கொரோனா காலத்தில் தமிழகத்தில் நடந்த 318 குழந்தை திருமணங்கள் - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்

கீதா ஜீவன்

பட மூலாதாரம், GEETHA JEEVAN FB

படக்குறிப்பு, அமைச்சர் கீதா ஜீவன்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`குழந்தைத் திருமணங்களை ஊக்குவிப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேநேரம், `குழந்தைகளின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் செயலிழந்து விட்டன' என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள். உண்மையில் என்ன நடக்கிறது?

கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. இந்த காலகட்டத்தில் 40 சதவிகிதம் வரையில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இதனைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் கடந்த 31ஆம் தேதி அரசு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில், மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், 1098 சைல்டு லைன் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், `குழந்தைத் திருமணங்களை நடத்துகிறவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய திருமணத்தில் கலந்து கொள்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என எச்சரித்தார்.

318 குழந்தைத் திருமணங்கள்

கீதா ஜீவன்

பட மூலாதாரம், Geetha Jeevan FB

அமைச்சரின் எச்சரிக்கைக்குக் காரணம், தன்னார்வ குழந்தைகள் அமைப்பான சி.ஆர்.ஒய் (CRY) மேற்கொண்ட ஆய்வுகள்தான்.

இந்த ஆய்வில், 2020 மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சேலம், தருமபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியின கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடந்துள்ளது எனவும் இந்தப் பகுதிகளில் மட்டும் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், 2019 மே மாதம் சேலம் மாவட்டத்தில் 60 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அதுவே, 2020 மே மாதம் 98 ஆக உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 2019 மே மாதம் 150 குழந்தைத் திருமணங்களும் 2020 மே மாதத்தில் 192 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. தருமபுரியில் 11.1 சதவிதமும் சேலத்தில் 10.9 சதவிகிதமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக சி.ஆர்.ஓய் அமைப்பின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

``கொரோனா பரவலால் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மைதான். பொதுவாகவே, தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. சி.ஆர்.ஒய் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, முகூர்த்த நாள்களில் இந்தத் திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக எந்த ஆணவங்களும் முறையாக இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் (NCRB) குழந்தைத் திருமணம் நடைபெற்று, அதன்மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே அங்கு உள்ளன.

இயங்காத இணையத்தளம்

சைல்டு ஹெல்ப்லைன்

பட மூலாதாரம், jeevajyothi.org

இதுதவிர, சைல்ட் ஹெல்ப்லைன் 1098 என்ற எண்ணுக்கு வந்த அழைப்புகளில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டது தொடர்பான தகவல்கள் வந்துள்ளன. அதாவது, மே 2020 முதல் டிசம்பர் 2020 வரையில் 1,456 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது. அதாவது, இந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது என்பதோடு தகவல் முடிந்துவிடும். அதன்பிறகு வேறு எங்காவது அந்தச் சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட்டதா என்ற தகவல்கள் எதுவும் இருப்பதில்லை," என்கிறார் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன்.

தேவநயன்

பட மூலாதாரம், A. Devanayan

படக்குறிப்பு, அ. தேவநயன்

தொடந்து பிபிசி தமிழுக்காக சில தகவல்களைப் பட்டியலிட்டார். ``குழந்தைகள் காணாமல் போவது, தத்தெடுப்பு, அவர்களுக்கான பாதுகாப்பு மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியின் இருப்பிடம் ஆகியவை தொடர்பாக கூகுளில் தேடினால் சரிவர பதில் கிடைப்பதில்லை. இதுதொடர்பான, தகவல்களை சமூக பாதுகாப்புத் துறை கையாண்டு வருகிறது. ஆனால், இவர்களின் இணையத்தளம் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கவில்லை. இந்தளவுக்குத்தான் தமிழ்நாட்டில் சமூக நலத்துறை இயங்கி வருகிறது. இந்த இணையத்தளத்தைப் பராமரிக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், பெண் குழந்தைகள் என்றாலே சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் சில குழுக்களிடம் அதிகரித்து வருகிறது.

முகூர்த்த தினங்களே இலக்கு

குழந்தை திருமணம்

பட மூலாதாரம், Getty Images

கிராமப்புறங்ஙகளில் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிக்கூடங்கள் இருக்கும். மேல் படிப்புக்கு அனுப்பினால் காதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பெற்றோரிடம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஏராளமான ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. அடுத்ததாக, பெண் குழந்தைகள் அதிகம் படித்துவிட்டால் அதற்கேற்ற வரன்கள் கிடைக்காது என்ற எண்ணமும் உள்ளது.

வயதுக்கு வந்து விட்டதாலே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் சில பெற்றோரிடம் உள்ளன. இதில், 18 வயது நிறைவடைந்த பிறகுதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற மனநிலை பழங்குடிகளிடம் இருப்பதில்லை.

கடந்த முகூர்த்த தினத்தில் திருவண்ணாமலையில் ஒரேநாளில் 14 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 42 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். குழந்தைத் திருமணத்தைப் பொறுத்தவரையில், `என் பாட்டி 12 வயதில் திருமணம் செய்யவில்லையா?' என்ற காரணத்தை முன்வைக்கின்றனர்.

`அந்தப் பாட்டிக்குப் பிறந்த குழந்தைகளில் எத்தனை உயிரோடு இருந்தன?' என்பதற்கு அவர்களிடம் பதில் இருப்பதில்லை. சிறு வயதில் திருமணம் நடைபெறும்போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் பிறப்பதில்லை என்பதுதான் மருத்துவ ரீதியிலான உண்மை.

`தாலிக்குத் தங்கம்' என அரசு அறிவிப்பதுகூட மறைமுக வரதட்சணை தான். ஒரு பெண் உயர்கல்வி படித்து வருவதற்கும் தொழில் முனைவோராக வருவதற்கும் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் ஆராய வேண்டும். மலைவாழ் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் வருவதில்லை. அங்கு குழந்தைகளை படிக்க வைக்கும் முயற்சிகளும் நடப்பதில்லை. அவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளின் நிலையும் கவலைக்குரியதாக உள்ளது," என்கிறார்.

ஆவணங்கள் எங்கே?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மேலும், `` கொரோனா காலகட்டத்தில் பள்ளிக் கூடங்கள் இயங்காததால் மாணவர்களோடு ஆசிரியர்களுக்குத் தொடர்பில்லாமல் போய்விட்டது. தொலைபேசி வாயிலாகவும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. அந்தக் குழந்தைகள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை.

ஒவ்வொரு பேரிடருக்குப் பின்னரும் குழந்தைத் திருமணம், குழந்தைக் கடத்தல் போன்றவை அதிகரித்துள்ளன. சுனாமிக்குப் பின்னரும் அவை அதிகரித்தன. இந்தமுறை அனைவருக்குமான பேரிடராக கொரோனா வந்துள்ளது.

இதனால் கோவில்களில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பதால் சிறு சிறு கோவில்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்ற ஒன்று உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, திருமணத்தை ஏற்பாடு செய்த தரகர், அழைப்பிதழ் அச்சடித்தோர் உள்பட அனைவரையும் கைது செய்யலாம். ஆனால், இந்தப் பிரிவுகளின்கீழ் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை" என்கிறார்.

`மாவட்டங்களில் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர் என்றொருவர் இருக்கிறாரே?' என்றோம்.

``ஆமாம். ஆனால், மாவட்ட சமூக நல அலுவலரின் கூடுதல் பணியாகவே இது இருக்கிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதற்கென தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் இலவச பொருள்களை வழங்கும் பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதால், இதை அவர்கள் ஒரு பணியாகவே பார்ப்பதில்லை.

இதனை முறையாக கண்காணிப்பதும் இல்லை. 2012-13 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மிகப் பெரிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

4 சட்டங்கள்; 53 லட்சம் நிதி

நீதிமன்றம்

பட மூலாதாரம், TWITTER

அதன்படி கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராம அளவில் அந்தந்த ஊராட்சித் தலைவர் தலைவராகவும் ஆசிரியர், கிராம செவிலியர், அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் சேர்ந்து இந்தக் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

`அந்தந்த கிராமங்களில் உள்ள குழந்தைகள் சரியாக பள்ளிக்குச் செல்கிறார்களா?' என ஆண்டுக்கு 3 குழு விவாதங்களை நடத்த வேண்டும். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 2 அறிக்கைகளை அனுப்ப வேண்டும். ஆனால், இந்த கிராமக் குழந்தைகள் பாதுகாப்புக் குழு இயங்கவே இல்லை. ஒன்றிய அளவிலும் வட்டார அளவிலும் குழு உள்ளது என்ற தகவல் அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது.

இதனைக் கண்காணிக்கும் அமைப்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (unit) உள்ளது. இவர்கள் எதாவது செய்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இது ஒரு நல்ல திட்டம். இது இயங்காததால் அனைத்தும் முடங்கிவிட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரும், எதாவது ஒரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நேரில் சென்று பார்ப்பார்கள். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுப்பதில்லை. குழந்தைகள் பாதுகாப்புக்கான அமைப்புகளிலும், நிபுணத்துவம் பெற்றவர்கள் யாரும் இருப்பதில்லை.

குறிப்பாக, இதனை ஒரு வேலையாக அவர்கள் பார்ப்பதில்லை. சென்னை பூந்தமல்லியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இது, குழந்தைகளின் நலனைக் கண்காணிக்கும் முக்கிய அமைப்பாக உள்ளது. போக்சோ சட்டம், கட்டாய கல்வி உரிமை சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், இளம் சிறார் நீதிச் சட்டம் ஆகிய 4 முக்கிய சட்டங்களைக் கண்காணிக்கிறது. இந்த அமைப்புக்கு ஒரு வழக்கறிஞர்கூட கிடையாது. ஆவணக் காப்பகம் கிடையாது.

உறுப்பினர்கள் உட்கார்வதற்கு அறையும் கிடையாது, ஆலோசகர்களும் இல்லை. ஆனால், இந்த அமைப்பின் செலவுக்கு 53 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

ராஜஸ்தான், பிகாரை விட மோசமா?

குழந்தை திருமணம்

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

கடந்த ஜனவரி மாதம் இந்த அமைப்புக்குத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமித்துள்ளனர். இதன் உறுப்பினர்களாக அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர்.

இவர்கள் எப்படி கண்காணிப்பார்கள் எனத் தெரியவில்லை? இதே அமைப்புக்கு கேரளாவில் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பது தொடர்பான தகவல் வந்ததும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், தன்னிச்சையாக அந்த வழக்கை கையில் எடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அவரும் ஆணையத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், பீகாரைவிடவும் தமிழகத்தில் அவலநிலை நிலவுகிறது" என்கிறார்.

மேலும், `` அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் குழந்தைகள் தொடர்பான விவரங்கள் உள்ளன. இதில், ஏழாம் வகுப்புக்கு மேல் படிக்கும் குழந்தைகள் எங்கே உள்ளனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். கிராமக் குழுக்களை முறைப்படுத்தி மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். குழந்தைத் திருமணம் என்பது பாலின சமத்துவத்துக்கான பிரச்னை. குழந்தைத் திருமணம் என்பதை சட்டப்படி குற்றம் என்பதை அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் சட்டத்தை அமலாக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

இவர்கள் வாக்குவங்கியாக இல்லாததால்தான் எங்குமே பேசப்படுவதில்லை. குழந்தைகளுக்கான நிலைக்குழு ஒன்று சட்டமன்றத்தில் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், திருமணத்துக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது. இவர்களின் நலனுக்காக பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு 3 லட்ச ரூபாயை அரசு கொடுக்கிறது. இது வரவேற்புக்குரியதுதான் என்றாலும் ஆபத்தானது.

இந்தக் குழந்தைக்கு படிப்பு முழுவதையும் இலவசமாக வழங்குவதை அரசு கண்காணிக்க வேண்டும். அதேபோல், குழந்தைகள் பாதுகாப்புக்கான அமைப்புகள் அனைத்தும் துண்டு துண்டாக உள்ளன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கொண்டு வந்தால் மட்டுமே குழந்தைகளுக்கான எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியும்," என்கிறார்.

ஆந்திர எல்லைகளில் அதிகம்

குழந்தை திருமணம்

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாண்டு வரும் வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``திருவள்ளூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகப்படியாக நடக்கின்றன. குறிப்பாக, ஆந்திர எல்லையையொட்டிய மாநிலங்களில் இது அதிகமாக நடக்கிறது. தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் போதும் என்ற எண்ணம், இடைநிலை சமூகங்களில் அதிகப்படியாக உள்ளது. திருத்தணி உள்பட சில பகுதிகளில் 14, 15 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பள்ளிக்குத் தாலிக் கயிற்றோடு வந்த சிறுமிகளை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் நலனில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார்.

மேலும், `` குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. குழந்தைத் திருமணங்களை பொறுத்தவரையில், போக்சோ சட்டத்தில் பாலியல் வன்புணர்வு என வந்தாலும் திருமணத்தை அடுத்த உறவாகத்தான் இது பார்க்கப்படுகிறது. சட்டமும் நடைமுறையும் வேறு வேறாக உள்ளன. இது தவறு எனத் தெரியாமலேயே மக்கள் செய்கிறார்கள்.

`அரசு என்ன சொல்வது, நாளை எனக்குப் பிரச்னை வந்தால் அரசா பார்த்துக் கொள்ளும்?' என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான செயல்களைக் கண்காணிக்க வேண்டும். வெறுமனே சட்டத்தை மட்டும் சுட்டிக்காட்டி இதனை நிறுத்த முடியாது" என்கிறார் கண்ணதாசன்.

அமைச்சர் சொல்வது என்ன?

`அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?' என தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதக் கண்காணிப்பும் இல்லாததால், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. தற்போது கிராம அளவிலான குழுக்களை இயங்க வைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவை சிறப்பாகச் செயல்பட வைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. எங்கள் துறையின் சமூக நல அலுவலர்தான், குழந்தைத் திருமண தடுப்பு அலுவலராக இருக்கிறார். அவர்களிடம், 1098, 181 ஆகியவற்றுக்கு வரும் அழைப்புகளை ஏற்று உடனுக்குடன் சம்பவ இடத்துக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளோம். இதன்பிறகு சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு அறிக்கை அனுப்பி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் நிகழ்வது தடுக்கப்படும் எனக் கூறியுள்ளோம்," என்கிறார்.

`குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர் பணி என்பது சமூக நல அலுவலருக்கு கூடுதலாகத்தானே ஒதுக்கப்படுகிறது?' என்றோம்.

``ஆமாம். ஆனால், எந்த வேலையையும் கடந்த பத்தாண்டுகளாக ஒழுங்காக செய்யவில்லையே. குடும்ப வன்முறைச் சட்டம் உள்பட அனைத்தையும் கையில் எடுத்து செயல்படுத்த இருக்கிறோம். `பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. 2006 முதல் 2011 வரையில் அனைத்தும் சரியாக நடந்தது. தற்போது எங்களிடம் இருக்கின்ற கட்டமைப்பை முறையாகச் செயல்பட வைக்கும் பணிகளில் இறங்கியுள்ளோம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிடும்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :