You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய இந்திய நாடாளுமன்ற கட்டடம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மற்றும் அதையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான 'சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்'-ஐ தொடங்க இந்திய அரசு காட்டிவரும் தீவிரத்தின் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டுமானத்தைத் தொடங்கக் கூடாது என்று நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
வரும் டிசம்பர் 10ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவால், நரேந்திர மோதியின் நிகழ்ச்சிக்கு தடை எதுவும் இல்லை.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினாலும், கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியாது.
புது டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள, 'சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்'-இல் பல விதி மீறல்கள் இருப்பதாகாவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு இன்று நடந்தது. அப்போது வழக்கு விசாரணை முடியும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மரங்களை வெட்டக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமைந்திருக்கும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.
64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த கட்டடத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தைவிட 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரியது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
- அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: