இந்தியா தாலிபன்களை அங்கீகரிக்க வேண்டுமா? முன் நிற்கும் சவால்கள் என்னென்ன?

    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆப்கானிஸ்தானில் வேகமாக மாறிவரும் சூழ்கள், தாலிபன்கள் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்ய மீண்டும் வந்திருப்பதுபோலத் தெரிகிறது. இத்தகைய நிலையில், மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கவலையும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் இந்தியாவிற்கும் மிகவும் சவாலானவைகளே.

தாலிபன்களின் ஆட்சியை அங்கீகரிக்க வேண்டுமா இல்லையா என்பது இந்தியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என ராஜீய விவகார நிபுணர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

தாலிபன்களின் சித்தாந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லாததால் இந்தியா தற்போது எந்த அவசரத்தையும் காட்டக்கூடாது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் அப்போதும் ஜனநாயகத்தை அமல்படுத்துவதற்கு எதிராக இருந்தனர். இப்போதும் அதே போல இருக்கின்றனர்.

தாலிபன்கள் ஷரியா சட்டப்படி நாட்டை ஆள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், இந்த செயல்பாட்டில் மக்களின் உரிமைகள் என்ன என்பதை, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான உரிமைகளை. மதகுருக்கள் முடிவு செய்வார்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் திடீரென விலகிய விதம் மற்றும் நாடு முழுவதும் குழப்பம் பரவியதைப்போலவே, ராஜரீக உறவுகளும் திடீர் பின்னடைவை சந்தித்தன.

சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய புதிய கூட்டணியின் எழுச்சி காணப்படுகிறது.

அமெரிக்காவுடனான இரானின் உறவும் நன்றாக இல்லை என்பதால், அது தாலிபன்களை அங்கீகரிப்பதற்கு ஆதரிக்க தயாராக இருப்பது போலத்தெரிகிறது. இதுவும் இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

"பொறுமையை கடைப்பிடிக்கவேண்டிய இந்தியா"

இந்தியாவின் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அரவிந்த் குப்தா, நிலைமை ஸ்திரமாகும்வரை, இந்தியா பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்.. தாலிபன்களிடமிருந்து இந்தியாவுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்று அவர் கூறுகிறார்..

"தாலிபன்களின் உண்மையான முகம் அனைவருக்கும் தெரிந்ததே. தாலிபன் இப்போதுவரை, அறிவிக்கப்பட்ட ஒரு 'தீவிரவாத குழு' வாகவே உள்ளது. தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் அந்த சிந்தனை எங்கும் முடிவடையப் போவதில்லை.

தாலிபன்களின் தலையீடு புனிதப்போர் சிந்தனையை மேலும் வளர்க்கும், அதன் விளைவுகளை ஏற்கனவே உலகம் பார்த்த்துவிட்டது. அங்கு இஸ்லாமிய அரசு அதாவது 'ஐஎஸ்' சித்தாந்தம் இன்னும் காணப்படுகிறது, "என்று பிபிசியுடனான உரையாடலின் போது தெரிவித்தார் குப்தா.

பேச்சுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு

அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தாலிபன்கள் பல அறிவிப்புகளைச் செய்துள்ளனர்.கூடவே தங்கள் முற்போக்கு முகத்தையும் காட்ட முயன்றனர். இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் தாலிபன் போராளிகள் செய்யும் கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தாலிபன் போராளிகள் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி, முந்தைய அரசில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் தேடி வருகின்றனர் என்று சில செய்திகள் கூறுகின்றன.

ஒரு காலத்தில் தாலிபன்களை எதிர்த்தவர்கள் இப்போது நேரடியாக அதன் இலக்கின் கீழ் வந்துள்ளனர். ஆனால் பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என்று தாலிபன் கூறியுள்ளது. இருப்பினும், தாலிபனை எதிர்த்த பால்க் மாகாண கவர்னர் சலீமா மஸாரி, தாலிபன்களால் கைது செய்யப்பட்டார்.

"இத்தகைய சூழ்நிலையில் தாலிபன்களை எப்படி நம்புவது? அவர்களின் போராளிகள், மக்களை விமான நிலையத்திற்கு செல்ல அனுமதிக்காமல், பயங்கரவாதத்தை பரப்புகிறார்கள், அவர்கள் எப்படி அரசை நடத்துவார்கள்?" என்று அரவிந்த் குப்தா கேள்வி எழுப்புகிறார்.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளின் பின்னணியில் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களைப் பார்த்தால், அது மிகவும் கவலை அளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இரான் மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளும் இந்த புதிய கூட்டில் இடம்பெறலாம். இதன் காரணமாக கவலை அதிகரிப்பது இயற்கையானது.

"ஆப்கானிஸ்தானின் நிலத்தை வேறு எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த தாலிபன்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்கள் கூறலாம். ஆனால் சீனாவும் பாகிஸ்தானும், இந்தியாவுக்கு எதிராக இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் என்பது உண்மை," என்கிறார் அரவிந்த்.

இந்தியா மற்றும் தாலிபன்

இந்தியா தாலிபனை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு முன்பு கூட, அதன் அரசு இருந்தபோது, ​​இந்தியா ஒருபோதும் அந்த நாட்டுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காந்தஹாருக்கு கொண்டு செல்லப்பட்டபோது ​​இந்தியா, தாலிபன் தளபதிகளுடன் முதலும் கடைசியுமாக பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் இந்தியா எப்போதும் தாலிபன்களிடம் இருந்து விலகியே இருந்தது.

அமெரிக்கப் படைகள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படும் செயல்முறைக்கு முன்பு தோஹாவில் தாலிபன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, ​​இந்தியா அவர்களுடன் 'பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம்' என்று முடிவு செய்தது. தாலிபன் தலைமையுடன் மறைமுக பேச்சுவார்த்தையை கூட இந்தியா மறுத்துவிட்டது.

தாலிபன்களின் வருகைக்குப் பிறகு, ஜம்மு - காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று குப்தா கருதுகிறார். ஏனெனில் பாகிஸ்தான் தொடர்ந்து அதைச் செய்ய முயற்சிக்கும் என்கிறார் அவர்.

"உலகம் முழுவதற்கும் கவலை"

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய குல்ஷன் சச்தேவா, தாலிபன்களுடன் பாகிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று கூறுகிறார். சச்தேவா தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 'ஸ்கூல் ஃபார் இண்டர்நேஷனல் ஸ்டடீஸில்' பேராசிரியராக உள்ளார்.

"தாலிபன்கள் யார்? இந்த இயக்கம் தொடங்கியபோது, ​​பாகிஸ்தானின் அபோடாபாத் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்கள் முதலில் அங்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டது. இது ஆரம்பம். ஆனால் அவர்களின் வேர்கள் இன்னும் இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் கவலை அளிக்கிறது," என்று பேராசிரியர் குல்ஷன் சச்தேவா பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பல்வேறு அமைப்புகள் அதாவது ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தாலிபன்களுடன் எப்போதும் ஆழமான உறவைக் கொண்டிருந்தன என்று சச்தேவா கூறுகிறார்.

ஆனால் 2001 இல், அமெரிக்கப் படைகள் தாலிபன் நிலைகளைத் தாக்கி அழித்தபிறகு, ​​ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு ஆட்சியை கைப்பற்றியபோது, ​​தாலிபன்கள் ஒருபோதும் பலம் பெற முடியாது என்று தோன்றியது.

ஆப்கானிஸ்தானில் தற்போது நடக்கும் விஷயங்கள் அனைத்திலும், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் இருந்த அஷ்ரஃப் கனியின் தலைமை மற்றும் தாலிபன்கள் எல்லாமே கலந்திருப்பதாக அவர் நினைக்கிறார்.

"இது அவ்வாறு இல்லை என்றால், அரசு தாலிபன்கள் முன் ஏன் எதிர்ப்பு இல்லாமல் மண்டியிட்டது? இது ஒரு பெரிய கேள்வியாகவே இருக்கும். ஏனெனில் அமெரிக்காவும் தாலிபன்கள் காபூலை அடைய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று கூறி வந்தது.. ஆனால் அது மூன்று நான்கு நாட்களில் அங்கு சென்றுவிட்டது," என சச்தேவா சுட்டிக்காட்டுகிறார்.

தாலிபனின் முந்தைய ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அது முந்தைய ஆட்சியில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலகின் இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் அதை அங்கீகரிக்கின்றன.

ஐரோப்பாவின் நாடுகளும் அதையே செய்யும், ஏனென்றால் இது அவர்களுக்கு முக்கியமல்ல. அதனால்தான், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு இந்த முறை இந்தியா, தாலிபன்களுடன் 'தொடர்பு கொள்வது' மிக முக்கியமானதாக கருதப்படும் என்று அவர் நம்புகிறார்.

இந்தியா தாமதிக்கக் கூடாது, ஏனெனில் இந்தியா தாலிபன்களுடன் 'பேச' அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, ​​பாகிஸ்தான் அதை நேரடியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் என சச்தேவா கூறுகிறார்.

இந்தியா தனது தூதரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டுமா?

இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை விரைவில் மீண்டும் திறக்க வேண்டுமா என்பது பற்றி தூதாண்மை வட்டாரங்களில் விவாதம் உள்ளது.

மூத்த பத்திரிகையாளர் மற்றும் ராஜ்ஜிய விவகார நிபுணருமான அபிஜித் ஐயர் மித்ராவும் இதை ஒப்புக்கொள்கிறார்.

"தூதரை திருப்பி அனுப்புவது மட்டுமல்லாமல், இந்தியா தனது அனைத்து ஆலோசகர்களையும் தூதரகத்தில் நியமிக்க வேண்டும். ரஷ்யா, சீனா, இரான் மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் அங்கு மூடப்படவில்லை. இந்தியா தாலிபன்களுடன் 'பேசுவது' இந்தியாவுக்கு நன்மை அளிக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும். " என்கிறார் அவர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்

இந்தியா இதுவரை மேற்கொண்ட அணுகுமுறை முற்றிலும் சரியானது என்று மித்ரா நம்புகிறார். "ஆனால் இப்போது மாறியுள்ள சூழ்நிலையில், இந்தியாவும் தனது கொள்கையை மாற்ற வேண்டும். முன்னால் இருந்த தாலிபன்களுக்கும் தற்போதைய தாலிபன்களுக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னெவென்றால், , அவர்கள் இப்போது 'உலகமயமாகிவிட்டனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

"முன்பு இருந்த தாலிபன்கள் முழுமையாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஆனால் அமைப்பின் இரண்டாவது பெரிய தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் அகுந்த், பாகிஸ்தான் சிறையில் எட்டு ஆண்டுகள் சித்திரவதைக்கு ஆளானார். அதன் பிறகு பாகிஸ்தான் மீதான தாலிபன்களின் அணுகுமுறை முன்பு போலவே இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிவிரைவில் அதிகாரத்தை கைப்பற்றியபோது இதற்கான அறிகுறிகள் வரத் தொடங்கின," என்கிறார்.

நம்பிக்கைக்குரிய விஷயம்

தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அளித்துவரும் சமிக்ஞைகளை, ராஜீய விவகார ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

உதாரணமாக, பெண்கள் பர்தாவுக்குப் பதிலாக ஹிஜாப் அணிந்து வேலை செய்ய அனுமதிக்கபடுவது, ஆப்கானிஸ்தான் மண்ணை எந்த நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று அறிவித்தது.

குருத்வாராக்களில் தஞ்சம் புகுந்துள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதம், இந்தியா அங்கு தொடங்கியுள்ள திட்டங்களை முடிக்க வலியுறுத்துதல் மற்றும் ஷியா சமூகத்துடன் சிறந்த உறவுகளை கட்டியெழுப்பும் நம்பிக்கை ஆகியவை உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டத்தின் அமலாக்கம் பற்றிய விஷயத்தை எடுத்துக்கொண்டால், காபூல் மற்றும் சில மாகாண நகரங்களைத் தவிர வேறு எங்குமே எந்த சட்டமும் உறுதியுடன் அமல்படுத்தப்படவில்லை என்று அபிஜித் கூறுகிறார்.

"மாகாணங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில், வீட்டுக்கு மூத்தவர் அல்லது இனத்தின் தலைவர் கூறுவது தான் சட்டம். ஷரியத் அமல்படுத்தப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு அமைப்பு முறையாவது உருவாகும். இதன் கீழ் பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்பு ஏற்படும். இந்த அமைப்பு காபூலுக்கு சரியாக இருக்காது. ஆனால் ஆப்கானிஸ்தானின் பெரிய பகுதிகளில் இதன்கீழ் ஒரு சட்டமாவது அமலாகும்," என்கிறார் அவர்.

பாகிஸ்தான் அளிக்கும் பாதுகாப்பால் தாலிபன் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் ஆப்கானிஸ்தான் மக்களின் உணர்வுகள் பாகிஸ்தானுக்கு எதிரானவை. இந்தியா இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தாலிபன்கள் கூட பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆபத்தை மேற்கொள்ளமுடியாது என்று அபிஜித் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :