பான்பராக் போட்ட மணமகனை மேடையிலேயே அறைந்த மணமகள் - வைரலாகும் காணொளி

(இன்று 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

மணமேடையில் குட்கா மென்றுகொண்டு இருந்த மணமகனை மணமகள் பளார் என ஓங்கி அறைந்தார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லியில் திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்த மணமகனை அறைந்து, வாயில் உள்ள குட்காவை துப்பச் சொல்லி இருக்கிறார்.

அவர் திருமண மேடையில் இருந்த படியே தன் வாயில் இருந்த குட்காவைத் துப்பிய போது சுற்றி இருந்தவர்கள், கேலியும் கிண்டலுமாக சிரித்தனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.

மணமகன் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த காணொளியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளக்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆறாவது முறையாக கதவைத் தட்டிய அதிர்ஷ்டம்...குதூகலத்தில் விவசாயி

அரசிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட சுரங்கத்திலிருந்து மத்தியப் பிரதேச விவசாயி ஒருவருக்கு 6.47 காரட் வைரம் கிடைத்துள்ளது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் பண்ண மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மஜூம்தார் என்ற விவசாயிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாக சுரங்கத்திலிருந்து உயர் தர வைரம் கிடைத்துள்ளது. இம்முறை, அரசிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட சுரங்கத்திலிருந்து 6.47 காரட் வைரம் கிடைத்துள்ளது.

ஜருபூர் கிராமத்தில் உள்ள சுரங்கத்திலிருந்து பிரகாஷ் இந்த வைரத்தை எடுத்துள்ளார் என வைர பொறுப்பலுவலர் நுதன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "6.47 காரட் வைரம் ஏலத்தில் விடப்படும். அதற்கான விலை அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து மஜூம்தார் கூறுகையில், "ஏலத்தில் கிடைக்கும் பணத்தை சுரங்க குவாரியின் கூட்டாளிகளுடன் நான் பகிர்ந்து கொள்வேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர் உள்ளோம். கிடைத்த 6.47 காரட் வைரத்தை அரசின் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளோம். கடந்தாண்டு 7.44 காரட் வைரம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 முதல் 2.5 காரட் விலைமதிப்பற்ற வேறு கற்களும் கிடைத்துள்ளன" என்றார்.

வைரம் ஏலம் விட்ட பிறகு கிடைக்கும் பணத்திலிருந்து அரசுக்கு கொடுக்க வேண்டிய ராயல்டி மற்றும் வரிகளை பிடித்து கொண்டு மீதமுள்ள பணம் விவசாயிக்கு வழங்கப்படும் என அரசு அலுவலர் தெரிவித்துள்ளார். 6.47 காரட் வைரத்தின் விலை 30 லட்சமாக கணிக்கப்பட்டுள்ளது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செங்கம் அருகே இரும்பு உருக்கும் உலைக்களம்: அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள கோரிக்கை

செங்கம் அருகே சின்னகல்தான்பாடி கிராமத்தில் இரும்பை உருக்கும் உலைக்களம் இருந்துள்ளது என தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் சின்னகல்தான்பாடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'இரும்பை உருக்கும் உலைக் களம்' அமைத்த சுவடுகள் உள்ளன என தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

"வரலாற்று சுவடுகளால் சூழ்ந்தது செங்கம் வட்டம். பெருங்கற்கால நினைவு சின்னங்கள், நடுகல், கல் வெட்டுகள் என பல சுவடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், சின்னகல்தான்பாடி கிராமத்தில் இரும்பை உருக்கும் உலைக்களம் அமைத்துள்ளனர்.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்கலாம். 5 ஏக்கர் விவசாய நிலத்தில், உலைக்களம் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. அந்த பகுதியை கரிமேடு என கிராம மக்கள் அழைத்து வருகின்றனர்.

இரும்பை வார்க்கப் பயன்படுத்திய சுடுமண் குழாய், மண் குடுவைகள், சிட்டங்கள் போன்றவை சிதறி கிடக்கின்றன. விவசாய பணி செய்யும் போது, உடைந்த நிலையில் அம்மன் சிலை, உரல், அம்மிக்கல் போன்ற பழமையான பல்வேறு கல் தடயங்கள் கிடைத்துள்ளன. அதனை மரத்தடியில் விவசாயிகள் வைத்துள்ளனர்.

இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆகழ்வாராய்ச்சி செய்தால், மேலும் பல வரலாற்று சுவடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு கிடைக்கும் சுவடுகள் மூலம், இது தொன்மையான பகுதி என்பது தெரியவரும்" என பிரேம் ஆனந்த். தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :