது. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்திராவை விமர்சித்த ராம் மனோகர் லோகியாவுக்கு இந்தச் சரிவு கூடுதல் வாய்ப்பாக அமைந்தது.
"பேசாத பொம்மை" என்று பொருள்படும் "கூங்கி குடியா" எனும் தொடரை, இந்திராவை விமர்சிக்க அவர் பயன்படுத்தினார்.
நேருவின் மகள் என்பது 1957-இல் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவதற்கு உதவியது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பழமைவாத வலதுசாரிகளை எதிர்க்க அவருக்கு அது உதவிகரமாக இருந்தது. கட்சிக்குள் இருந்த வலதுசாரிகளை சமாதானப்படுத்துவதும், கேரளாவில் அமைந்த உலகின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசை அவர் கலைக்கக் காரணமாக இருக்கலாம்.
இந்திராவின் ரத்தத்தில் நனைந்த Soniyaவின் இரவு உடை
இந்த கொள்கை சமநிலையின்மை, 1969-இல் கட்சியில் ஏற்பட்ட பிளவு, வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு உள்ளிட்டவற்றால் சரிசெய்யப்பட்டது. "சுயநலன் கருதி செயல்படும் இடது" என்று டைம்ஸ் இதழின் அப்போதைய லண்டன் செய்தியாளர் பீட்டர் ஹஸ்லேக்கர்ஸ் குறிப்பிட்டார்.
அவரது முதன்மை செயலராக இருந்த பி.என்.ஹக்ஸர் ஒரு இடதுசாரியாக இருந்தார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட இந்திராவுக்கு ஆலோசனை சொன்னவர் அவரது அமைச்சரவையில் இருந்த மோகன் குமாரமங்கலம்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்ரீபத் டாங்கே, காங்கிரஸ் உடனான உறவை ஒற்றுமையாக இருந்துகொண்டே போராடும் கொள்கை என்று கூறினார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் மக்கள் ஆதரவுக் கொள்கைகளுக்காக ஒற்றுமை, மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்காக போராட்டம்.
சோவியத் யூனியனின் ஆதரவுடன் வங்கதேசம் உருவாக அவர் உதவிய சமயம் காங்கிரசில் இடதுசாரித் தன்மை அதிகமாக இருந்தது. அப்போது அடல் பிஹாரி வாஜ்பாயி இந்திராவை, "துர்க்கை" என்று குறிப்பிட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியுடனான இந்திராவின் நெருக்கம் இந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு பிரச்சனையைக் கிளப்பியது. அப்போது, மேற்கத்திய நாடுகள் கம்யூனிச கொள்கைகளுடன் எதிர்ப்போக்கு கொண்டிருந்த சமயம்.
காங்கிரஸ் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருந்த சோசியலிஸ்டுகள், இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான ஜன சங்கம் ஆகியவை காந்தியவாதத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் இந்திரா காந்தியின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஜே.பி இயக்கம் அல்லது பிஹார் இயக்கம் என்று அறியப்படும் இயக்கத்தைத் தொடங்கினர்.
அந்த இயக்கத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு இந்திரா உள்ளானார். தனது கதம் குவான் இல்லத்தில் தங்க ஜெயப்பிரகாஷ் என்னை அழைத்தார். அதனால், நேரு குடும்பத்தின் நீண்டகால நண்பரான முகமத் யூனுஸ் மூலம் இந்திரா என்னைத் தொடர்புகொண்டார்.
அவர் யூனுஸ் மூலம் என்னிடம் கேட்ட கேள்விகள் அரசியல் கிசுகிசுக்களாகவே இருந்தன. ஜே.பி மற்றும் இந்திராவுக்கு இடையே தூது செல்பவர்களாக இருந்த ஷியாம் நந்தன் மிஸ்ரா, தினேஷ் சிங் ஆகியோருடன் ஜே.பி கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் நெருக்கம் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது.
நேரு எப்படி இந்தியாவின் பெருமையை உலக அளவில் பிரநிதித்துவப்படுத்தினாரோ, அதேபோல இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால், ஜே.பி இயக்கத்தின் வலிமை அதிகரித்து வந்ததால் அவர் சற்று கலங்கிப்போயிருந்தார்.
அவரின் சிறிய தேர்தல் பிழைக்காக அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரை தகுதிநீக்கம் செய்ததால் அவர் நிலைகுலைந்தார். அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி 1975-இல் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த ஆவனவற்றை செய்தார்.
இந்திரா மற்றும் சஞ்சயுடன் செல்வாக்கு மிகுந்தவராக இருந்த முகமத் யூனுஸ் ஊடகங்களை சமாளிப்பதற்காக சிறப்பு பிரதிநிதியாக பதவி பெற்றார். அவரது அதிகாரத்தால், பிறரால் பார்க்க முடியாத, இந்திராவின் இயல்புகளை அறியக்கூடிய ஒன்றை செய்ய அவர் எனக்கு உதவினார்.
லண்டனில் இருக்கும் சண்டே டைம்ஸ் இதழின் பகுதிநேர செய்தியாளாராக நான் இருந்தேன். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபின் இந்திரா கொடுக்கும் முதல் பேட்டி எனக்கு கொடுத்தார்.
பேட்டியின்போது அவர் மிகவும் இறுக்கமாக இருந்தார். என் கேள்விகள் எதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. சுவரைப் பார்த்தே அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். தன் கையில் வைத்திருந்த தாள் ஒன்றை பார்க்காமலேயே ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் மட்டும் அவரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தவில்லை. வங்கதேசப் போரில் அவர் காட்டிய தீரமும் அவரை இரும்புப் பெண்மணியாகக் காட்டியது. ஆனால், துணிச்சல் மிக்கவர் என்றும் மதச்சார்பற்றவர் என்றும் இந்திராவுக்கு இருந்த பெயர் மாறவில்லை. 1982-இல் ஜம்முவில் நடந்த தேர்தலில் அவர் தன்னை ஒரு சமயவாதியாக அவர் காட்டிக்கொண்டபோதும் அது மாறவில்லை.
பஞ்சாபில் நடந்த காலிஸ்தான் போராட்டமும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மதச்சாயத்தைக் கொடுத்தது. 1984-இல் அவர் கொலை செய்யப்பட்டபின்னும் , அது தொடர்ந்தது. ராஜீவ் காந்தி தலைமையில், 1985 தேர்தலில் மக்களவையின் 514 தொகுதிகளில் காங்கிரஸ் 404 தொகுதிகளில் வெல்ல அந்த அனுதாப அலை உதவியது என்று பலரும் நினைத்தோம். ஆனால், சிறுபான்மை மதவாதத்திற்கு எதிராக இந்துகளின் வாக்குகளை ஒண்டு சேர்த்ததே அந்த வெற்றிக்கு காரணம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினர்.
ராம ராஜ்யம் அமைக்கப்படும் என்று 1989-இல் ராஜீவ் காந்தி அயோத்தியாவில் தனது பிரசாரத்தை தொடங்கியது வியப்பேதும் இல்லை. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிய அதே இடத்தில் அவர் அடிக்கல் நாட்டினார்.
கடந்த முறை குஜராத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் ஒரு கோயிலுக்கு சென்றபின்னர்தான் ராகுல் காந்தி தொடங்கினார். பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் நாட்டில் கோயிலுக்கு போவது இயல்பான ஒன்றாகவே இருக்க வேண்டும்.
ஆனால், சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க காங்கிரஸ் முயல்கிறது என்று பாரதிய ஜனதா குறை கூறுவதை தவிர்க்க இவ்வாறு நடக்கிறது. 2005-இல் வெளியான சச்சார் கமிட்டியின் அறிக்கையில், சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு காங்கிரஸ் 60 ஆண்டுகள் செயல்பட்டது எவ்வாறு என்பது தெளிவாகிவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்