You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா அறிகுறிகள் எல்லாம் இருந்தும் பரிசோதனையில் "நெகட்டிவ்" வருவது ஏன்?
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, கடும் சோர்வு, வயிற்றுப் போக்கு ஆகியவைதான் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பரிசோதனை மூலம்தான் அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடிகிறது.
இரண்டு வகை கொரோனா பரிசோதனைகள் இருக்கின்றன. ஒன்று RT-PCR மற்றொன்று ஆன்டிஜென் எனப்படும் எதிர்ப்பொருள் பரிசோதனை.
உங்களில் யாருக்காவது கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்து, இந்தப் பரிசோதனைகளில் நெகட்டிவ் முடிவு வந்திருக்கிறதா? சிலருக்கு வந்திருக்கலாம். "False Positive" மற்றும் "False Negative" போன்ற சொற்களை மருத்துவர் மூலமாக நீங்கள் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள்.
அனைத்து அறிகுறிகளும் இருந்தபோதும் பரிசோதனை முடிவு மட்டும் நோய்த் தொற்று இல்லை எனக் காட்டுவது ஏன்? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? திரிபு அடைந்த கொரோனா வைரஸ் பரிசோதனைகளில் இருந்து தப்பி விடுகிறதா? சில நிபுணர்களிடம் பேசியதில் இருந்து கிடைத்த பதில்களை இங்கே தருகிறோம்.
RT-PCR பரிசோதனை என்பது என்ன?
Real Time Reverse Transcription Polymerase Chain Reaction என்பதன் சுருக்கம்தான் RT-PCR.
சுருக்கமாக இதை "சளி பரிசோதனை" எனலாம். இதில் மூக்கு அல்லது தொண்டையில் இருந்து பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்படும்.
RT-PCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இந்தப் பரிசோதனையை நம்பகமான முறை என்று கருகிறார்கள்.
பரிசோதனை எப்படி மேற்கொள்ளப்படுகிறது?
RT-PCR பரிசோதனையில், மூக்கு அல்லது தொண்டையில் இருந்து, நுனியில் பஞ்சு கொண்ட ஒரு குச்சி மூலமாக எடுக்கப்பட்ட சளி மாதிரி, திரவம் உள்ள சிறு குழாயில் கரைக்கப்படுகிறது. பஞ்சு மூலம் எடுக்கப்பட்ட சளியில் இருந்த வைரஸ் இப்போது குழாயில் உயிர்ப்பு நிலையில் இருக்கும். அந்தக் குழாய் ஆய்வுக்காக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும்.
அனைத்து அறிகுறிகள் இருந்தபோதும், நெகட்டிவ் முடிவு வருவது ஏன்?
மும்பையில் வசிக்கும் நம்ரதா கோருக்கு 5 நாள்களாக காய்ச்சல் இருந்தது. ஆனால் பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற முடிவு வந்தது.
"எனது உடலில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டபோது, RT-PCR பரிசோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்தது. ஆனால் காய்ச்சலும் இருமலும் குறையவில்லை. மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடர்ந்தார்கள். சில நாள்களுக்குப் பிறகு இன்னொருமுறை பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதியானது"
RT-PCR பரிசோதனை மிகவும் நம்பகமானது என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் சில நேரங்களில் தவறான முடிவுகளைக் காட்டுகிறது.
முக்கியமான அனைத்து அறிகுறிகளும் இருந்தபோதும், பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவுகள் வருவதை "False Negative" என்கிறார் ஃபோர்டிஸ்-ஹிராநந்தினி மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் ஃபரா இன்கலே.
அறிகுறிகள் இருந்தும் நெகட்டிவ் முடிவு வருவதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன?
காய்ச்சல், சளி, இருமல், உடல் வி போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வருவதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருப்பதா மருத்துவர் ஃபரா இன்கலே கூறுகிறார்.
- சளி மாதிரி எடுக்கும் நடைமுறையில் ஏற்படும் சில தவறுகள்
- தவறான முறையில் சளி மாதிரி எடுக்கப்படுவது
- வைரஸ் உயிர்ப்புடன் இருப்பதற்கு தேவையான அளவை விட குறைவான திரவம் இருப்பது
- முறையற்ற வகையில் சளி மாதிரிகள் பரிசோதனைக் கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது
சில நேரங்களில் உடலில் உள்ள வைரஸின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அப்போது அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வரும் வாய்ப்புள்ளது.
"பரிசோதனை மாதிரிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் Cold Chain கட்டமைப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும். எங்கேயாவது வெளிப்புற வெப்பத்தில் சளி மாதிரிகள் வைக்கப்பட்டால் வைரஸ் அதன் திறனை இழந்துவிடும். அப்போது நெகட்டிவ் முடிவு வரும்" என நவி மும்பையில் நுண்ணுயிரியல் நிபுணராகப் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
முறையாகப் பயிற்சி பெறாத ஊழியர்களை சளி மாதிரி எடுக்கும் பணிக்குப் பயன்படுத்தும்போதும் தவறான முடிவுகள் வர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள்
தண்ணீர் குடிப்பதும் சாப்பிடுவதும் முடிவுகளைப் பாதிக்குமா?
பரிசோதனைக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பதும், எதையாவது உண்பதும் பரிசோதனை முடிவைப் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தொற்று இருக்கும் ஒருவருக்கு "இல்லை" என முடிவு வரக்கூடும் என்கிறார்கள்.
"உணவு, தண்ணீர் போன்றவை பரிசோதனை நடைமுறைகளைப் பாதிக்கின்றன. அதனால் சரியான முடிவுகள் கிடைக்காமல் போகும்."
அறிகுறிகள் இருந்து நெகட்டிவ் முடிவு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
"கொரோனா அறிகுறிகள் இருந்து, பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தால், 5 அல்லது 6 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்" என்கிறார் மருத்துவர் இன்கலே.
"முதல் பரிசோதனை முடிவு நெகட்டிவ் வந்த பிறகும், அறிகுறிகள் இருந்தால் சிகிச்சையைத் தொடர வேண்டும். மீண்டும் நெகட்டிவ் வந்தால். CT-Scan மூலமாக அறிகுறிகளைக் கண்டுபிடிக்கலாம்" என ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு இயக்குநர் சந்தீப் கோர் தெரிவித்தார்.
"False Positive" என்பது என்ன?
கொரோனா தொற்று இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வருவதுதான் "False Positive".
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அதில் இருந்து மீண்டு வந்த பிறகும் அவருக்கு தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவு வர வாய்ப்புண்டு. அப்படிப்பட்டவர்களின் உடலில் உயிர்ப்பில்லாத கொரோனோ வைரஸ் இருக்கும். குணமடைந்து ஒரு மாதத்துக்குள்ளாக பரிசோதனை செய்தால், அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவு வரக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
திரிபு அடைந்த கொரோனா RT-PCR பரிசோதனையில் தென்படாதா?
இந்தியாவில் இரட்டைத் திரிபு அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் வேகமான பரவலுக்குக் காரணம் என மகாராஷ்டிரா மாநிலத்தின் தீவிர நடவடிக்கைக் குழு கூறுகிறது. உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அணுக்களால் இந்த வைரஸை கண்டறிய முடியவில்லை என்பதால் அவை வேகமாகப் பரவுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"கொரோனோ வைரஸ் RNA வகையைச் சேர்ந்தது. இவை வேகமாகத் திரிபு அடையக்கூடியவை. பரிசோதனைகளை அதற்கேற்றவாறு மாற்ற வேண்டும். பரிசோதனை உபகரணங்களில் சில திருத்தங்களை அரசு செய்திருக்கிறது," என்கிறார் நவி மும்பையில் பணியாற்றும் நுண்ணுயிரியல் நிபுணர்.
"திரிபு அடைந்த வைரஸ் RT-PCR பரிசோதனையில் தென்படாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதையும் மறுக்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.
"வைரஸின் எந்த மரபணுப் பகுதியை பரிசோதனை மூலம் கண்டறிந்து முடிவைக் கூறுகிறோமோ அந்தப் பகுதியில் வைரஸ் திரிபு அடைந்தால் பரிசோதனைகளில் அது தென்படாது. "False Negative" முடிவுகள் வரும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையான FDA கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதத்திலேயே இதுபற்றி ஆராய்ச்சியாளர்களும் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள். "வைரஸ் திரிபு அடைந்தால், பரிசோதனை முடிவுகள் தவறாக வரக்கூடும்" என அவர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு கூறுவது என்ன?
திரிபு அடைந்த வைரஸ் RT-PCR பரிசோதனையில் தப்பிவிடும் என்பதற்கு மிகக் குறைந்த சாத்தியமே இருப்பதாக மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி கூறியது.
"இந்தியாவில் பயன்படுத்தப்படும் RT-PCR உபகரணம் இரண்டு மரபணுக்களைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் வைரஸ் திரிபு அடைந்தாலும் சோதனையில் தென்படாமல் போகாது. RT-PCR பரிசோதனை துல்லியமானது" என இந்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
அது என்ன HRCT பரிசோதனை?
கொரோனா தொடர்பான HRCT பரிசோதனை பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். High Resolution CT Scan என்பதன் சுருக்கம்தான் அது. X-Ray பரிசோதனையில் புலப்படாமல் போகும் பாதிப்புகளைக் இந்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். நோயாளியின் மார்புப் பகுதியில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை முப்பரிமாண வடிவில் இந்தப் பரிசோதனை காட்டிவிடும்.
நோயாளி தொடர்ந்து இருமினாலோ, மூச்சுத் திணறல் ஏற்பட்டோலோ, ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ இந்தப் பரிசோதனை மூலமாக பாதிப்பின் தீவிரத்தைக் கண்டுபிடிக்கலாம். சிகிச்சையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியவும் இந்தப் பரிசோதனை பயன்படுகிறது என இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவி வங்கேட்கர் கூறுகிறார்.
இந்தப் பரிசோதனையில் சில அபாயங்களும் உண்டு என அவர் எச்சரிக்கிறார். "தேவையில்லாத சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இது காரணமாக அமைந்துவிடும். தீவிரமான பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். கதிர்வீச்சு பாதிப்புக்குளாகும் ஆபத்தும் இதில் இருக்கிறது".
பிற செய்திகள்:
- இராக் கொரோனா மருத்துவமனை தீ விபத்து: ஆக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் பலி
- தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்
- நரேந்திர மோதி உருக்கம்: "கொரோனா வதந்திகளை தவிருங்கள்"
- பேட்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா, அதிரடி காட்டிய ராஜஸ்தான் பவுலர்கள்
- தமிழ்நாடு கொரோனா அலை: ஆக்சிஜன் தேவைப்பட்டால் என்ன செய்வது? ரெம்டிசிவிர் யாருக்கு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: