You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆம்போடெரிசின் பி: தமிழ்நாட்டில் கருப்புப் பூஞ்சை மருந்து விநியோகம் முறைப்படி நடக்கிறதா?
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் கொரோனா, கருப்புப் பூஞ்சை நோய்களுக்கு மருந்துகளை அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
`கருப்புப் பூஞ்சை தாக்குதலால் இளம் வயதினரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆம்போடெரிசின் - பி மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது' என்கின்றனர் மருத்துவர்கள். என்ன நடக்கிறது அரசு மருத்துவமனைகளில்?
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. அதேநேரம், கோவை மாவட்டத்தில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது வரையில் 1,800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைத் தவிர அரசு மருத்துவமனை வாயிலில் காத்திருந்த நோயாளிகளுக்கு அரசுக் கலைக் கல்லூரியில் 200 படுக்கைகளை ஏற்பாடு செய்து கொடுத்ததால், நோயாளிகள் காத்திருக்கும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் `ஜீரோ டிலே வார்டு' முயற்சிக்குப் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேநேரம், கோவை மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு தனிக்கவனம் எடுத்து வருகிறது. இதற்காக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கோவை மாவட்டத்தில் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். ``கோவையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அதற்கேற்ப மருத்துவப் பணியாளர்கள் இல்லை. சொல்லப் போனால், நிலைமை படுமோசமாக உள்ளது. அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 33 செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களும் தங்களைப் பரிசோதனை செய்து கொள்வதற்குக்கூட நேரமில்லாமல் தவிக்கின்றனர்.
கை கொடுக்கும் நன்கொடைகள்!
கையுறை, பிபிஇ கிட், மாஸ்க் உள்பட அனைத்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் அரசிடம் எதிர்பார்க்காமல் நன்கொடையாக பெற்று வருவதால் எந்தவித சிரமமும் ஏற்படாமல் உள்ளது. இதுவரையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை நன்கொடையாக வரவு வைத்திருக்கிறோம். அதேநேரம் அத்தியாவசிய மருந்து பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது" என்கிறார் கோவை அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், "கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு கருப்பு பூஞ்சை தாக்குதலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ரெம்டெசிவரை தொடர்ந்து ஆம்போடெரிசினுக்கு மக்கள் அலைமோதும் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து சிலருக்கு `மியுகோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கண் பார்வை பறிபோவதோடு உயிருக்கும் ஆபத்தான சூழல் ஏற்படும். இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு நரம்பில் தொடர்ந்து 3 வாரங்கள் வரையில் ஊசி போட வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்காக 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மருந்து இல்லாததால் இவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை.
700 குப்பிகளில் கோவைக்கு 100
இந்நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசிடம் இருந்து கடந்த 27 ஆம் தேதி 700 ஆம்போடெரிசின் பி மருந்துக் குப்பிகள், மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்துக்கு வந்துள்ளன. இதில், 100 குப்பிகளை கோவை அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கியுள்ளனர். அதிலும், தற்போது 50 குப்பிகளைத்தான் ஒதுக்கியுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது இது மிகவும் குறைவுதான்.
இருப்பினும் இந்தளவுக்கு மருந்துகள் வந்ததை வரப்பிரசாதமாகப் பார்க்கிறோம். சென்னை உள்பட பல நகரங்களில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு என வயது குறைந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், `கள்ளச்சந்தையில் ஆம்போடெரிசின் கிடைக்குமா?' எனப் பலரும் கேட்டு வருகின்றனர். இந்த மருந்தை போதுமான அளவுக்குக் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பூஞ்சை தாக்குதல் எதனால் வருகிறது என்பதை ஆராய்வதற்கு தமிழக அரசு தனியாக கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைக்கேற்ப கருப்பு பூஞ்சை தாக்குதலைத் தடுக்கும் வேலைகளில் அரசு கவனம் செலுத்த உள்ளது" என்கிறார்.
தனியாருக்கு டொசிலிசுமேப் மருந்தா?
மேலும், `` தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வருகின்றன. கோவிட் நோயாளிகளுக்கு கடைசிக் கட்டத்தில் டொசிலிசுமேப் (Tocilizumab) என்ற மருந்தைக் கொடுக்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் இருந்தாலும் இறுதிக்கட்டத்தில் உயிர் காக்கும் மருந்தாக இதனைப் பார்க்கின்றனர்.
அண்மையில் மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்துக்கு 150 டொசிலிசுமேப் குப்பிகள் 400 எம்.ஜி என்ற அளவில் வந்தன. இதனை தனியார் மருத்துவமனைகளின் தேவைக்காக அனுப்பிவிட்டனர். அரசிடம் இருந்து தலா 38,500 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்ட இந்த மருந்துக் குப்பியானது, கள்ளச்சந்தையில் 2 லட்ச ரூபாய் வரையில் விலை போகிறது.
கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு 80 எம்.ஜி என்ற அளவில் 1,500 டொசிலிசுமேப் மருந்துக் குப்பிகள் வந்துள்ளன. இதனை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்" என்கிறார்.
``இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கோவிட் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை 899, 1,200 ரூபாய் எனப் பல்வேறு விலைகளில் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இந்த மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையைக் காட்டிலும் கூடுதலாக அதாவது 3,400 என ஒரே விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசின் மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் விற்கிறது. தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளிடம் அதிகப்படியான பணத்தை வசூலிக்கிறார்கள் என்ற காரணத்தை எடுத்துக் கொண்டாலும் அதிகபட்ச சில்லறை விலையை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார்.
பதுக்கப்படும் மருந்துகள் எவை?
``ரெம்டெசிவரை தமிழக அரசு என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறதோ, அந்த விலையைவிட 5 சதவிகிதம் கூடுதலாக வைத்து விற்பது வழக்கம். அவ்வாறு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடுவது வாடிக்கையாக உள்ளது. மருந்துக்கான தேவையைப் பொறுத்தே இந்த விலையை நாம் பார்க்க வேண்டும். மருந்துக் கம்பெனிகளும் தங்களுக்கு லாபம் இல்லாதவற்றை உற்பத்தி செய்ய மாட்டார்கள்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தைப் பொறுத்தவரையில் கையாளுதல் உள்ளிட்ட சில சேவைகளுக்காக கூடுதலாக கட்டணம் வசூலிப்பது வழக்கம். இந்தத் தொகையும் சுகாதாரத்துறையின் மருந்து பட்ஜெட் கணக்கில் சேரும்" என்கிறார் தமிழக பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.
தொடர்ந்து பேசுகையில், "ரெம்டெசிவிரை என்ன விலைக்கு வாங்கினார்களோ, அதைவிட குறைவான விலைக்கு விற்பதற்கு வாய்ப்பில்லை. விலை அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் தனியார் மருத்துவமனைகள் வேறு இடங்களில் வாங்கிக் கொள்ளலாமே. ஆக்சிஜன் உள்பட எந்தவித வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனியார் மருத்துவமனைகள் நாடகமாடுகின்றன. அதேபோல், டொசுலிசுமேப் மருந்தையெல்லாம் தனியாருக்கு பிரித்துக் கொடுத்துவிடுவதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார்.
மேலும், "சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதால், அத்தியாவசிய மருந்துகளைப் பதுக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. ஸ்டீராய்டு, இன்சுலின், ஹெப்பாரின், ஆம்போடெரிசின் பி, எரித்ரோமைசின், பல்ஸ் ஆக்சிமீட்டர் ஆகியவற்றைப் பதுக்குகின்றனர். இதற்கான தேவைகள் வரும் நாள்களில் அதிகரிக்கலாம் என்பதுதான் பிரதான காரணம். இதனை அரசு முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்" என்கிறார்.
ஆம்போடெரிசின்-பி தேவையா?
இது தொடர்பாக அரசின் கருத்தைப் பெறுவதற்காக, தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். "கோவை மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் தொடர்பான கூட்டத்தில் இருக்கிறார். பிறகு பேசுங்கள்" என்றார் அவரது உதவியாளர் துளசி. இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழக நிர்வாக இயக்குநர் உமாநாத்தை தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.
தொடர்ந்து, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "ஆம்போடெரிசின் பி மருந்து குறித்து தேவையற்ற தகவல்கள் பரவுகின்றன. சிலரால் இந்த மருந்தின் மீது தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே ஆம்போடெரிசின் தேவையில்லை. கொரோனா தொற்றுக்குப் பிறகு சிலருக்கு வரக்கூடிய கருப்பு பூஞ்சை தாக்குதல் புதிய நோய் அல்ல. இது ஏற்கெனவே உள்ளதுதான். ஆம்போடெரிசின் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக நீங்கள் குறிப்பிடும் டொசிலிசுமேப் மருந்து குறித்து பிறகு பேசுகிறேன்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்