பாஜக அரசுக்கு எதிரான புலனாய்வு செய்தி, பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு: யார் இந்த தருண் தேஜ்பால்?

டெஹல்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அரசியல், புலனாய்வு பத்திரிகையான டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால், 2013ம் ஆண்டு தனது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவா மாநில விசாரணை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

கோவாவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஹல்கா நிகழ்ச்சி ஒன்றில் தமது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாக தேஜ்பால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார் அதன்பின் உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

தேஜ்பால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை தொடர்ந்து மறுத்து வந்தார்.

தீர்ப்பு வெளியானபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடைய உடைந்த வாழ்க்கையை சரி செய்ய முயற்சிக்கிறோம், எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம்," என்று கூறியுள்ளார்.

"கடந்த ஏழரை வருடங்களாக இந்த குற்றச்சாட்டுகளால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொண்டு வந்தோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

வெள்ளியன்று காலை கோவாவில் உள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்று தேஜ்பாலை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தது.

தேஜ்பாலின் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தது காவல்துறை. "அதில் அதிகாரத்தில் இருந்து கொண்டு ஒரு நபரை தவறாக முடக்கியது, தாக்கியது, பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தது" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த தேஜ்பால் தான் நிரபராதி என்று தெரிவித்து வந்தார்.

போராடம்

பட மூலாதாரம், Getty Images

இந்த விசாரணையில் 156 சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன அதில் 70 பேர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

இந்த விசாரணையின்போது பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

யார் இந்த தேஜ்பால்?

இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளராக இருந்த தேஜ்பால் பல்வேறு செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் பணிபுரிந்தபின் 2000ஆம் ஆண்டு டெஹல்கா பத்திரிகையை தொடங்கினார்.

அதன்பிறகு டெல்ஹகா பல புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக `ஸ்டிங் ஆப்ரேஷன்` என்று சொல்லக்கூடிய ரகசியமாக செய்தி சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. டெஹல்காவின் பத்திரிகையாளர்கள் வேறு ஒருவரை போல சென்று ரகசியமாக படம் எடுத்து ஊழல்களை அம்பலமாக்குவர்.

இந்த பத்திரிகை வெளியிட்ட மிகப்பெரிய புலானாய்வு செய்தியான ஆபரேஷன் வெஸ்ட் எண்ட் - 2001ஆம் ஆண்டு வெளியானது. டெஹல்கா பத்திரிகையாளர்கள் ஆயுத விற்பனை டீலர்களை போல வேடமணிந்து லஞ்சம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை வழங்கினர். ராணுவ அதிகாரிகள், பிற அதிகாரிகள் மற்றும் அப்போதைய ஆளுங்கட்சியான பாஜக தலைவர் ஆகியோரும் போலியான ஆயுத ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க லஞ்சம் பெற்று சிக்கிக் கொண்டதாக டெஹல்கா வீடியோக்கள் காட்டின.

தருண் தேஜ்பாலின் செய்திகள் இந்திய அரசுக்கு இடியாக இருந்தது. தேஜ்பாலின் புகழ் அதிகரித்தது. `தி கார்டியன்` பத்திரிக்கை "இந்தியாவின் மரியாதைக்குரிய பத்திரிகையாளர்" என்று இவரைப் பற்றி எழுதியது.

தேஜ்பால் `இந்தியா ஐ என் சி` என்ற வெளியீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ் நைபால் போன்றோர் அவருக்கு நெருக்கமானார்கள்.

மேலும் இவர் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய `தி அல்கெமி ஆஃப் டிசையர்`, சிறந்த வெளிநாட்டு புனைவு இலக்கியத்திற்கான பிரான்ஸின் பிரிக்ஸ் மில்லே பரிசை வென்றது. பாலியல் குறித்த வித்தியாசமான எழுத்துக்களை அங்கீகரிக்கும் `2005 பேட் செக்ஸ்` விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

வழக்கின் விவரம்

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேஜ்பாலுடன் பணிபுரிந்த இளம் பத்திரிகையாளர் தேஜ்பால் லிஃப்டிற்குள் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

"இது தமது தவறான கணிப்பால் ஏற்பட்ட சிக்கல்" என முதலில் தேஜ்பால் கூறியிருந்தார். அதன்பின் "சூழ்நிலைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அது நாம் நம்புகிற மற்றும் போராடுகிற அனைத்துக்கும் எதிரானத துரதிஷ்டவசமான சம்பவமாக மாறியது," என தெரிவித்திருந்தார்.

அந்த வழக்கு பெரிதானது, அதிகாரிகள் சிசிடிவி வீடியோவை பார்க்க வேண்டும் என தேஜ்பால் கோரினார். அப்போது "என்ன நடந்தது என்பது தெளிவாக தெரிந்துவிடும்" என்றார். மேலும் கோவாவில் உள்ள பாஜக அரசால் அவருக்கு எதிராக "அரசியல் நோக்கத்துடன்" புனையப்பட்ட ஒரு வழக்கு இது என தெரிவித்தார்.

2012 டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்த வழக்கு நடைபெற்றதால் இது பெரும் கவனத்தை பெற்றது.

பாலியல் சமத்துவமின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான போக்கு குறித்து பல செய்திகளை பிரசுரித்த டெஹல்கா இருவேறு விதமாக நடந்து கொள்வதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பாஜகவின் இளைஞர் பிரிவான ஏபிவிபியின் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் அவருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டன.

அவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆனால் கோவா உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி முறையீடு செய்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :