கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா விண்ணப்பம்

இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப்பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா முதல் விண்ணப்பம்

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நேற்று விண்ணப்பித்து இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாதான் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்து இருக்கும் முதல் இந்திய மருந்து நிறுவனம் ஆகும்.

ஒரு நாளுக்கு முன்புதான், அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், இந்தியாவில் தன் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பித்தது. பிரிட்டன் மற்றும் பஹ்ரைன் நாடுகளில், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து, அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.

கடந்த 02 ஆகஸ்ட் 2020 அன்று, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மனித பரிசோதனைகளுக்கு, இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தற்போது, இந்தியாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதையும், மக்கள் நலனுக்காகவும், கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் விண்ணப்பத்தில் கூறப்பட்டு இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

'தமிழகத்தில் பாஜக தனித்து நிற்க வேண்டும்'

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதால் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எனது கருத்து என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைமைக்கு வருபவர்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற ஒரு கலாசாரத்தை 20 வருடங்களாக உருவாக்கி வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட்டு நாங்கள் 2ஆம் இடத்துக்கு வந்துள்ளோம். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் 2ஆம் இடம் வந்துள்ளோம் என்றும் அவர் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

ஆன்மிக அரசியல் பேசும் ரஜினி அதை விட்டு விடாமல், கருப்பு சட்டை அணியாமல் செய்தால் அவருக்கு எம்ஜிஆரை போல் வெற்றி கிடைக்கும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வீட்டு முன் தகராறு

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் வீடு அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மீது சந்தேகம் கொண்டு போலீசார் மடக்கினார்கள். காரில் பயணித்தவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் முகக் கவசம் அணியவில்லை என்று தெரிகிறது. முகக் கவசம் அணியாமல் எனது காரை ஏன் மடக்கினீர்கள், என்று காரில் வந்தவர் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். முதலமைச்சர் வீடு அருகே இந்த தகராறு நடந்ததால், இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் பறந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்து, இரவு ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவர் நடத்திய விசாரணையில் தகராறு செய்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. துணை ஆணையர் சமாதானம் செய்ததன் பேரில், தகராறில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என தினந்தந்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: