தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில்கள், மால்களைத் திறக்க அனுமதி

பட மூலாதாரம், ARUN SANKAR
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஐந்தாம் தேதி முதல் கோயில்கள், வணிக வளாகங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. பிற மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க தற்போது உள்ள ஊரடங்கை மேலும் சில தளர்வுகளோடு ஜூலை 5ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதில், வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மாலை ஏழு மணி வரை நேரத் தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படும்.
மின் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், ஹார்ட்வேர் கடைகள், பாடப்புத்தகங்கள், ஸ்டேஷனரி கடைகள், காலணி கடைகள், பாத்திரக் கடைகள், ஃபேன்சி பொருட்களை விற்கும் கடைகள், தையல் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், மின் பொருட்கள் பழுது நீக்கும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன்கள், அதனைச் சார்ந்த பொருட்களை விற்கும் கடைகள், கணினிகள், கணினி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் இரவு ஏழு மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள், சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
வகை 2ல் உள்ள மாவட்டங்களில் என்ன தளர்வு?

பட மூலாதாரம், PRAKASH SINGH
வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏழு மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செல்போன், கணினி விற்பனை செய்யும் கடைகளும் மாலை ஏழு மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் மாலை 7 மணிவரை அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
இந்த மாவட்டங்களில், மாவட்டங்களுக்குள் மட்டும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு இடையில் பொதுப் பேருந்து சேவை 50 சதவீத பயணிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட மூன்றாம் வகை மாவட்டங்களில் என்ன தளர்வுகள்?

பட மூலாதாரம், ARUN SANKAR
மூன்றாம் வகையில் உள்ள 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளோடு கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
- அனைத்துத் துணிக் கடைகள், நகைக்கடைகள் ஆகியவை குளிர் சாதன வசதியில்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மாலை 7 மணிவரை இயங்கலாம்.
- வணிக வளாகங்கள் மாலை 7 மணிவரை இயங்கலாம். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படுகின்றன. விழாக்கள், குடமுழுக்குகளை நடத்த அனுமதியில்லை.
இரண்டாம் வகை, மூன்றாம் வகை மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன.
வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கு இனி இ - பதிவு தேவையில்லை. மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி பழுது நீக்குபவர்களுக்கு இனி இ - பதிவு தேவையில்லை. அனைத்து அரசு அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்களும் நிதிச் சேவை நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மாலை 5 மணிவரை திறந்திருக்கும்.
பொதுவான தளர்வுகள்

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA
அனைத்துக் கடற்கரைகளும் காலை 5 மணி முதல் 9 மணிவரை திறந்திருக்கும்
தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
இரண்டாம் வகை, மூன்றாம் வகை மாவட்டங்களுக்கு இடையே திருமணங்களுக்காக இ - பதிவு இன்றி பயணிக்கலாம். ஒன்றாம் வகை மாவட்டங்களுக்கு இடையேயும் 2-3ஆம் வகை மாவட்டங்களில் இருந்து ஒன்றாம் வகை மாவட்டத்திற்கும் இ - பாஸ் எடுத்து பயணிக்கலாம். திருமணங்களில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க வேண்டுமானால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












