You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி - விலை சரிவுக்கு காரணம் என்ன?
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
இன்றைய மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.15% (76 புள்ளிகள்) அதிகரித்து 52,551 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி50 0.08% (12.5 புள்ளிகள்) ஏற்றம் கண்டு 15,811 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
ஆனால் அதானி குழும நிறுவன பங்குகள், இந்த சந்தை சூழலுக்கு பொருந்திப் போகாமல் கொஞ்சம் அதிகமாகவே விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன.
இந்திய பங்குச் சந்தைகளில் கெளதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
ஆறு பங்குகளில், அதானி க்ரீன் எனர்ஜி மட்டுமே 0.68% விலை அதிகரித்து 1,226 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
மற்ற ஐந்து பங்குகளும் 4.9 சதவீதம் முதல் 9.2 சதவீதம் வரை விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன. அதானி பவர், அதானி டோடல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய பங்குகள் லோயர் சர்க்யூட் விலையைத் தொட்டிருக்கின்றன.
சர்க்யூட் விலை என்றால் என்ன?
ஒரு பங்கின் விலை, ஒரு நாளில், ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் அதிகமாக உயரவோ, ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் அதிகமாக சரிவையோ காணக் கூடாது என பங்குச் சந்தைகள் நிர்ணயிக்கும் ஒரு விலை வரையறை வரம்பை தான் சர்க்யூட் என்பார்கள்.
அதிகபட்ச விலை வரம்பை அப்பர் சர்க்யூட் எனவும், குறைந்தபட்ச விலையை லோயர் சர்க்யூட் எனவும் அழைப்பார்கள்.
மேலே குறிப்பிட்ட மூன்று அதானி நிறுவன பங்குகள், லோயர் சர்க்யூட் விலையைத் தொட்டிருக்கின்றன.
அதானி என்டர்பிரைசஸ் 5.7% விலை சரிந்து 1,510 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஆறு அதானி நிறுவன பங்குகளில், அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட் நிறுவனம் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 9.2% விலை சரிந்து 762 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த சரிவுக்கு வதந்திகள்தான் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பட்டையக் கணக்காளர் மற்றும் 1991ஆம் ஆண்டு முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து வரும் ஸ்ரீராம் பாலசுப்ரமணியம்.
"அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (Foreign Institutional Investors) டெபாசிட்டரி கணக்குகளை முடக்கிவிட்டார்கள் என புரளி கிளப்பிவிடப்பட்டு இருக்கிறது.
நம் வங்கிக் கணக்கில் எப்படி நமக்கு சொந்தமான பணம் இருக்கிறதோ, அப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கும் இந்திய பங்குகள், டெபாசிட்டரி பார்டிசிபன்ட் என்கிற கணக்கில் வைத்திருப்பார்கள்.
அவர்களின் கணக்கே முடக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி சமுக வலைதளங்களில் வெளியான உடன், சந்தையில் ஏற்பட்ட சலசலப்பினாலும் பயத்தினாலும் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை சரிந்திருக்கிறது.
அதே போல வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக அதானி குழுமத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள். எனவே செபி வரையறுத்த அளவை விட குறைந்த அளவிலான பங்குகளே சந்தையில் வர்த்தகமாகிறது எனவும் வதந்திகள் இருக்கின்றன.
ஆனால் எனக்கு தெரிந்த வரை அந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே முதலீடு செய்துவிட்டனர்.
ஒருவேளை செபியின் வரையறைகளை மீறி இவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றால் 2018 காலகட்டத்திலேயே இந்த விவரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை.
இது போக, அதானி குழுமம் தன் பங்குகளை யார் வைத்திருக்கிறார்கள் என்கிற Shareholding Pattern விவரங்களை, கடந்த பல காலாண்டுகளாக பங்குச் சந்தைக்கும், செபி அமைப்பிடமும் சமர்பித்திருப்பார்கள். அதானி குழுமம் தவறு செய்திருந்தது என்றால் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே" என கேள்வி எழுப்புகிறார் ஸ்ரீராம்.
"பொதுவாக பங்குச் சந்தை ஏற்றும் கண்டு வரும் நேரத்தில் இது போன்ற புரளிகள் வருவது வழக்கமே.
ஒரு காலத்தில் நல்ல விலைக்கு வர்த்தகமாகி வந்த ரிலையன்ஸ் பவர், யெஸ் பேங்க் போன்ற நிறுவனங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் மோசடி போன்ற காரணங்களால் இன்று அதன் விலை தரை தட்டிவிட்டன.
அப்படி தங்கள் பணம் பறிபோய்விடக் கூடாது என்கிற நோக்கில் தான், தற்போது அதானி குழும நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் மக்கள் பங்குகளை பதற்றத்தில் விற்கிறார்கள். பங்கு விலையும் கொஞ்சம் சரிந்திருக்கிறது," என்கிறார் ஸ்ரீராம் சுப்ரமணியம்.
பிற செய்திகள்:
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- அ.தி.மு.கவில் அதிரடி; சசிகலாவுடன் பேசியோர் கட்சியிலிருந்து நீக்கம்
- கொரோனா ஊரடங்கால் நிகழ்ந்த மாற்றம்: கடலில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள்
- நஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர் பற்றி முழுமையாக தெரியுமா?
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்