You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி Vs மமதா பானர்ஜி : பெகாசஸ் விசாரணை ஆணையம் மேற்கு வங்க அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதா?
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் வேவு பார்க்கப்பட்டது குறித்த விசாரணை பற்றி மோதி அரசு இதுவரை எதுவும் பேசவில்லை என்றாலும், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி அரசு "இந்த விஷயம் குறித்த முழுமையான விசாரணை" நடத்த இரண்டு உறுப்பினர்கள் ஆணையத்தை அமைத்துள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பீம்ராவ் லோகூர் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மோய் பட்டாச்சார்யா ஆகியோர் விசாரணை ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறிக்கை சமர்ப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வசிக்கும் நபர்களின் மொபைல் போன்களை சட்டவிரோதமாக ஹேக்கிங் செய்தல், கண்காணித்தல், வேவுபார்த்தல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான விவகாரம் குறித்து 1952 சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ், விசாரணை ஆணையம் அமைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
மோதி அரசை குறிவைத்துள்ள மமதா
அண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, முதலமைச்சர் மமதா பானர்ஜியின் சகோதரரின் மகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் தேர்தல் திட்டமிடல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஸ்பைவேர்களால் வேவுபார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மோதி அரசு "ஒரு கண்காணிப்பு முயற்சிக்கிறது" என மமதா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார்.
இதை பொது நலன் சார்ந்த விஷயமாக வர்ணிக்கும் மேற்கு வங்க அரசு, இப்போது வெளியாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க ஒரு சுயாதீனமான பொது விசாரணையை நடத்துவதாக கூறியுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரிக்க இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதையும் இந்த விசாரணையைத் தொடங்க ஒரு காரணமாக மேற்கு வங்க அரசு கூறியுள்ளது.
இந்த ஒட்டுக்கேட்பு மற்றும் இடைமறிப்பு குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால், அது நேரடியாக காவல்துறை மற்றும் பொது நிர்வாகத்தை பாதிக்கிறது என்றும் இந்த இரண்டுமே இந்திய அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் கீழ் மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதாகவும் மமதா பானர்ஜி அரசு கூறுகிறது.
அதே நேரத்தில் இந்த விவகாரம் மாநில அரசு மற்றும் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களையும் சலுகைகளையும் பாதிக்கிறது என்றும், இந்த இரண்டுமே மாநிலத்தின் பட்டியலில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குற்றவியல் சட்டத்துடனும் தொடர்புடையது என்று கூறியுள்ள மாநில அரசு இது பொது அதிகாரப்பட்டியலின் கீழ் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய, மாநில மற்றும் விசாரணை ஆணையம்
விசாரணை ஆணைய சட்டம் 1952 இன் கீழ், இந்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டுமே விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணையைத் தொடங்கலாம். இதுபோன்ற விசாரணைக்கு இந்திய அரசு உத்தரவிட்டிருந்தால், இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆணையம் தனது பணியை முடிக்கும்வரை, எந்தவொரு மாநில அரசும், இதே விஷயத்தை விசாரிக்க மற்றொரு ஆணையத்தை இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கமுடியாது என்று இந்த சட்டம் கூறுகிறது.
இதேபோல், ஒரு மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால், மாநில அரசு நியமித்த ஆணைக்குழு செயல்படும் வரை, இதே விஷயத்தை விசாரிக்க இந்திய அரசு மற்றொரு ஆணையத்தை நியமிக்கமுடியாது.
ஆனால் விசாரணையின் வரம்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது என்று இந்திய அரசு கருதினால், இந்திய அரசு ஆணையத்தை அமைக்கலாம்.
விசாரணை ஆணைய சட்டம் 1952 இன் கீழ், அத்தகைய ஆணைக்குழுவிற்கு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் உள்ளன. இதைப் பயன்படுத்தி இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு நபருக்கும் சம்மன் அனுப்பி வரவழைக்க முடியும். கூடவே, எந்தவொரு ஆவணத்தை தேடவும், எந்தவொரு நீதிமன்றம் அல்லது அலுவலகத்திலிருந்து பொதுப்பதிவுகள் அல்லது அதன் நகல்களை தருமாறு கேட்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பு என்ன?
மேற்கு வங்க அரசு அமைத்துள்ள ஆணையக்குழுவின் முக்கிய பணி, ஏதேனும் இடைமறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதாகும். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் நபர்களை ஆணையம் விசாரிக்கும். அத்தகைய இடைமறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணினி, ஸ்பைவேர் அல்லது மால்வேர் ஆகியவற்றையும் ஆணையம் சோதனை செய்யும்.
இஸ்ரேலில் உள்ள என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் அல்லது வேறு எந்த அமைப்பின் ஸ்பைவேர் அல்லது மால்வேர், இடைமறிப்புக்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆணையம் ஆராயும்.
ஒரு நபர் அல்லது நபர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழல்கள் பற்றி விசாரிப்பதும் இந்த விசாரணை ஆணையத்தின் மற்றொரு முக்கிய பணியாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை ஆராய்ந்து மக்களின் தனியுரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரணை ஆணையம் கண்டுபிடிக்கும். இந்த விவகாரத்துடன் தொடர்புடைய வேறு விஷயங்கள் அல்லது உண்மைகளை விசாரிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மமதா அதிகார வரம்பை மீறினாரா?
இந்த இடைமறிப்பு விவகாரம் முழுவதும் மத்திய அரசின் பட்டியலின் கீழ் இருப்பதால், மாநில அரசால் ஆணையத்தை உருவாக்க முடியாது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி கூறுகிறார்.
"இந்த ஆணையம், விசாரணை ஆணைய சட்டம் 1952 இன் பிரிவு 3 ன் கீழ் அமைப்பட்டுள்ளது என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால் பிரிவு 3 "பொருத்தமான அரசு" பற்றிப் பேசுகிறது. சட்டத்தின் பிரிவு 2 (ஏ) இன் கீழ் , பொருத்தமான அரசு என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விசாரணை ஆணைய சட்டம் 1952 இன் பிரிவு 2 (ஏ) இன் படி, அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் , பட்டியல் 1, 2 அல்லது 3 இல் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு விஷயத்தையும் விசாரிக்க "பொருத்தமான அரசு" இந்திய அரசுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .
அதேபோல், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் பட்டியல் 2 அல்லது 3 இல் பட்டியலிடப்பட்ட விஷயங்களை விசாரிக்க மாநில அரசு "பொருத்தமான அரசு" ஆகும்.
அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் பட்டியல் 1 ன் விஷயங்கள் குறித்து இந்திய அரசும், பட்டியல் 2 இன் விஷயங்கள் தொடர்பாக மாநில அரசும் முடிவுகளை எடுக்க முடியும். பட்டியல் 3 என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே முடிவுகளை எடுக்கக்கூடிய பொதுப்பட்டியலாகும்.
"இடைமறிப்பு என்பது தகவல்தொடர்பு அமைப்புகளில் செய்யப்படும் இடைமறிப்பு. தபால் மற்றும் தந்தி, தொலைபேசிகள், வயர்லெஸ், ஒளிபரப்பு மற்றும் பிற தகவல் தொடர்பு அமைப்புகள் இந்திய அரசின் கீழ் வருகின்றன. அது மாநில அரசின் அதிகார எல்லைக்கு வெளியே உள்ளது." என நீதிபதி கங்குலி கூறுகிறார்.
"இந்த விஷயம் தொலைத்தொடர்பு சட்டம் குறித்தது. தொலைதொடர்பு , மாநில அரசு பட்டியல் அல்லது பொதுப்பட்டியலில் இடம்பெறவில்லை," என்று அவர் விளக்கினார்.
"ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது என்று வைத்துக்கொள்வோம், அதை மாநில அரசு விசாரிக்க முடியுமா? இல்லை, ஏனெனில் இது இந்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பாதுகாப்புடன் தொடர்புடையது.
ஆனால் ரேஷன் பொருள் வாங்குவதில் மோசடி இருப்பதாக வைத்துக்கொள்வோம். இது நடந்திருந்தால், மாநில அரசு விசாரிக்க முடியும், ஏனெனில் இது மாநில அரசின் அதிகாரவரம்புக்குள் உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
"பொருத்தமான அரசு" என்பது ஆணையக்குழுவின் விஷயத்துடன் தொடர்புடையது. நீங்கள் பொருத்தமான அரசு இல்லையென்றால் சட்டத்தின் கீழ் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அர்த்தம்." என நீதிபதி கங்குலி குறிப்பிட்டார்.
அதிகார வரம்பு பிரச்சனை அல்ல
உச்ச நீதிமன்ற நீதிபதி இப்படி கூற, மறுபுறம், மாநில அரசு அதிகார வரம்பைத் தாண்டிவிட்டது என தான் கருதவில்லை என்கிறார் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்.
"இவை மாநிலத்தின் பொது நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகள். தனியுரிமை தொடர்பான விஷயங்களும் மாநில அரசின் கீழ் வரும் விஷயமாகும். எனவே மாநில மக்களைப் பொருத்தவரை , இது முற்றிலும் மாநிலத்தின் விவகாரம் தான்," என்று அவர் சுட்டிக்காடடினார்.
இந்த விசாரணையின் போது , வேறு இடங்களில் நடந்த சில விஷயங்களைப் பற்றி விசாரணை ஆணையம் அறிந்தால் அல்லது வேறு சிலர் உளவு பார்க்கப்பட்டது பற்றி அவர்கள் அறிந்தால், விசாரணை ஆணையத்தின் அறிக்கையை மாநில அரசு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசுக்கு அனுப்ப உரிமை உள்ளது.
இந்த விஷயத்தில் அதிகார வரம்பு என்று எதுவும் இல்லை என்று சிங் கூறுகிறார். இதைச் செய்வதற்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
"எந்த ஒரு மாநில அரசும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கும் என்று இந்திய அரசு நினைக்கவில்லை. இந்திய அரசு இப்படி ஒரு ஆணையத்தை அமைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், மாநிலத்திற்கு அதற்கான உரிமை இருக்காது. இந்திய அரசுக்கு இத்தகைய விசாரணையில் ஆர்வம் இல்லை இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டதால், உச்சநீதிமன்றம் இந்த ஆணையத்தை வலுவாக்கி, 'அதிகார வரம்பு' என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், "என்று அவர் மேலும் கூறினார்.
தனிமனித உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றமே கூறியிருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணையை துவக்க வேண்டும் என்று விகாஸ் சிங் கூறுகிறார். "இது மிகவும் தீவிரமான விஷயம். அது மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்
அரசியலமைப்பு என்ன சொல்கிறது?
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் காஷ்யப்புடன் பேசியது. "ஆய்வு எல்லைகள் மிகவும் விரிவானவை மற்றும் மாநிலத்திற்கு வெளியே நிகழ்வுகளை உள்ளடக்குகின்றன என்று நான் நினைக்கிறேன். இது செல்லுபடியாகுமா என்பதில் சந்தேகம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆணையக்குழு மேற்கு வங்காள குடிமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை விசாரிக்க முடியும் என்று காஷ்யப் கூறுகிறார். ஆனால் அதன் அதிகார எல்லைக்கு வெளியே விசாரிக்கவோ அல்லது சோதனை நடத்தவோ அதற்கு உரிமை இல்லை. உதாரணமாக, இந்த ஆணையம் இந்திய உள்துறை அமைச்சரை அதன் விசாரணையின் போது விசாரிக்க விரும்பினால், "அதற்கு அவ்வாறு செய்ய உரிமை இருக்காது" என்று காஷ்யப் கூறுகிறார்.
இந்த ஆணையத்தை சட்டப்பூர்வமாக இந்திய அரசு எதிர்க்க முடியுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், "முடியும். இது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று கூறி நீதிமன்றத்தை அணுகமுடியும். தன் மாநிலத்தின் எல்லைக்கு வெளியே அவர்கள் செல்வதாக வாதிடலாம். சட்ட விதிகளை நீதிமன்றம் ஆராய்ந்து வரம்புகள் மீறப்படுகிறதா என்பதை சரிபார்க்கும்," என்றார்.
இந்த விஷயத்தில் மேற்கு வங்க அரசு, மாநில அதிகார வரம்பின் எல்லையை தாண்டுவது போலத் தெரிகிறது என்கிறார் காஷ்யப். " சட்டபூர்வ செல்லுபடியாக்கம் மற்றும் அதிகார வரம்பு எல்லை பற்றிய விஷயத்தை நீதிமன்றம் ஆராய முடியும்," என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- 3ஆவது டி20I: சொதப்பிய இந்தியா, எளிதில் வென்ற இலங்கை அணி - முக்கிய ஹைலைட்ஸ்
- கொரோனா சிகிச்சைக்கு காசில்லாமல் தவிக்கும் இந்தியர்கள்: 'வறுமையில் வீழ்ந்த 23 கோடி பேர்'
- 'ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள்' - அன்வர் ராஜா
- கஞ்சா பயன்படுத்தும் ஒலிம்பிக் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்?
- திருடப்பட்ட கில்காமேஷ் காப்பியம் - பறிமுதல் செய்த அமெரிக்கா
- தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
- தீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா?
- சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?
- ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்