தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி: நீங்கள் எந்த அளவு கவலைப்பட வேண்டும்?

    • எழுதியவர், அலோக் ஜோஷி
    • பதவி, மூத்த பொருளாதார பத்திரிகையாளர்

இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அதாவது ப்ராவிடண்ட் ஃபண்ட் மீது வரி விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

பிஎஃப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், அதன் வட்டி மீது இப்போது வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் வேலை அளித்தவரால் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படாத ஊழியர்களும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறுவார்கள் என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

அறிவிக்கப்பட்ட நாள் முதல், இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

கேள்விகள் என்ன?

மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்த வரி எப்படி கணக்கிடப்படும்?

• ஒரே பி.எஃப் கணக்கில் எவ்வளவு தொகைக்கு வரி விதிக்கப்படும் மற்றும் எவ்வளவுக்கு இல்லை என்பதை நிர்ணயிக்கும் சூத்திரம் என்ன?

• ஒரு வருடம் குறித்து புரிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு எவ்வளவு வட்டிக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும், பிறகு எவ்வளவு தொகை மீது வரி விதிக்கப்படும்?

• அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம், பி.எஃப் தொகை மீது முழுமையாக வரி விதிக்க அரசு தயாராகி வருகிறதா என்ன?

கடைசி கேள்விக்கான பதில் இன்னும் தெரியவரவில்லை. ஆனால் இந்த வரி எப்படி வசூலிக்கப்படும் என்பதை வருமான வரித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

வரி எப்படி வசூலிக்கப்படும்?

இப்போது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக வட்டி பெறும் நபர்களுக்கு ஒரு கணக்கிற்கு பதிலாக இரண்டு பிஎஃப் கணக்குகள் இருப்பது அவசியம்.

ஒரு கணக்கில், இது வரை கழிக்கப்பட்ட தொகை மற்றும் முழு வட்டித் தொகை இருக்கும். மேலும், கணக்கில் பிடித்தம் செய்யப்படும் அல்லது டெபாசிட் செய்யப்படும் பி.எஃப் தொகை வரிவிலக்கு வரம்பு வரை தொடர்ந்து இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை அல்லது அதற்கான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும். குறைந்தபட்சம் அதுதான் இதுவரை சொல்லப்பட்டுள்ளது.

இந்த வரம்புக்கு மேல் உள்ள தொகை தனி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்தக் கணக்கில் இருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு ஒவ்வொரு வருடமும் உங்கள் வருவாயின் படிநிலைக்கு ஏற்றபடி வரி விதிக்கப்படும்.

இதைச் செய்ய, மத்திய நேரடி வரிகள் வாரியம் அதாவது மத்திய நேரடி வரிகள் வாரியம், 1962 ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளை மாற்றி, ஒரு புதிய விதியாக 9D-ஐ அதில் சேர்த்துள்ளது.

இந்த விதியில், பி.எஃப் கணக்கை இரண்டு துண்டுகளாக உடைக்க அல்லது இரண்டு தனி கணக்குகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.எஃப் மீதான வரி அறிவிப்பால் எழுந்த ஒரு பெரிய சந்தேகம் இதன்மூலம் நீங்கிவிட்டது என்று வருமானவரி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இப்போது கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வரியை கணக்கிடுவது எளிதாக இருக்கும். ஏனெனில் வரி விதிக்கப்படும் தொகை ஒரு கணக்கில் இருக்கும். வரி விலக்கு பெற்ற தொகை மற்றொரு கணக்கில் இருக்கும்.

எத்தனை பேர் இதன்கீழ் வருவார்கள்?

