You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய நாடாளுமன்ற கட்டட நிதியை தடுப்பூசிக்கு செலவிடவும்: எதிர்கட்சிகள் கோரிக்கை
'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட மத்திய செயலக கட்டடங்களை கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியை கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் ஆகியவற்றை வாங்க செலவிட வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளன.
"கோவிட் - 19 பெருந்தொற்று நமது நாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதப் பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாகவும் இணைந்தும் கடந்த காலத்தில் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக உங்களுடைய அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை அல்லது செய்ய மறுத்துவிட்டது. இது நிலைமையை மோசமாக்கி இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.
இவ்வளவு பெரிய பேரழிவான நிலையில் நாட்டைக் கொண்டுபோய் நிறுத்திய மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இப்போது சுட்டிக்காட்டாமல், நாங்கள் குறிப்பிட்டுள்ள பின்வரும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என உறுதியாகக் கருதுகிறோம்.
1. மத்திய அரசே தடுப்பூசிகளை உள்நாட்டிலும் உலக அளவிலும் மொத்தமாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
2. நாடு முழுவதும் எல்லோருக்குமான இலவச தடுப்பூசித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
3. உள்ளூரில் தடுப்பூசித் தயாரிப்பை அதிகரிக்க கட்டாய உரிமத் திட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.
4. 35,000 கோடி ரூபாயை தடுப்பூசிகளுக்காக செலவழிக்க வேண்டும்.
5. சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள். அதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆக்ஸிஜன் வாங்கவும் தடுப்பூசி வாங்கவும் செலவிடுங்கள்.
6. தனியார் அறக்கட்டளை நிதியில் உள்ள கணக்கில் வராத பணத்தையும் பிஎம்கேர்ஸ் நிதியையும் ஆக்ஸிஜன், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் வாங்கச் செலவிடுங்கள்.
7. வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் அளியுங்கள்.
8. தேவைப்படுபவர்களுக்கு உணவு தானியங்களை விநியோகம் செய்யுங்கள் (ஒரு கோடி டன்னுக்கும் மேற்பட்ட உணவு தானியங்கள் கிடங்குகளில் வீணாகிவருகின்றன).
9. உணவளிக்கும் விவசாயிகளைக் காப்பாற்ற விவசாயச் சீர்த்திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்.
ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது என்பது உங்கள் அலுவலகத்திற்கோ, அரசுக்கோ பழக்கமில்லாதது என்றாலும், இந்தியா மற்றும் அதன் மக்கள் மீது அக்கறையுடன் நாங்கள் முன்வைக்கும் இந்த ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது சிறப்பானதாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.ஜி. தேவேகெளட, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஷரத் பவார், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், ஜம்மு - காஷ்மீர் மக்கள் கூட்டணி தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சீதாராம் எச்சூரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்
- சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி
- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :