You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - மருத்துவமனையில் இறந்தார்
- எழுதியவர், சுரை நியாஜி
- பதவி, பிபிசி இந்திக்காக
மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது.
இது தொடர்பாக எட்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களில் இரண்டு முக்கிய நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.
நடந்தது என்ன?
"கண்ஹையா லால் பில் என்கிற பழங்குடி இளைஞர், வேறு சிலரோடு தன் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது இருசக்கர வண்டி குஜ்ஜர் சாதியைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியது.
அப்போது அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கண்ஹையாவைப் பிடித்து அடித்து துன்புறுத்தினர். பிறகு வாகனத்தின் பின் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் மொத்த நிகழ்வையும் காணொளியாக படம் எடுத்துக் கொண்டிருந்தார்" என போலீஸ் தரப்பு கூறுகிறது.
"இந்த வழக்கு சிங்கொலி காவல் நிலையத்தின் கீழ் வருகிறது. எட்டு பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சூரஜ் குமார் வர்மா கூறியுள்ளார்.
'மன்னித்துவிடுங்கள்... மன்னியுங்கள்'
அந்த காணொளியில் தொடர்ந்து மன்னித்து விடுங்கள் என கண்ஹையா லால் கூறி கெஞ்சுவதைப் பார்க்க முடிகிறது. இருப்பினும் குஜ்ஜர் சாதியினர் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதைப் பார்க்க முடிகிறது.
கண்ஹையா லாலை அடித்து துன்புறுத்தி, வாகனத்தோடு கட்டி இழுத்துச் சென்ற பிறகு, குஜ்ஜர் சாதியினர், காவல் துறையினரை அழைத்து திருடனைப் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
போலீசார் கண்ஹையாவை மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இது தொடர்பான காணொளி சில நாட்களுக்குப் பிறகு பரவத் தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ட்வீட்
"மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நீமூச் மாவட்டத்தில், கண்ஹையா லால் பில் என்பவருக்கு எதிராக மிகவும் மனிதத்தன்மையற்ற செயல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
திருட்டு சந்தேகத்தின் அடிப்படையில், அவரை கடுமையாக தாக்கிய பிறகு, கொடூரமாக ஒரு வாகனத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அது அவர் உயிர் பிரிய காரணமாக அமைந்திருக்கிறது" என தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் துன்புறுத்தப்பட்ட காணொளியோடு பகிர்ந்திருக்கிறார் கமல்நாத்.
"இது போன்ற மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் சத்னா, இந்தூர், தெவாஸ் போன்ற ஊர்களில் நடந்தது. இப்போது நீமுச் மாவட்டத்திலும் நடந்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் அராஜகம் நிலவுகிறது. மக்கள் சட்டத்தின் மீது எந்த வித பயமுமின்றி சட்டத்தை தங்கள் கையில் எடுக்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அரசு செயல்படுவதைக் காண முடியவில்லை" என மேலே குறிப்பிட்ட ட்வீட்டின் தொடர்ச்சியாக தன் ட்விட்டர் பகக்த்தில் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்நாத்.
கடந்த ஞாயிற்றுகிழமை மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான இந்தூரில், ஒரு இஸ்லாமிய வளையல்காரரை இந்து சமூகத்தினர் வாழும் பகுதிக்குள் வரக் கூடாது என அடித்து துன்புறுத்திய நிகழ்வு நடந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பான்பராக் போட்ட மணமகனை மேடையிலேயே அறைந்த மணமகள் - வைரலாகும் காணொளி
- செலவுகளைச் சமாளிப்பது எப்படி?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை என்ன?
- 30,000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த குழந்தை - பிரசவம் பார்த்தது யார்?
- தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
- கொரோனா எங்கு தோன்றியது? பல துருவங்களாக பிரிந்து நிற்கும் அமெரிக்க உளவுத் துறை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்