நரேந்திர மோதியின் புதிய இல்லம் எப்படியிருக்கும்? சர்ச்சை ஏற்பட்டிருப்பது ஏன்?

பிரதமர் இல்லம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிபிசி குஜராத்தி
    • பதவி, புது டெல்லி

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் இருந்த மற்றொரு தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, ' உள்நோக்கம் கொண்டது' என கூறியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அலுவலகங்கள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு, புதிய மாநிலங்களவை மற்றும் மக்களவை கட்டிடம் கட்டப்படும். இது எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும். அடுத்த கட்டத்தில், குடியரசு துணைத்தலைவரின் குடியிருப்பு மற்றும் பிரதமரின் இல்லமும் புதிய இடத்திற்கு மாற்றப்படும்.

இந்த திட்டத்தின் செலவை "மோதியின் வீட்டிற்கான செலவு" என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால் பிரதமரின் புதிய வீட்டிற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மூன்றரை தசாப்தங்களாக, 7 லோக் கல்யாண் மார்க் தான் பிரதமர்களின் முகவரியாக இருந்து வருகிறது. இது ஒரு பங்களாக்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் அங்கு இடம் உள்ளது.

பிரதமரின் 'இல்லம்'

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரதமருக்கு அதிகாரபூர்வ குடியிருப்பு இருக்கவில்லை. நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, 3, தீன் மூர்த்தி பவனில் வசித்து வந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தளபதி இங்கு வசித்து வந்தார். எனவே இது 'ப்ளாக் ஸ்டாஃப் ஹவுஸ்' என்றும் அழைக்கப்பட்டது.

நேரு காலமான பிறகு இந்த குடியிருப்பு, நினைவு இல்லம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது. நேருவுக்குப் பிறகு, 1964-ல் லால் பகதூர் சாஸ்திரி நாட்டின் பிரதமரானார். மேலும் அவர் 10, ஜன்பத்தை தனது இல்லமாக மாற்றினார்.

'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கத்திற்கு பெயர் பெற்ற சாஸ்திரி இங்கு சில விவசாயப்பணிகளையும் செய்தார்.

1965-ல் பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு, அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யாவின் தாஷ்கெண்ட்டிற்கு சென்றார், அங்கு அவர் மர்மமான சூழலில் காலமானார். அவர் மாரடைப்பால் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது.

இந்த பங்களா வளாகத்தின் ஒரு பக்கத்தில் (இது அக்பர் சாலையில் உள்ளது) பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைமையகம் உள்ளது. மறுபுறம், மோதிலால் நேரு மார்க்கில், இப்போது லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு இல்லம் உள்ளது.

10 ஜன்பத்தில் உள்ள பங்களாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது தங்கியுள்ளார். 1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி பிரமராவதற்கு முன்னால், சோனியா காந்தி மற்றும் குழந்தைகளுடன் 10 ஜன்பத்தில் வசித்து வந்தார். தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

"அங்கு ஒரு மரத்தின் அடியில் ஒரு கல்லறை உள்ளது. தர்கா, கோயில் அல்லது வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் ஒருவர் வாழக்கூடாது என்று நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே அந்தக் குடும்பத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல துக்கங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்துள்ள நிலை ஏற்பட்டிருக்கக்கூடும்," என 10 ஜன்பத்திற்கு வந்திருந்த ஒரு பார்வையாளர் கூறுகிறார்.

இருப்பினும், 2004 முதல் 2014 வரை 'அதிகாரத்தின் இரண்டாவது மையமாக' 10 ஜன்பத் இருந்தது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

பிரதமர் இல்லம்

பட மூலாதாரம், Getty Images

ஹெச்.டி.தேவகெளடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் பிரதமர்களாக இருந்தபோதும், அவர்கள் சோனியா காந்தியை புறக்கணிக்கும் நிலையில் இருக்கவில்லை.

இது தவிர, சோனியா காந்தி கடந்த காலத்தில் மற்றொரு அதிகார மையத்தில் வசித்து வந்தார். அந்த முகவரி 7, லோக் கல்யாண் மார்க்.

நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, 1, சஃப்தர்ஜங் சாலையை தனது அதிகாரபூர்வ இல்லமாக தேர்வு செய்திருந்தார்.

1984 அக்டோபர் 31 ஆம் தேதியன்று இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் ராஜீவ் காந்தி பின்னர் நாட்டின் பிரதமரானார்.

அதன்பிறகு சஃப்தர்ஜங் குடியிருப்பு , இந்திரா காந்தியின் நினைவிடமாக மாற்றப்பட்டது. பழைய நினைவுகளிலிருந்து விலகிச் செல்ல விரும்பியதால், ராஜீவ் காந்தி, ஒரு புதிய வீட்டைத் தேடிக்கொண்டிருந்தார்.

பிரதமரின் பாதுகாப்பிற்கு தனிப்பட்ட சிறப்பு ஏற்பாடு இருக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் கருதினர். இவ்வாறு, 'சிறப்பு பாதுகாப்புக் குழு' நடைமுறைக்கு வந்தது. பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பிரதமர் மாளிகையில் தங்க வைக்க, இப்போது பெரிய இடம் தேவையாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு 7 ரேஸ் கோர்ஸ் சாலை (தற்போது லோக் கல்யாண் மார்க்) இல்லம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த இடம் உண்மையில் பல பங்களாக்கள் உள்ள வளாகமாகும். அப்போதிலிருந்து இது இந்தியப் பிரதமரின் 'அதிகாரபூர்வ முகவரி'.யாக உள்ளது.

வி. பி. சிங் பிரதமரானபோது, ​​இது பிரதமரின் உத்தியோகபூர்வ மற்றும் நிரந்தர இல்லமாக மாறியது.

7, லோக் கல்யாண் மார்க்

பிரதமர் இல்லம்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம் ராவ், இந்திர குமார் குஜ்ரால், எச். டி.தேவகெளடா, அடல் பிஹாரி வாஜ்பாயி, மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்ந்திர மோதியின் இல்லமாக அது இருந்துவருகிறது.

இந்த குடியிருப்பு ஐந்து பங்களாக்களின் வளாகமாகும் - பங்களா எண் 1, 3, 5, 7 மற்றும் 9.

தற்போது பிரதமரின் இல்லம் உயரமான கான்கிரீட் சுவர்களால் சூழப்பட்டுள்ளது, அதன்மீது வட்ட வடிவிலான உயரமான முள்வேலி பங்களாவைச்சுற்றியும் உள்ளது.

சுவரைச் சுற்றி, பாதுகாப்புப் பணியாளர்களுக்கான கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. எஸ்பிஜி தவிர, சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்பை கவனித்துக்கொள்கின்றன.

ராஜீவ் காந்தி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஐந்தாவது எண் பங்களாவில் வசித்து வந்தார். பின்னர் தேவை ஏற்ப்பட்டதால் கூடுதல் பங்களாக்கள் சேர்க்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உளவுத்துறை பணியகம், அவ்வப்போது சிறப்பு பாதுகாப்புக் குழுவுக்கு உளவுத்தகவல்களை வழங்குகிறது. பல்வேறு வகையான பாதுகாப்பு மதிப்பாய்வுகள் இந்த சிறப்பு பாதுகாப்புக் குழுவால் தவறாமல் செய்யப்படுகின்றன. இது எப்போதுமே 'நடந்துகொண்டிருக்கும்' செயல்முறையாகும்.

"ஒவ்வொரு பங்களாவிலும் சராசரியாக ஐந்து அறைகள் உள்ளன. அவை ஆங்கிலேயர் காலத்திற்கேற்ப விசாலமானவை. இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றாலும் அது அடிப்படையில் பூகம்பத்தை தாக்குப்பிடிக்கக் கூடியது அல்ல," என பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்த குஜராத்தின் ஒரு தலைவர் குறிப்பிட்டார்.

"பிரதமர் அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வருகை தருகிறார்கள். பிரதமர் வசிக்கும் பங்களாவில் நம்பகமான ஊழியர்கள் மட்டுமே தங்கியுள்ளனர். இதன் பொருள் மோதி மட்டுமல்ல, எந்தவொரு பிரதமரும் எளிதாகவும் ரகசியமாகவும் மக்களை சந்திக்க முடியும் மற்றும் ரகசியத்தை பராமரிக்க முடியும்." என்கிறார் அவர்.

"இருப்பினும், பிரதமரின் இல்லத்திற்குள் நுழைவது எளிதானது அல்ல. பிரதமரின் தனிப்பட்ட செயலாளரால் பட்டியலிடப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்கள் வரும்போது, பங்களா எண் 9 இல் உள்ள எஸ்பிஜி வரவேற்பறையில் அவர்களின் பெயர்கள், பட்டியலில் சரிபார்க்கப்படுகிறது,"

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பின்னர் அவர்கள் சிறப்பு எஸ்.பி.ஜி வாகனத்தில் பிரதமரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பிரதம மந்திரி பங்களா எண் 5 இல் வசிக்கிறார். அங்கு வாஜ்பாய் மற்றும் ராஜீவ் காந்தி முன்னர் வசித்து வந்தனர். டாக்டர் மன்மோகன் சிங் பங்களா எண் மூன்றில் இருந்தார்.

சில நாடுகளில், நாட்டின் தலைவரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது, ஆனால் இந்தியாவில் இது அப்படி இல்லை. பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெற்கு ப்ளாக்கில் அமைந்துள்ளது.

பிரதமரின் இல்லத்திற்கு தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் வழங்கல் ஒருபோதும் தடைபடக்கூடாது என்பது உறுதிசெய்யப்படுகிறது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஊழியர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொண்ட ஒரு தீவிர சிகிச்சை பிரிவும் அங்கு உள்ளது. இது தவிர ஆம்புலன்சும் எப்போதுமே அங்கு நிற்கிறது.

50 க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள், பியூன்கள், எலக்ட்ரீசியன்கள் மற்றும் பிளம்பர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்.

அவர்கள் பணிக்குவரும்போது முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள். அவர்களை பணியமர்த்துவதற்கு முன், அவர்களின் பின்னணியும் சரிபார்க்கப்படுகிறது.

" பிரதமர் நரேந்திர மோதியின் வருகைக்குப் பிறகு 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை பார்க்கிறேன். இதற்கு முன் இதை கற்பனை செய்வதுகூடக் கடினம். பிரதமர் அல்லது பார்வையாளர்களின் க்ளோசப் காட்சிகள் மட்டுமே வெளியிடப்பட்டன. சுற்றியுள்ள பின்னணி பற்றிய விவரங்கள் தெரியாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது," என டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தெரிவிக்கிறார்.

" தற்போது பிரதமர் யோகா செய்யும் வீடியோ அல்லது தோட்டத்தில் அவரது தாயார் ஹீரா பென்னின் வீடியோ அல்லது அக்ஷய் குமார் உடனான நேர்காணல் போன்ற எல்லா வீடியோக்களிலும் பங்களா வளாகத்தில் என்ன இருக்கிறது என்பதை நாம் வீடியோவில் பார்க்க முடிகிறது. இதை முன்பு கற்பனை செய்வதுகூடக் கடினம்,"என்கிறார் அவர்.

2016 செப்டம்பருக்கு முன்னர் இந்த குடியிருப்பு 7 ரேஸ் கோர்ஸ் சாலை என்று அழைக்கப்பட்டது. நரேந்திர மோதியின் முதல் பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்த சாலைக்கு 'லோக் கல்யாண் மார்க்' என மறுபெயர் சூட்டப்பட்டது.

புதிய வீடு, புதிய அலுவலகம்

இந்திய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அஹமதாபாதைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் டாக்டர் பிமல் படேலின் நிறுவனம், மத்திய டெல்லிக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

2002 ல் பூகம்பத்தால் பேரழிவுக்கு உள்ளான புஜ் நகரத்தின் புனரமைப்பின் போது பிமல் பட்டேல், நரேந்திர மோதியின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.

பின்னர் அவர் மோதியின் கனவுத் திட்டமான சபர்மதி ரிவர் ஃபிரண்ட் மற்றும் மோதியின் தொகுதியான வாராணசியில் 'காசி விஸ்வநாத் காரிடார்' திட்டத்திலும், பணியாற்றினார். அவருக்கு 2019 ஆம் ஆண்டில் மோதி அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மத்திய விஸ்டா திட்டத்தின் விவரங்கள் மே மாத தொடக்கத்தில் வெளிவரத் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோதியின் புதிய குடியிருப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"பிரதமரின் புதிய குடியிருப்புக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்புகிறது." என நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கடந்த வாரம் தெளிவுபடுத்தினார்.

சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவுக்கு முன்னர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை முடிக்க அரசு விரும்புகிறது. கட்டிடத்தின் ஆயுட்காலம் 150 முதல் 200 ஆண்டுகள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. மரங்கள் வெட்டப்படவில்லை. ஆனால் வேறு இடங்களில் மறுநடவு செய்யப்படுகின்றன.

அமைச்சர் பூரி சொல்வது சரியாக இருக்கலாம். ஆனாலும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சென்ட்ரல் விஸ்டாவின் நடப்பு கட்டத்தில் ராஜ்பத்தில் (ஒவ்வொரு ஜனவரி 26ஆம் தேதியும் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் சாலை). மொத்தம் ஒன்பது கட்டிடங்கள் (ஒரு புறத்தில் ஐந்து மற்றும் மறுபுறம் நான்கு) கட்டப்படும். கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று நிலத்தடி பாதை வழியாக இணைக்கப்படும். கட்டிடங்களின் உயரம் இந்தியா கேட்டை விட குறைவாக இருக்கும்.

பிரதமரின் புதிய இல்லத்தின் விவரங்கள் குறித்து வடிவமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் மெளனமாக உள்ளனர்.

இருப்பினும், தகவலறிந்த பல்வேறு வட்டாரங்கள் மற்றும் ஊடக அறிக்கைகளிலிருந்து சில விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி புதிய குடியிருப்பு வளாகத்தில் ஆதரவு ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். மினி பி.எம்.ஓ., சந்திப்பு அறை, புல்வெளி, அவசர மருத்துவ செயல்முறை மற்றும் சிறிய தியேட்டர் போன்றவையும் அங்கு இருக்கும்.

