பிட்காயினின் எதிர்காலத்தை இந்திய அரசு எப்போது முடிவு செய்யும்?

    • எழுதியவர், ஜுபைர் அஹமது
    • பதவி, பிபிசி நிருபர்

கடந்த சில ஆண்டுகளில், பிளாக்செயின் மென்பொருள் வழியாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயங்கள் அதிகம் பிரபலமடைந்து வருகின்றன. இந்த டிஜிட்டல் நாணயங்கள் குறியாக்கம் செய்யப்படுகின்றன. அதாவது குறியீடுகளால் அறியப்படுபவை. எனவே அவை கிரிப்டோகரன்சி என்றும் அழைக்கப்படுகின்றன.

உலகெங்கிலும், நாணயங்கள் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் கிரிப்டோகரன்சிகளின் விஷயத்தில் இப்படி இல்லை. இவற்றின் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவற்றை வாங்கி விற்கும் பொதுமக்களின் கைகளில் உள்ளது.

பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் அவற்றை சட்டவிரோதமாகக் கருதுகின்றன அல்லது அவற்றை ஏதேனும் ஒரு வடிவத்தில் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலல்லாமல், தென் அமெரிக்க நாடான எல் சால்வடோர் இப்போது அதன் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதனைச் செயல்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவியை அது உலக வங்கியிடம் கோரியது. அதை மறுத்த உலக வங்கி, இது குறித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறிவிட்டது.

மறுபுறம், சீனா இதுவரை கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 1100 பேரை பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.

டிஜிட்டல் நாணயம் வேகமாகப் பிரபலமடைவதைக் கருத்தில் கொண்டு சீனா இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது, அரசாங்கங்கள் கிரிப்டோகரன்ஸிகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்ற சூழலில், சீனா தொடங்கியுள்ள டிஜிட்டல் நாணயப் பரிவர்த்தனை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், டிஜிட்டல் யுவான், பாரம்பரிய யுவான் நாணயத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே. இது கடந்த ஆண்டு சீனாவின் சில நகரங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் டாலரை அறிமுகப்படுத்த அமெரிக்காவும் பரிசீலித்து வருகிறது.

இந்தியாவும் கிரிப்டோ கரன்சியும்

கிரிப்டோகரன்சிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் தற்போது இந்தியாவில் 19 கிரிப்டோ பரிவர்த்தனைச் சந்தைகள் உள்ளன. இதில் வஜீர்எக்ஸ் என்ற பெயர் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (ஃபெமா) 1999 இன் கீழ் ரூ .2,971 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் குறித்த கணக்கைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் அமலாக்க இயக்குநரகம் (இ.டி) வஜீர்எக்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் நிசால் ஷெட்டியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் குறித்த தகவல் சரிபார்ப்பு ஆவணமான KYC முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை என்று வஜீர் எக்ஸ் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது. சீன நாட்டினர் சிலர், தங்கள் வஜீர் எக்ஸ் வாலட்டில் பரிவர்த்தனை செய்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவிக்கிறது. வஜீர்எக்ஸின் நிறுவனர் ஷெட்டி, இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, மூன்று ட்வீட்கள் செய்திருந்தார். அதில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்தார்.

இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சிகள் தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்கள் அல்லது விதிகள் எதுவும் இல்லை. இதன் காரணமாகத் தான் வஜீர் எக்ஸ் விவகாரத்தில் கூட, கே ஒய் சி முறையாகப் பெறப்படவில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சிகளைக் கண்காணிக்கும் மசோதாவை இந்திய அரசு அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தலாம். மெய்நிகர் நாணயத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் எஸ்சி கர்க் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இது தவிர, பல அமைச்சகங்களின் கூட்டுக் குழுவின் அறிக்கையும் அரசாங்கத்திடம் உள்ளது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்ய எஸ்சி கர்க் குழு அறிவுறுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மார்ச் மாதத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெய்நிகர் நாணயங்கள் தடை செய்யப்படாமல் கட்டுப்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அரசு தெளிவான நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. அதன் இறுதி முடிவு என்ன என்பது மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே அறியப்படும்.

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

உலகில் ரூபாய், டாலர் மற்றும் யூரோ போலப் பல நாணயங்கள் கடந்த 10-12 ஆண்டுகளில் மெய்நிகர் உலகில் தோன்றியுள்ளன. அவற்றின் புகழ் மற்றும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவை குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

பரவலாகப் பார்த்தால், கிரிப்டோகரன்ஸிகள், டோக்கன்கள் அல்லது டிஜிட்டல் "நாணயங்கள்" வடிவத்தில் இருக்கும் மெய்நிகர் அல்லது டிஜிட்டல் பணம். கிரிப்டோகரன்சிகள் அரசாங்க விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அத்தகைய நாணயங்களில் மிகவும் பிரபலமானது பிட்காயின். கடந்த வாரம் ஒரு பிட்காயினின் விலை சுமார் 30 லட்சம் ரூபாயாக இருந்தது. உலகெங்கிலும் சுமார் 2 கோடி பிட்காயின்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் இரண்டாயிரம் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவற்றின் மதிப்பு தொடர்ந்து பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் அதன் மதிப்பு 50 சதவீதம் குறையக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள், வேறு சில நிபுணர்கள் இது 30 லட்சத்திலிருந்து 75 லட்சமாக உயரக்கூடும் என்று நம்புகிறார்கள்.

அத்தகைய மறைகுறியாக்கப்பட்ட அல்லது குறியிடப்பட்ட நாணய வகைகளின் எண்ணிக்கை சுமார் நான்காயிரம் ஆகும், ஆனால் பொது மக்களுக்கு பிட்காயின் என்ற பெயர் மட்டுமே தெரியும்.

இந்தியாவில் பொது மக்களிடையே இப்போது இது குறித்த தகவல்கள் மிகக் குறைவு. உலகின் பல நாடுகளிலும் இதே நிலைமை தான். கூகுள் ட்ரெண்டுகளைப் பார்த்தால், 'பிட்காயின்' என்ற வார்த்தையைத் தேடுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, அதாவது, அதில் மக்கள் காட்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

கிரிப்டோவும் பிளாக்செயினும்

Cryptocurrency என்பது Blockchain எனப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரவீன் விஷேஷ் என்பவர், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு பெரிய ஹெட்ஜ் நிதியத்தின் போர்ட்ஃபோலியோ மேலாளராக உள்ளார். இவரது பணி, நாணய வர்த்தகம் தொடர்பானது.

பிபிசியுடனான உரையாடலில், அவர் கூறுகிறார், "பிளாக்செயின் என்பது எதிர்காலத்தின் தொழில்நுட்பத் தளமாகும். இது கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனைகள் நடைபெறும் தளமாகும். பிளாக்செயின் என்பது தகவல்களைப் பதிவு செய்யும் ஒரு அமைப்பாகும், இதில் தகவல்களை மாற்றவோ அல்லது ஹேக் செய்யவோ இயலாது"

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள லியோனார்ட் குக்கோஸ் கிரிப்டோகரன்சியின் வளர்ச்சியை ஆதரிப்பவரும் ஒரு முதலீட்டாளரும் ஆவார். அவர் இந்தத் துறையில் மிகவும் பரபரப்பாகப் பணியாற்றிவருகிறார். பிளாக்செயின் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் அவர் ஒரு நிபுணர்.

பிபிசி-யின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர், "எளிமையாகச் சொல்லவேண்டுமானால், பிளாக்செயின் என்பது ஒரு சிறப்பு வகைத் தரவுத் தளம். இதை பகிர்ந்தளிக்கப்பட்ட கணக்கு என்று கூறலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்கிறது, இதனால் மாற்றல், ஹேக் அல்லது மோசடி செய்தல் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனென்றால் அனைத்துப் பரிமாற்றங்களும் கணினி வலைப்பின்னலில், குறியாக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன." என்று விளக்குகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்த கணினிகள் nodes என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் முக்கிய வேலை ஒவ்வொரு பரிவர்த்தனையையும் சரிபார்த்துப் பதிவுசெய்வதாகும். ஒவ்வொருவரும் ஒரு node ஆகச் செயல்பட முடியும். ஆனால் நெட்வொர்க்கின் கட்டுப்பாடு யாருக்கும் முழுமையாக இருக்க முடியாது. அதனால் பிளாக்செயின் ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பு " என்று விவரிக்கிறார்.

கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் அவை பின்னிப்பிணைந்துள்ளன. லியோனார்ட் சொல்வது போல், "பிளாக்செயின் ஒரு சிதறிய கணக்கு. அதேசமயம் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் அந்தக் கணக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிட்காயின் தன் பிளாக்செயின் இல்லாமல் இயங்க முடியாது. இருப்பினும் கிரிப்டோகரன்ஸிகளைத் தவிர வேறு விஷயங்களிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது."

பிட்காயின் ஒன்று மட்டும் கிரிப்டோகரன்சி அல்ல. எத்தேரியம், டெதர், கார்டானோ, போல்கடாட், ரிபல் மற்றும் டோஜ் காயின் போன்ற பல கிரிப்டோகரன்ஸிகள் உள்ள. ஒவ்வொரு ஆண்டும் இவற்றின் கோடிக் கணக்கான டாலர் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.

கிரிப்டோகரன்சி சந்தையில் பிட்காயின் தான் முதன்முதலில் வந்த, மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியாகும். பிட்காயின் 2009 இல் தொடங்கப்பட்டது. இன்று அதன் மொத்தச் சந்தை மதிப்பு 732 பில்லியன் டாலர். அதாவது பிட்காயின் மட்டும் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விஞ்சுகிறது.

தற்சமயம், ஒரு பிட்காயின் விலை 30 லட்சம் ரூபாய். சமீபத்தில், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது நிறுவனம் பிட்காயின் நாணயத்தில் கார்களுக்கான விலையைப் பெறாது என்று அறிவித்ததை அடுத்து, ​பிட்காயின் விலை ரூ .45 லட்சத்திலிருந்து ரூ .25 லட்சமாகக் குறைந்தது. இப்போது மெதுவாக அதன் மதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

நம்பிக்கை இல்லாத பணம் வெற்றுக் காகிதமே

கிரிப்டோகரன்ஸிகள் தற்போது நம்பகத் தன்மையை இழந்து வருகின்றன. அரசாங்கங்கள் இதைச் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்கின்றன. தவிர, பாரம்பரிய நாணயத்திற்கு அச்சுறுத்தலாகவே இவை கருதப்படுகின்றன. கிரிப்டோகரன்ஸிகள் மெய்நிகர் உலகின் ஒரு பகுதியாகும், இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முயற்சிக்கிறது. உண்மை உலகத்திற்கு இணையாகச் செயல்பட முயற்சிக்கிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் விஷேஷ், "அரசாங்கங்கள் கிரிப்டோகரன்ஸிகளை எதிர்ப்பதற்கான முதல் காரணம் இந்தச் சந்தைகளை கட்டுப்படுத்த இயலாமை என்று நான் நினைக்கிறேன். உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் இந்த சந்தைகளுக்கான விதிமுறைகள் இல்லாமை ஆகிய காரணங்களால் அரசாங்கங்களால் இந்தச் சந்தைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை." என்று கருத்து தெரிவிக்கிறார்.

லியோனார்ட் குகோஸ், "கிரிப்டோகரன்ஸிகளைப் பற்றிய பொதுவான விமர்சனங்களில் ஒன்று, அவை உண்மையான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதாகும். எடுத்துக்காட்டாக, பிட்காயினுக்கு உண்மையான மதிப்பு இல்லை என்றும் இறுதியில் எந்த மதிப்பும் இருக்காது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஏனெனில் எந்த இறையாண்மையுள்ள அரசாங்கமும் அதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. " என்கிறார்.

மேலும் அவர், "அமெரிக்காவில் 100 டாலர் நோட்டை அச்சிடுவதற்கு 14 காசுகள் மட்டுமே செலவாகிறது. அப்போது, மீதமுள்ள மதிப்பு எங்கிருந்து வருகிறது? இந்தக் கேள்விக்குப் பதில் - நம்பிக்கை. நாணய பயனர்களான நாம், உண்மையான மதிப்பிற்காகவே பாரம்பரிய நாணயங்களை நம்புகிறோம். நம்பிக்கை இல்லாத பணம் வெறும் காகிதம் தான்" என்கிறார்.

பிரபல இஸ்ரேலிய சிந்தனையாளரும் வரலாற்றாசிரியருமான யுவல் நோவா ஹராரி, "ஒரு சமூகத்தின் நம்பிக்கையைப் பெறாவிட்டால், எந்தப் பணமும் வெறும் காகிதம்தான்" என்கிறார். அவர் தனது ஒரு புத்தகத்தில், "பணம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் மிகவும் உலகளாவிய மற்றும் திறமையான அமைப்பாகும்" என்று கூறுகிறார்.

ஆரம்பத்தில் மக்கள் பணத்தைக் கூட நம்பவில்லை, மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு யுகம் தேவை என்பதே அவரது வாதம். கிரிப்டோகரன்ஸிகளின் விஷயத்திலும் இது நிகழலாம் என்கிறார் அவர்.

கிரிப்டோகரன்சிகளின் சட்ட விரோதப் பயன்பாடு

கிரிப்டோகரன்ஸிகள் பண மோசடியை மறைப்பதற்காகவும் கள்ளக்கடத்தல் மற்றும் பயங்கரவாத உதவிகளை மறைப்பதற்காகவும் கையாளப்படும் உத்தி என்ற ஒரு அச்சமும் அரசுகளுக்கு இருக்கிறது. ஆனால் இந்த நாணயங்களை ஆதரிப்பவர்கள் கறுப்புப் பண மோசடி, லஞ்சம் மற்றும் பயங்கரவாதத் திட்டங்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நாணயங்களையும் பயன்படுத்தமுடியும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

பிரவீன் விஷேஷின் கூற்றுப்படி, கிரிப்டோகரன்ஸிகளைக் கண்காணிக்க அரசாங்கங்களுக்கும் மத்திய வங்கிகளுக்கும் தற்போது விதிகள் அல்லது தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இல்லை.

அவர் கூறுகிறார், "பல தசாப்தங்களாக, மத்திய வங்கிகள் பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளை கண்காணித்து வருகின்றன, ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான விளக்கம் மற்றும் அந்நியச் செலாவணி விஷயத்தில் காரணங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றில் KYC மற்றும் பணமோசடி எதிர்ப்புக் கொள்கைகளும் அடங்கும். இருப்பினும், கிரிப்டோகரன்ஸிகளுக்கு அத்தகைய விதிமுறைகள் எதுவும் இல்லை. "

லியோனார்ட், இது ஒரு கட்டுப்பாடான அமைப்பு முறை என்று கூறுகிறார். "பிட்காயினின் ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால், இது அரசாங்கங்கள் அல்லது மத்திய வங்கிகளின் மேற்பார்வை இல்லாமல், ஒருவருக்கும் மற்றொருவருக்கும் நடுவே என்க்ரிப்ட் செய்யப்பட்டது, தவிர, பரவலாக்கப்பட்டது. அரசின் கண்காணிப்புக்குத் தேவையே இல்லை. அரசுகளின் அச்சத்துக்கு இதுவும் ஒரு காரணம். இது கட்டுப்பாட்டை நோக்கிய ஒரு போட்டி தான். கட்டுப்பாடு என்பது ஆதிக்கம் தான்." என்பது அவர் கருத்து.

ஒருவேளை இதனால் தான், கிரிப்டோகரன்ஸிகளுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கலாம், அமெரிக்கா அதைக் கட்டுப்படுத்த நினைக்கலாம்.

கிரிப்டோகரன்ஸியின் மீதான நம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

பெரிய நிறுவனங்களும் வங்கிகளும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினால், இதன் பயன்பாடு விரிவடையும், இதன் மீது நம்பிக்கை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பல பெரிய நிறுவனங்கள் இப்போது கிரிப்டோ நாணயத்தை ஏற்றுக்கொள்கின்றன என்று பிரவீன் விஷேஷ் கூறுகிறார், கோல்ட்மேன் சேக்ஸ்(Goldman Sachs) நிறுவனம், தனது முக்கிய வாடிக்கையாளர்களின் சேவையில் பிட்காயின் மற்றும் ஈதரை அதிகம் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

நம்பிக்கையைப் பெறக் கால தாமதம் ஆகலாம் என்று லியோனார்ட் கூறுகிறார். "கிரிப்டோகரன்ஸிகள் வெளிப்படையான புழக்கத்திற்கு வர கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆனது, ஆனால் பாரம்பரிய நாணயங்கள் இதனுடன் ஒப்பிடும்போது அதிக காலம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது."

ஜெர்மனியின் சர்வதேச டாய்ஷ் வங்கி சமீபத்தில் கிரிப்டோகரன்ஸிகளின் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக உள்ளடக்கிய 'கட்டண முறைகளின் எதிர்காலம்' குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

அதில், "பாதுகாப்பு, வேகம், குறைந்த பரிவர்த்தனை கட்டணம் மற்றும் டிஜிட்டல் யுகத்திற்கு ஈடுகொடுக்கும் திறன் போன்ற நன்மைகள் இருந்தும், கிரிப்டோகரன்ஸிகள் இன்னும் பணம் செலுத்துவதற்கான வழிமுறையாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இது மாறக்கூடும் என்று ஆய்வுக் கட்டுரை கூறினாலும், "கூகிள், அமேசான், பேஸ்புக், ஆப்பிள் அல்லது டென்சென்ட் போன்ற சீன நிறுவனத்துடனான பரிவர்த்தனைகளில் கிரிப்டோகரன்ஸிகளுக்கான சில தடைகளை சீன அரசு நீக்கினால், கிரிப்டோகரன்ஸ்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். பணத்தை மாற்றுவதற்கான திறனை அவர்களுக்கு இது வழங்கும். பிளாக்செயின் வாலட்டைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தால், தசாப்தத்தின் முடிவில், கிரிப்டோகரன்சி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடி வரை உயரலாம். இது தற்போதைய அளவை விட நான்கு மடங்கு அதிகம். "

கடும் ஏற்ற-இறக்கம் ஒரு பலவீனம்

கிரிப்டோ சந்தையில் பணத்தை முதலீடு செய்ய பலர் பயப்படுகிறார்கள், ஏனெனில் அவற்றின் விலைகளில் பெருமளவில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. "மற்றவர்கள் பேராசை கொள்ளும்போது நீங்கள் பயப்படுகிறீர்கள், மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசை கொள்கிறீர்கள்" என்று அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரும் வர்த்தகருமான வாரெ பஃபே இந்த நிலையை மனதில் கொண்டு தான் கூறினார் போலும்.

இந்தச் சூத்திரத்தைப் பின்பற்றியே அவர் கோடிக்கணக்கில் வருமானமீட்டினார். ஆனால், பாரம்பரிய நாணயங்களின் மதிப்பும் சில நேரங்களில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன.

"துருக்கிய லிரா மற்றும் ரஷ்ய ரூபிள் போன்ற சில நாணயங்கள் ஸ்திரத்தன்மை இல்லாதவை. வேகமாக வளரும் எந்த ஒரு உற்பத்தியையும் போலத் தான் கிரிப்டோகரன்ஸிகளும் மிகவும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன" என்கிறார் பிரவீன் விஷேஷ்.

வரவிருக்கும் தசாப்தத்தில் பல வழிகளில் பாரம்பரிய வங்கி முறைகளுடன் ஒப்பிடுகையில் கடன் வாங்குதல், கடன் வழங்குதல் மற்றும் வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முறைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கலாம் என்று கணிக்கிறார் ப்ரவீண் விஷேஷ்.

கிரிப்டோகரன்ஸிகளை ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவதாக லியோனார்ட் கூறுகிறார். "கிரிப்டோகரன்ஸிகளின் அங்கீகாரம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நிதி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகும். பேபால் போன்ற நிதி நிறுவனங்கள் கணக்குகளில் பிட்காயின் வர்த்தகம் செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளன."

ஆனால் கிரிப்டோகரன்ஸிகள் ஒரு நீர்க் குமிழி என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் பல வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் லியோனார்ட் "பல வழிகளில் கிரிப்டோகரன்ஸிகளின் எதிர்காலம் நமது கண் முன் தெரிகிறது" என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :