You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாஷிகா ஆனந்த் உருக்கம்: "வாழ விருப்பம் இல்லை, குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்"- விபத்துக்குப் பிறகு முதல் பதிவு
- எழுதியவர், ச ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
கார் விபத்தில் இருந்து மீண்ட நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் முதன் முறையாக விபத்து குறித்தும் தனது தோழியின் மரணம் குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த், அமீர், பவனி, சையத் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் பகுதியில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் திரும்ப வரும்ப போது, சூளேரிக்காடு பகுதியில் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், சம்பவ இடத்திலேயே யாஷிகா ஆனந்தின் தோழி பவனி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதில் யாஷிகா உட்பட காரில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து அடையாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து வேகமாக காரை ஓட்டி வந்தது, உயிரிழப்பை ஏற்படுத்தியது மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் யாஷிகா ஆனந்த் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
அதேபோல, 'குடி போதையில் வண்டி ஓட்டி வந்தார்' என சம்பவத்தை நேரில் பார்த்த சூளேரிக்காடு பகுதி மக்கள் கூறி இருந்தாலும், முதல் தகவல் அறிக்கையில் அது தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என முன்பு பிபிசி தமிழிடம் மாமல்லபுரம் போலீசார் தெரிவித்திருந்தனர்.
மேலும் விசாரணையில், யாஷிகா மது போதையில் இல்லை எனவும், கார் அதிவேகமாக ஓட்டி வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால், காரின் முன் பக்கம் யாஷிகாவுடன் இருந்த பவனி, கார் சீட் பெல்ட் அணியாமல் வந்ததால் விபத்தில் உயிரிழந்ததாகவும் போலீசார் யாஷிகாவின் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை எனவும் இதை மருத்துவர்களது அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார் யாஷிகா.
தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சில ஊடகங்கள் வியூஸ் மற்றும் சப்ஸ்கிரைப்பர்களுக்காக தவறான செய்தியை பரப்பி கொண்டிருப்பதாகவும், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை பரப்பியதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.
வழக்கு பதிவு செய்த காவல்துறை
இந்த விபத்தில் நடிகை யாஷிகாவிற்கு கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை நடந்ததை அடுத்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் யாஷிகா.
சிகிச்சையில் இருந்ததால் விபத்தின் தீவிரம் குறித்தும் அமெரிக்காவில் மென் பொருள் பொறியாளராக பணிபுரிந்த தோழி பவனியின் இறப்பு குறித்தும் யாஷிகாவிற்கு முன்பு தெரிவிக்கப்படாமல் இருந்தது.
தற்போது தகவல் அறிந்து நடிகை யாஷிகா தனது சமூக வலைதளப் பக்கங்களில் விபத்து குறித்தும், தோழியின் மரணம் குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் உருக்கம்
அதில், "இப்பொழுது நான் எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் விவரிக்கவே முடியாது. நான் உயிரோடு இருப்பதற்கே எப்போதும் குற்ற உணர்ச்சியில் இருப்பேன். என்னை அந்த விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய தோழியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரித்ததற்காக கடவுளை குறை சொல்வதா என தெரியவில்லை."
"ஒவ்வொரு நிமிடமும் பவனியை நினைத்து வருந்துகிறேன். எனக்கு தெரியும் நிச்சயம் அவள் என்னை இதற்காக மன்னிக்க மாட்டாள். நான் அவளின் குடும்பத்தை இது போன்ற இக்கட்டான நிலைக்கு தள்ளியதற்காக வருத்தப்படுகிறேன்," என்பதையும் யாஷிகா அந்த பதிவில் குறிப்பிட்டு, ஒரு நாள் அந்த குடும்பம் என்னை மன்னிக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக அதில் உருக்கமாக கூறியுள்ளார்.
'நான்தான் காரணம்'
'பவனி இப்போது இல்லாமல் போனதற்கு நான்தான் காரணமாக இருப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை' என்பதை குறிப்பிட்டு தன்னுடைய பிறந்தநாளை நாளை கொண்டாடப்போவதில்லை, ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என தெரிவித்து பவனியின் குடும்பத்திற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல, தனக்கு தற்போது வாழ விருப்பம் இல்லை எனவும் நண்பர்கள், ரசிகர்கள் கொடுக்கும் நம்பிக்கை பேரிலேயே மீண்டும் பழையபடி திரும்ப வருவேன் எனவும் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் அதேவேளையில், எதிர்மறையான விமர்சனங்களையும் யாஷிகாவின் விபத்திற்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல்நிலை எப்படி உள்ளது?
யாஷிகாவின் தற்போதைய உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள அவரது தாயாரை தொடர்பு கொண்டோம், "இன்னும் மருத்துவமனையில்தான் யாஷிகா இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்தாலும் அவரது உடல் நலன் பழையபடி குணமாக இன்னும் சிலநாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு இப்போது செவிலியருடன் இணைந்து உதவி செய்து வருகிறேன். வேறு எதுவும் பேசும் மனநிலையில் இல்லை" என முடித்து கொண்டார்.
மேலும் தன் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களிலும் யாஷிகா பதிவு செய்துள்ளார். இடுப்பு எலும்பில் முறிவு மற்றும் வலது காலில் அடிபட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்வில் இருப்பதாகவும், அடுத்த ஐந்து மாதங்களுக்கு எழுந்து நடக்கவோ நிற்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
படுக்கையில் இருந்தபடியேதான் தன்னுடைய அனைத்து செயல்களும் செய்ய முடியும் எனவும் முதுகிலும் அடிப்பட்டிருப்பதால் முழுவதுமாக பழைய நிலைக்கே திரும்ப முடியாத சூழலில் இருப்பாதகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் உடலளவிலும் மனதளவிலும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடவுள் தனக்கு சரியான தண்டனை கொடுத்துள்ளாதகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் யாஷிகா.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டை பிரிக்க பரிசீலனையா? எம்.பி.க்களின் கேள்விக்கு இந்திய அரசு பதில் என்ன?
- சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை - என்ன நடந்தது?
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்