இது தவிர உள்நாட்டு அல்லது வெளிநாட்டு விருந்தினர்களுக்கான விழாக்களில் 200 - 300 பேர் கலந்துகொள்ளக்கூடிய பெரிய அரங்குகளும் இருக்கும்.

பிரதமரின் பாதுகாப்பு வாகனப் படையணி மற்றும் சந்திக்கவரும் அமைச்சர்கள், விருந்தினர்களின் வாகனங்களுக்கான தனி பார்க்கிங் ஏற்பாடுகள் இருக்கும். புதிய இல்லம் நிலநடுக்கத்தை தாங்கக்கூடியதாக இருக்கும்.

புதிய குடியிருப்பு , தெற்கு ப்ளாக்கிற்கு அருகில் அமைந்திருக்கும். இதனால் தற்போதுள்ள பி.எம்.ஓவை நிலத்தடி பாதை மூலம் இணைக்க முடியும். இது பிரதமர் அல்லது வி.ஐ.பி.க்கள் நேரடியாக அங்கு செல்ல முடிவதை உறுதி செய்யும். சாலை வழியாக செல்லத்தேவை இருக்காது.

வடக்கு பிளாக் அருகே குடியரசு துணைத்தலைவரின் புதிய இல்லம் இருக்கும். இந்த இரண்டு ப்ளாக்குகளில், தற்போது பல மத்திய அமைச்சகங்கள், ராணுவ மற்றும் கடற்படை தலைமையகங்கள் உள்ளன. அவை புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்படும். மேலும் இந்த ப்ளாக்குகள் பொது அருங்காட்சியகங்களாக மாற்றப்படும்.

ரைசினா ஹில்ஸில் உள்ள குடியர்சுத்தலைவர் மாளிகை (முன்னர் வைஸ்ராய் ஹவுஸ்) அப்படியே இருக்கும். இருப்பினும், பூகம்பத்தின் தாக்கம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போதெல்லாம், பொதுமக்களுக்கு ஏராளமான அசெளகரியங்கள் ஏற்படுகின்றன, ஏனெனில் குடியரசுத்தலைவர், குடியரசுத்துணைத்தலைவர் , பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை தலைவர், அமைச்சர்கள் அல்லது முதலமைச்சர்களின் வாகன அணிகள் செல்லும்போது சாலைகளில் பல கட்டுப்பாடுகள் அமல்செய்யப்படுகின்றன.

பிரதமர் தற்போது சிறப்பு பாதுகாப்பு குழுவின் (SPG) பாதுகாப்பின் கீழ் உள்ளார். புதிய மத்திய விஸ்டா திட்டத்தில் இந்த அமைப்புக்கான சிறப்பு அலுவலகமும் அமைக்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர்

பட மூலாதாரம், Getty Images

அபாய மதிப்பீட்டிற்குப் பிறகு வேறு சில மூத்த அமைச்சர்களுக்கும் இதேபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியின் மிகவும் பசுமையான பகுதி லுடியன்ஸ் மண்டலம். லுடியன்ஸ் டெல்லியில் சுமார் 70 பங்களாக்கள் அமைச்சர்கள் மற்றும் பிற வி.ஐ.பி.களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அவை மத்திய பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகின்றன.

புதிய குடியிருப்பாளர்கள் பங்களாவின் ஃபர்னீச்சர்கள் அல்லது உள் வடிவமைப்பில் சிறிய அல்லது பெரிய மாற்றங்களை பரிந்துரைக்கின்றனர். பின்னர் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது ஒருவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அல்லது புது டெல்லி ரயில் நிலையத்திற்கு செல்ல விரும்பினால், அவர் நேரடியாக செல்வதற்கு பதிலாக டால்கட்டோரா சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளது. அத்தகையவர்களுக்கு சென்ட்ரல் விஸ்டா , போக்குவரத்தை எளிதாக்கும்.

தற்போது​​பிரதமரின் மெய்க்காப்பாளர்கள், ராணுவம், துணை ராணுவப் படை மற்றும் மத்திய போலிஸ் படையியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, சிறப்புப் பயிற்சிக்குப் பின்னர் தற்காலிக அடிப்படையில் எஸ்.பி.ஜி.க்கு அனுப்பப்படுகிறார்கள்.

முன்னதாக, முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே அவர்களுக்கு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏற்பாட்டின் கீழ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மோதி அரசு எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் செய்தது. இப்போது நடப்பு பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக மோதியை விமர்சித்த காங்கிரஸ் , காந்தி குடும்பத்தை அவருக்குப் பிடிக்காது என்று சாடியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :