You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து தப்ப மதுரை - பெங்களூரு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திருமணம் செய்த தமிழக தம்பதி
கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தப்புவதற்காக, ஒரு விமானத்தையே முன்பதிவு செய்து, அதில் மதுரையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒன்றின் திருமணம் நடத்தப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஞாயிறன்று மதுரையில் இருந்து பெங்களூரு வரை சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் இந்தத் திருமணம் நடந்துள்ளது
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையை விட அதிகமானவர்களைப் பங்கேற்க வைக்கும் நோக்கத்துடன் மதுரையைச் சேர்ந்த ராகேஷ் - தீக்ஷனா தம்பதிகளின் குடும்பத்தினர், திருமணத்தை பறக்கும் விமானம் ஒன்றில் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
நடுவானில் நடந்த இந்தத் திருமண நிகழ்வில் 160க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு பயண முகவர் மூலம் இந்த விமானம் முன்பதிவு செய்யப்பட்டது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் ஸ்பைஸ்ஜெட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்தத் திருமண நிகழ்வின் காணொளி வெளியாகியுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல், ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்பதை அதில் பார்க்க முடிகிறது.
இது தொடர்பாக இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விமானத்தில் பணியில் இருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பணியமர்த்தப்படுவதில் இருந்து உடனடியாக விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிசிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
விமானத்தை முன்பதிவு செய்த குடும்பத்தினரிடம் கோவிட் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முன்னரே தாங்கள் விளக்கியதாகவும் அதை மீறும் வகையிலான எந்த செயலையும் விமானப் பயணத்தின் போது செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்ததாகவும் ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு, கோவிட் விதிகளைப் பற்றி நினைவூட்டிய பின்னரும் பயணிகள் அதைக் கேட்கவில்லை. விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் தனியார் விமான நிறுவன மேலாளர் மகேஷ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன், "வான்வெளியில் இந்த திருமணம் நடைபெற்றது என அறிந்தேன். தனியார் விமான நிறுவன மேலாளரிடம் இதுதொடர்பாக தகுந்த விளக்கம் கேட்டுள்ளேன். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது," என்று கூறினார்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் கருத்துக்களைப் பெற முயன்று வருகிறோம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ்
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய அரசின் அலுவல்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன?
ஆனால் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்று துறைசார் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சமீப காலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தொடங்கியதிலிருந்து மருத்துவமனைகளில் படுக்கைகள், செயற்கை ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.
இது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கூட மயானங்களில் மிகவும் அதிகமான இடப் பற்றாக்குறை நிலவுகிறது.
இறுதிச்சடங்கு செய்யப் பணம் இல்லாத குடும்பத்தினர் சிலர் இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படும் கங்கை நதியின் ஓரம் தங்களது உறவுகளின் உடல்களை புதைத்து சென்றனர் அல்லது கங்கை நதியில் இறந்த உடல்களை வீசிச் சென்றனர்.
இதன் காரணமாக உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறதோ என்று அச்சம் எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
- Super Blood Moon: இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
- மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?
- 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்' - ராகுல் காந்தி
- அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரவேண்டும்: மருத்துவ சங்கம் நோட்டீஸ்
- "இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :