You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜீன்ஸ் அணிந்ததற்காக கொலையா? உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய கொடுமையின் பின்னணி என்ன?
- எழுதியவர், ராஜேஷ் ஆர்யா
- பதவி, தேவரியாவிலிருந்து பிபிசி இந்திக்காக
நேஹா பாஸ்வானுக்கு 17 வயது. அவள் ஒன்பதாம் வகுப்பு செல்லவிருந்தாள். படித்து காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது அவளுடைய ஆசை. ஆனால் அவளது மரணத்துடன் இந்தக் கனவும் மறைந்துவிட்டது..
அவரது வீட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாலத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது உடல் ஜூலை 20 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
நேஹா தனது தாத்தா, பாட்டி , சித்தப்பா மற்றும் சித்தி ஆகியோரால் அடித்து கொல்லப்பட்டார் என்றும், நேஹா ஜீன்ஸ் அணிவதை நிறுத்தாததே இதற்குக் காரணம் என்றும் அவரது தாயார் சகுந்தலா தேவி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தின் மஹுவாடி காவல் நிலைய பகுதியில் உள்ள சவ்ரேஜி கர்க் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசிக்கும் அமர்நாத் பாஸ்வானுக்கு, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். நேஹா அவர்களின் மூன்றாவது குழந்தை. அமர்நாத் பாஸ்வான் லூதியானாவில் தினக்கூலி வேலை செய்கிறார்.
சம்பவம் நடந்த அன்றும் அவர் லூதியானாவில் இருந்தார். தகவல் கிடைத்ததும் அவர் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அன்று என்ன நடந்தது என்று நேஹாவின் தாய் சகுந்தலா தேவியிடம் கேட்டோம்.
"நேஹா திங்களன்று விரதம் இருந்தாள். காலையில் பூஜை செய்தாள். மாலையில் குளித்துவிட்டு ஜீன்ஸ் - டாப் அணிந்து கடவுளை வணங்கினாள். அந்த நேரத்தில் யாரும் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் அதன் பிறகு நேஹாவின் தாத்தா பாட்டி, சித்தப்பா, சித்தி அவள் ஜீன்ஸ் அணிவதை ஆட்சேபித்தனர். அணிவதற்குத்தான் அரசு ஜீன்ஸ் தயாரித்துள்ளது, ஆகவே நான் இதை அணிவேன், கல்வி கற்பேன், இந்த சமூகத்தில் வாழ்வேன் என்று நேஹா பதில் சொன்னாள்," என்று அவர் குறிப்பிட்டார்.
"நேஹாவின் பதிலைக் கேட்டவுடன், தாங்கள் அவளை ஜீன்ஸ் அணியவோ, படிக்கவோ அனுமதிக்கப் போவதில்லை என்று அவளது தாத்தா, பாட்டி கூறினார்கள். அதன் பிறகு எல்லோரும் சேர்ந்து அவளை அடித்து நொறுக்கினார்கள். இது நேஹாவின் மரணத்திற்கு வழிவகுத்தது," என்று நேஹாவின் தாய் தெரிவித்தார்.
அடித்ததால் நேஹா மயக்கம் அடைந்துவிட்டதாகவும், அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தனது மாமியாயாரும்,மைத்துனரும் தன்னிடம் கூறியதாக சகுந்தலா தேவி கூறினார்.
கண்டக் நதிப்பாலத்தில் தொங்கிய நிலையில் நேஹா உடல்
"மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அவர்கள் நேஹாவை ஆட்டோவில் ஏற்றிய விதத்தை பார்த்தபோது, என் மகள் இறந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது,"என சகுந்தலா தேவி கூறினார்.
தான் மூன்று முறை ஆட்டோவில் ஏறி மகளோடு செல்ல முயன்றதாகவும்,ஆனால் தான் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாமியார் மற்றும் மைத்துனர் வீடு திரும்பியபோது, நேஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவளது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் சகுந்தலா தேவியிடம் கூறினார்கள். ஆனால் மருத்துவர்கள் பேசக்கூடாது என்று கூறியதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு இந்த சம்பவம் குறித்து தனது உறவினர்களுக்கு தெரிவித்ததாக சகுந்தலா தேவி கூறுகிறார். அவரது உறவினர்கள் வந்து நேஹாவைத் தேடி தேவரியா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை காலை, கண்டக் ஆற்றில் பட்னவா பாலத்தில் ஒரு சிறுமியின் சடலம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். சகுந்தலா தேவியின் உறவினர்கள் அங்குசென்று பார்த்தபோது தொங்கிக் கொண்டிருந்த உடல் நேஹாவினுடையது என்று அறிந்தார்கள்.
நேஹாவின் உடலை ஆற்றில் வீச முயற்சி நடந்திருப்பதாக நேஹாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அப்படி வீசும்போது அவரது கால்களில் ஒன்று இரும்புக் குழாயில் சிக்கியது போலத்தெரிகிறது.
தகவல் கிடைத்ததும் அங்குவந்த போலீசார் நேஹாவின் உடலை இறக்கி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் குடும்பத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை.
சகுந்தலா தேவியின் புகாரின் பேரில், நேஹாவின் தாத்தா பரம்ஹன்ஸ் பாஸ்வான், உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 147, 302 மற்றும் 201 வது பிரிவுகளின் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
"இந்த வழக்கில் தாத்தா, பாட்டி மற்றும் ஒரு சித்தப்பாவை காவலில் வைத்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது," என்று காவல்துறை அதிகாரி ஸ்ரீயாஷ் திரிபாதி பிபிசியிடம் தெரிவித்தார்.
10 பேர் மீது குற்றச்சாட்டுகள்
இந்தக் கொலை ஜீன்ஸ் அணிந்தது தொடர்பாக நடந்ததா என்று டி.எஸ்.பி யிடம் கேட்டபோது, "நாங்கள் செவ்வாய்க்கிழமை காலை சிறுமியின் தாயிடம் பேசியபோது, அவர் அப்படி எதுவும் எங்களிடம் சொல்லவில்லை. அந்த நேரத்தில் அவர் துவைத்த துணிகளை உலர்த்துவது தொடர்பாக தகராறு இருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அதே நாள் மாலை அவர் தனது எழுத்து மூலமான புகாரில்,ஜீன்ஸ் அணிவது தொடர்பான சர்ச்சை குறித்து குறிப்பிட்டிருந்தார். இந்தப்புகாரின் அடிப்படையில் மஹுவாடி காவல்துறை 10 பேருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது,"என்று தெரிவித்தார்.
நேஹாவின் தந்தை அமர்நாத் தரையை பாலீஷ் செய்யும் வேலை செய்கிறார். கடந்த ஆறு மாதங்களாக அவர் பஞ்சாபின் லூதியானாவில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக அவர் டெல்லியில் வேலை செய்தார்.
அமர்நாத்தின் மூத்த மகள் நிஷா ஒரு பட்டதாரி. அவர் வீட்டில் இருந்தபடி தையல் - எம்பிராய்டரி வேலை செய்து தனது குடும்பத்திற்கு உதவுகிறார். நிஷாவின் தம்பி விஷால் பாஸ்வான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தவர். குஜராத்தின் வதோதராவில் வசிக்கும் இவர் வெள்ளையடிக்கும் வேலை செய்கிறார். இளைய மகன் விவேக் பாஸ்வான் ஏழாம் வகுப்பில் படித்து வருகிறார்.
வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீமதி சாந்தி தேவி மேல்நிலைப்பள்ளியில் நேஹா மற்றும் விவேக் படிக்கின்றனர். நேஹா இந்த ஆண்டு எட்டாவது வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஒன்பதாம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.
"நேஹா நன்கு படித்து காவல்துறை அதிகாரியாகி குடும்பத்தின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை," என சகுந்தலா தேவி வருத்தத்துடன் தெரிவித்தார்.
நேஹாவின் தந்தை அமர்நாத் பாஸ்வான் நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளில் மூத்தவர். இவரது குடும்பம் இடிந்த நிலையில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வருகிறது.
இவர்கள் கடினமாக உழைத்து வாழ்க்கை நடத்திவருகின்றனர். குடும்பத்திடம் சிறிய வேளாண் நிலம் உள்ளது. இது தற்போது அவரின் பெற்றோரின் பெயரில் உள்ளது.
தான் உழைத்து குழந்தைகளை படிக்க வைத்ததாக, அமர்நாத் பாஸ்வான் கூறினார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் உடைகள் விஷயத்தில் தான் ஒருபோதும் தலையிட்டதில்லை என்றும் அவர்கள் படித்து முன்னேறவேண்டும் என்றே தான் விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது மாமியார் வீட்டில் உள்ளவர்கள் தன்னையும் குழந்தைகளையும் நீண்ட காலமாக துன்புறுத்துவதாக சகுந்தலா தேவி கூறுகிறார்.
தானும், தனது பிள்ளைகளும் அங்கே தங்குவதை அவர்கள் விரும்பவில்லை என்கிறார் அவர். சகுந்தலாவின் சகோதரியின் மகன் அஜய் பாஸ்வானும் இதை உறுதிப்படுத்தினார்.
கிராமத்தில் அமைதி
பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேஹாவின் உடலுடன் வீட்டிற்கு வந்தபோது, உடலை காரில் இருந்து வெளியே எடுக்க ஒருவர் மட்டுமே முன்வந்தார், வேறு யாரும் இல்லை என்று அஜய் பாஸ்வான் கூறுகிறார்.
நேஹாவின் உடல் இறுதி சடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, கிராம மக்கள் அதை எதிர்த்ததாக அஜய் கூறினார். இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் காவல்துறையினர் வந்து தங்கள் பாதுகாப்பில் இறுதி சடங்குகளைச் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிராமத்தில் யாருமே எதுவும் சொல்லத் தயாராக இல்லை. கிராமத் தலைவர் ராஜு ராவ் கிராமத்தில் இல்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நேஹாவின் தாய் சகுந்தலா தேவி , "என் மகள் போய்விட்டாள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்படுவதை நான் விரும்பவில்லை. இவர்கள் தங்கள் கடைசி காலம் வரை சிறையில் இருக்க வேண்டும். நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் ,"என்றார்.
நேஹாவின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவளுடைய பள்ளிக்கூடத்தை நான் பார்த்தேன். 'கல்வியறிவு பெற்ற பெண், வீட்டின் வெளிச்சம்" என்று பள்ளிச்சுவரில் எழுதப்பட்டிருந்தது. நேஹாவும் தனது குடும்பத்திற்கு ஒளியாக இருந்திருக்கக்கூடும் என்பதை நினைக்கும்போது மனம் ஏனோ கொஞ்சம் வலிக்கிறது.
பிற செய்திகள்:
- ராஜ் குந்த்ராவின் ஹாட்ஷாட்ஸ் செயலி: "என் கணவர் தயாரித்தது ஆபாச படம் அல்ல" - ஷில்பா ஷெட்டி
- தோற்றாலும் துவளாத 12 வயது 'ஒலிம்பிக் நம்பிக்கை' ஹெண்ட் ஸாஸா
- இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
- யார் இந்த மீராபாய் சானு? மன இறுக்கத்தில் விழுந்தது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்