You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3: ஆப்கன் மீட்பு நடவடிக்கையில் நிகரில்லா விமானம் - வியப்பளிக்கும் தகவல்கள்
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று 823 ஆஃப்கன் குடிமக்களை அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டது. அவர்களில் 183 குழந்தைகளும் அடங்குவர்.
இத்தனை பேரை சுமந்து சென்றது, போயிங் சி-17 குளோப்மாஸ்டர்-3 எனும் இந்த விமானத்திற்கு ஒரு மிகப்பெரிய சாதனைதான்.
நான்கு என்ஜின்களை கொண்ட இந்த விமானம் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணொருவர், ஜெர்மனியில் உள்ள ராம்ன்ஸ்டைன் விமான தளத்தில் இதே போயிங் சி-17 வகை விமானம் ஒன்றில் ,தமது குழந்தையை பெற்றெடுத்தார்.
போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3 குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ.
- 1980களில் உருவாக்கப்பட்ட இந்த விமானம் 1990களில் பயன்பாட்டுக்கு வந்தது. தங்கள் நாட்டின் பாதுகாப்பு படையினர், பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமல்லாது ஆபத்து காலங்களில் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த வகை விமானங்கள் பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
- தற்போதைய மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை தவிர இந்தியாவும் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3 வகை விமானத்தை பயன்படுத்தி வருகிறது.
- ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க இவ்வகை விமானம் ஒன்று, ஞாயிறன்று காபூல் விமான நிலையத்தில் இருந்து டெல்லி அருகே உள்ள ஹின்டோன்விமானப்படை தளத்துக்கு 168 பேரை அழைத்து வந்தது. இவர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 24 இந்துக்கள் மற்றும் சீக்கியர்களும் அடக்கம்.
- போயிங் நிறுவனத்தின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி தற்போது இந்திய விமானப்படையிடம் 11 போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3 வகை விமானங்கள் உள்ளன.
- பெரும்பாலும் இந்த விமானங்களை மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய விமானப்படை பயன்படுத்துகிறது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆக்சிஜன் டேங்கர்களைக் கொண்டு செல்வதற்கு இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
- அமெரிக்க விமானப்படையின் தகவலின்படி போயிங் சி-17 கு ளோப்மாஸ்டர் - 3 விமானம் 77,519 சரக்கை சுமந்து செல்லக்கூடிய திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆயுதங்கள், வாகனங்கள் மட்டுமல்லாது போரில் பயன்படுத்தப்படும் டாங்கிகளையும் சுமந்து செல்லும் திறன் இந்த விமானத்துக்கு உள்ளது.
- இந்த விமானத்தை இயக்குவது மூவர் குழு. அவர்களில் இரண்டு பேர் விமானிகள். பின் பகுதியில் இருந்து சரக்குகளை விமானத்தில் ஏற்றுவதையும் இறங்குவதையும் கையாளும் மூன்றாவது நபர் 'லோட் மாஸ்டர்' என அழைக்கப்படுகிறார்.
பிற செய்திகள்:
- கல்யாண் சிங் உடல் மீது போர்த்திய தேசிய கொடிக்கு மேல் பாஜக கொடி - புதிய சர்ச்சை
- ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தப்புவதற்கு அமீரகத்தை தேர்வு செய்தது ஏன்? தாலிபன்கள் விட்டுவிடுவார்களா?
- பாஜகவின் 'அருந்ததியர்' அரசியல்: கொங்கு மண்டல கணக்கால் திமுக, அதிமுக அதிர்ச்சியா?
- மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்? - நிபுணரின் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்