நாட்டில் தற்போது சுமார் ஆறு கோடி பி.எஃப் கணக்குகள் உள்ளன. எனவே, இந்த விதி அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஆனால் இதில் 93 சதவிகித மக்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதே உண்மை, ஏனென்றால் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை இந்த வரம்பை விட குறைவாக உள்ளது. ஆகவே அவர்கள் தற்போது வரி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த எண்ணிக்கை வெளியில் இருந்து வரவில்லை. கடந்த ஆண்டு, பி.எஃப் மீதான வரி தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோது, வருமான வரித் துறை அதிகாரிகள் தான் இந்த எண்ணிக்கையை தங்கள் வாதமாக முன்வைத்தனர். 2018-19 ஆம் ஆண்டில் 1.23 லட்சம் செல்வந்தர்கள் தங்கள் பி.எஃப் கணக்குகளில் 62,500 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், ஒரே ஒரு பி.எஃப் கணக்கில் 103 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினார். இதுதான் நாட்டின் மிகப்பெரிய பி.எஃப் கணக்கு. அதேபோல இதுபோன்ற டாப் -20 பணக்காரர்களின் கணக்குகளில் 825 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் நாட்டில் 4.5 கோடி பி.எஃப் கணக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது . இவற்றில் 0.27% கணக்குகளில் சராசரியாக 5.92 கோடி ரூபாய் இருப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் அவை ஒவ்வொன்றும் ஆண்டுதோறும், சுமார் 50 லட்சம் ரூபாய் வரியற்ற வட்டியை பெற்றுவந்தன.

மக்கள் கவலைப்பட வேண்டுமா?

இவற்றையெல்லாம் கேட்டு பெரும்பாலான மக்கள் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இந்த வரி விதிப்பதன் மூலம் அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் நினைப்பார்கள். ஆனால் பி.எஃப் மீதான வரி விதிப்புக்கு மோதி அரசு மேற்கொண்ட முதல் முயற்சி இதுவல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி தொகையை திரும்பப் பெறும்போது, அதில் 60 சதவிகிதம் மீது வரி விதிக்கப்பட வேண்டும் என்ற யோசனை 2016 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டது.

எனினும் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக அது திரும்பப் பெறப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில், ஊழியர்கள் தங்கள் எதிர்கால சேமிப்புக்காக ஈபிஎஃப் அல்லது என்பிஎஸ் அல்லது ஏதேனும் மேலதிக அல்லது ஓய்வூதியத் திட்டத்திற்காக டெபாசிட் செய்யும் தொகைக்கு, 7.5 லட்சம் ரூபாய் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

பி.எஃப் தொகை முழு வதன்மீதும் வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. இதற்கு எளிமையான பதில் என்னவென்றால், நீங்கள் இதற்கென பிரத்யேகமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு மாதத்தில் உங்கள் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் பிஎஃப் 20,833.33 ரூபாய்க்கு மேல் இருந்தால் அல்லது உங்கள் முதலாளி கணக்கில் தொகை எதையும் டெபாசிட் செய்யாமல் உங்கள் கழிவுத் தொகை 41,666.66-க்கு மேல் இருந்தால், நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால், அதுவும் உங்கள் பொறுப்பாக இருக்காது. பி.எஃப் கணக்காளர் அமைப்பு EPFO அல்லது உங்கள் நிறுவனத்தின் பி.எஃப் அறக்கட்டளை உங்கள் தனி கணக்கைத் திறந்து அதற்கேற்ப இரு கணக்குகளிலும் தொகையை போடத் தொடங்கும்.

ஆனால் நீங்கள் அதை கண்காணிக்க வேண்டும். இதற்காக, பி.எஃப் அலுவலகத்திலிருந்து வரும் மின்னஞ்சல் அல்லது கடிதத்தை கண்காணிக்கவும். தேவைப்பட்டால், உங்கள் அலுவலகத்தின் மனிதவளத் துறையிடம் கணக்கு தொடங்கப்பட்டதா இல்லையா என்பதை கேட்டறியவும்.

2021 மார்ச் 31 வரை உங்கள் கணக்கில் இருந்த தொகை அல்லது வட்டிக்கு எந்த வரியும் இல்லை. இதுவரை அரசு, பொது வருங்கால வைப்பு நிதி அதாவது பிபிஎஃப் -ஐ வரியிலிருந்து விலக்கி வைத்துள்ளது. எனவே இப்போதைக்கு அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :