தமிழ்நாடு கொரோனா அலை: ஆக்சிஜன் தேவைப்பட்டால் என்ன செய்வது? ரெம்டிசிவீர் யாருக்கு?

தமிழ்நாட்டில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அவர்கள் என்ன செய்யவேண்டும்? ரெம்டிசிவீர் மருந்தினை யார் எப்படி பயன்படுத்தவேண்டும்? இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்பட்டால், 104 என்கிற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கக்கூடும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இதனால், ஆக்சிஜன் தேவை ஏற்படுகிற மருத்துவமனைகள் தமிழக அரசின் உதவி எண்ணை அழைத்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரிகள் செல்வதற்கு காவல் துறை உதவியோடு கிரீன் காரிடார் அமைத்துள்ளதாகவும், அந்த வாகனங்கள் செல்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டிசிவீர் - எப்படி எடுத்துக்கொள்வது?

தமிழ்நாட்டில் மக்கள் யாரும் ரெம்டெசிவீர் மருந்தை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக சிலர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ரெம்டிசிவீர் மருந்தை எடுத்துக்கொள்வது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதனை உடனே மக்கள் நிறுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

சென்னை நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 40 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதாக கூறிய அவர், ஆனால், சோதனை செய்துகொள்ளும் பொது மக்கள் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தால் உடனே மருத்துவமனையில் சேரவேண்டும் என்ற எண்ணத்தை கைவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பொது மக்கள் சிலர் இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் வந்து குவிவதால், சென்னை நகரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்றார்.

''சென்னை மாநகராட்சி காய்ச்சல் முகாம் அல்லது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்தவர்கள் சிலர், பாசிட்டிவ் என தெரிந்ததும் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து விடுகிறார்கள்.

உண்மையில் , மக்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக அருகில் உள்ள கோவிட் மருத்துவ முகாமில் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையை பொறுத்துத்தான் அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவையா அல்லது வீட்டு சிகிச்சையிலேயே அவர் குணம் அடைவாரா என தெரிந்து கொள்ளலாம்''என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிக அறிகுறிகள் தெரிந்தால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுக்கலாம் என்று கூறிய ராதாகிருஷ்ணன், சந்தேகங்கள் இருந்தால் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாடு மையத்திற்கு அழைக்கவேண்டும் என்றார்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் (044 46122300/044 25384520) உள்ளவர்கள் அழைப்பவர்களின் கொரோனா சோதனை மற்றும் அறிகுறிகள் பற்றிய விவரங்களை வைத்து என்ன விதமான சிகிச்சை தேவை என ஆலோசித்து உடனே உதவுவார்கள் என்றார் அவர்.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவற்றை பொதுமக்கள் பின்பற்றினால் நோய்த் தொற்று அதிகரிப்பதை கட்டாயமாக குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

கூடுதலான மருத்துவர்களை அரசு நியமித்துள்ளதாகவும், மினி கிளினிக் போன்ற மையங்களில் மருத்துவர்கள் செயல்படுத்துவற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

''தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சைகளைத் தவிர தள்ளி வைக்க வாய்ப்புள்ள அறுவை சிகிச்சைகள் அனைத்தையும் அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளோம். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொது மக்கள் பதற்றமடையவேண்டாம்,''என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: